வெண்ணிற இரவுகள்....!
தூங்கா இரவுகள்
Tuesday, 7 July 2026
Notes From The Last Row == Netflix Series
Tuesday, 12 May 2026
தமிழ்ச்சிறுகதையின் தடங்கள் -1 == ச தமிழ்ச்செல்வன்
தோழர் ச.தமிழ்ச்செல்வன் எழுதி சாகித்ய அகாடெமி விருது பெற்ற " தமிழ்ச்சிறுகதையின் தடங்கள் " படிக்கத் தொடங்கியுள்ளேன். இது முதல் ஐம்பது ஆண்டுகளின் வரலாறு தான். இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு ஒரு ஆகச்சிறந்த தத்துவ பின்புலம் இருக்க வேண்டும், சிறுகதைகளை உதாரணமாக எடுத்து நுட்பமாக எழுதக்கூடியவர்கள் பலர் இருக்கலாம் , மேடைகளில் கதாபாத்திரங்கள் பற்றி விரிவாக நுட்பமாக எழுத்தாளர்கள் பேசலாம் அதெல்லாம் வேறு விடயம்.
ஒரு எழுத்தை அந்தக் காலகட்ட வரலாற்றோடு பொருத்திப்பார்த்து இதெல்லாம் தரம் , இதெல்லாம் தூரமில்லை என்று பிரிப்பதற்கு ஒரு வரலாற்று உணர்ச்சியும் , தத்துவ உணர்ச்சியும், அரசியல் புரிதலும் வேண்டும். சிலர் தோழராக இருக்கலாம் அப்படியிருந்தால் வரலாற்று உணர்வு கிடைக்கும் அது பெருங்கதையாடல் , சிலர் நுட்பமான எழுத்தாளராக இருக்கலாம் மனதின் நுட்பத்தின் உள்ளே சென்று வெளிவரக்கூடியவராக இருக்கலாம். தோழர் இரண்டுமாக இருக்கிறார் என்பதே இந்தப் புத்தகத்தின் சிறப்பு.
தோழர் ஒரே நேரம் வரலாற்று உணர்விருப்பவராக இருக்கிறார் அதே நேரம் நுட்பமான சிறுகதை வடிவங்களைத் தெரிந்த தேர்ந்த வாசகராகவும் அவரே எழுத்தாளராகவும் இருக்கிறார். தோழர் தமிழ்ச் சிறுகதை எழுதுபவர்களை ஏழு விதமாய் பிரிக்கிறார்
1. கலை கலைக்காக எழுதுகிறேன் என்கிற மரபு
2. கலை மக்களுக்காக என்ற இடதுசாரி மரபு
3. திராவிட மரபைச் சேர்ந்த எழுத்தாளர்கள்
4. தலித்திய எழுச்சியால் உருவான எழுத்துக்கள்
5. பெண் எழுத்தாளர்கள்
6. கட்டற்ற பாலியலை எழுதக்கூடியவர்கள்
7. கஷ்டப்பட்டு புதிய திசையில் எழுதுபவர்கள் அவர்கள் எழுத்தை படிப்பதற்கே கொஞ்சம் முயற்சி வேண்டும்
வெளியில் இருக்கும் புறமே கலையைத் தீர்மானிக்கும் திராவிட எழுத்து எப்போது வந்திருக்க முடியும் , இங்கே திராவிட கொள்கைகளும் மரபும் போராட்டக்களமும் வரும்போது அது அப்படியே கலையில் பிரதிபலிக்கும் தானே. அந்தக் கண்ணோட்டத்துடன் ஒரு சிறுகதையின் வரலாறு வரும்போது அதை வரலாற்றுத் தடமென்று சொல்லலாம் .
இப்படி ஒவ்வொரு சிறுகதைக்கு பின்பும் இருக்கும் வரலாற்றுச் சூழலை அந்த எழுத்தாளர் ஏன் அதை எழுதுகிறார் என்று அவர் சொல்கிறார். இப்படி வரலாற்றுடன் இணைத்து புரிந்துகொள்ளும் போது ஒரு முழுமைக் கிடைக்கிறது. தமிழ்ச்செல்வன் போன்ற தோழர்கள் நமக்கு ஒரு பொக்கிஷமாய்த் தெரிகிறார்கள்.
இனி நாங்களுமே ஒரு எழுத்தாளர் அந்த சிறுகதையை எழுதுவதற்கான காரணம் என்ன ? வரலாற்றிலிருந்து அந்தப் படைப்பை அணுக புரிந்துகொள்வோம். இது மாதிரி பெரிய புத்தகங்களுக்கு நோட்ஸ்கள் தேவைப்படும் அது நாளை நாம் எடுத்துபடிக்க உதவும். இந்தப் புத்தகத்துக்கு நிறைய கட்டுரைகள் எழுதலாம் என்று திட்டம் வைத்திருக்கிறேன். குறைவாகக் காண்க
Tuesday, 10 March 2026
ஏன் இதை இப்போது இப்படிப் புரிந்துகொள்ள வேண்டும் == நீங்கள் ரசிகர் என்று நம்பவைக்கப்படுகிறீர்களா ? == பிம்பமே போலிதான் அதில் போலி பிம்பமா ?
போரின் சப்தம் நம்வீட்டு அடுப்பங்கரை வரை எதிரொலிக்கிறது. பொருளாதார பிரச்சினைகள் விலைவாசி ஏற்றத்தின் மூலம் நாம் வீட்டிற்க்கு வெளியே காலிங் பெல் அடிக்க காத்துக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் விஜயை எல்லாம் ஒரு பொருட்டாக எழுத வேண்டுமா ? என்று 1000 முறை யோசித்திருக்கிறேன், ஒரு வேளை யோசித்துப்பார்த்தால் இதுவும் ஒரு elite மனநிலை தான். சமூகத்தை டாக்ஸிக் ஆக மாற்றவேண்டுமா , ஒரு அரசியலற்ற ஒரு அறமற்ற அடுத்தத் தலைமுறையை உருவாக்கினால் போதுமானது, அதுவே விஜய் விடயத்தில் நடந்துகொண்டிருக்கிறது.
விஜய் அரசியலுக்கு வருவதால் பயம் என்று "கதறு கதறு " என்று தனக்குத் தெரிந்த ஒரு வார்த்தையை இரண்டு வார்த்தையாகப் போட்டுவிட்டுச்செல்வார்கள், அவர்களிடம் உரையாடக்கூட மொழி இல்லை என்பதே விடயம்.
அவர்களால் கெட்டவார்த்தைகள் , ஆபாச வார்த்தைகள் பேசிவிட முடியும்.. பின் "கதறு கதறு " , " பதறு பதறு "
என்பதைத்தாண்டி மொழி ஆளுமை கூட இல்லாத மக்களாக இருக்கிறார்கள். இத்தனைக்கும் இவர்கள் எல்லாம் நன்றாகப் படித்தவர்கள் , படித்துக்கொண்டிருப்பவர்கள் தான்.
மொழிப்புலமை இருக்கும் பார்த்திபன்கள் என்ன சொல்கிறார்கள்? "குந்தவை ", "குந்த வை " என்று பேசிவிட்டு பிரச்சினையின் தன்மையை தனது அடுக்குமொழியால் நீர்த்துபோகச் செய்கிறார்கள். தனக்கு உதவி இயக்குநராக வருவதற்கு 1000 கண்டிஷன் போடும் இவர்கள் , முதல்வர் ஆவதற்கு கண்டிஷன் போடுவதில்லை. ஒரு உதவி இயக்குநர் வாசிப்பு அதிகம் இருக்க வேண்டும் , field work வேண்டும், உலக சினிமா பற்றிய புரிதல் இருந்திருக்க வேண்டும் என்று ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒவ்வொரு தேர்வு முறை இருக்கும் . அது சரியும் கூடத்தான் , ஆனால் அரசியலென்று வரும்போது சொல்லிவைத்தார் போல 200 கோடி விட்டுட்டு வருகிறார் என்று எப்படி இவர்கள் மனசாட்சி இல்லாமல் பேசுகிறார்கள்.
200 கோடி விட்டுவிட்டு வருவது இங்கு பிரச்சினை அல்ல , யார் வேண்டுமானாலும் வரலாம் தான் ஆனால் நேராக முதல்வர் நாற்காலி தான், தன்னுடன் உரையாட முதல்வர் மட்டுமே தகுதியானவர் அதற்குகுறைந்த யாரிடமும் விவாதிக்கமாட்டார் , அது ஒரு aura , அவர் ஒரு தேவதூதன் என்பதெல்லாம் என்ன மாதிரி மனநிலை . ஏன் ஓரளவு இலக்கியம் படித்த மிஸ்கின் கூட லியோ படவிழாவில் அவர் மைக்கேல் ஜாக்சனைத் தாண்டி இப்படி ஒருவரைப் பார்க்கிறேன் என்று வானளாவ புகழ்ந்தார். அப்படி பேசிவிட்டு இந்தப் பக்கம்
குரோசோவா , தாஸ்தாவெஸ்கி என்று பேசிவிட்டுச் செல்வார் என்றால் கலையைப் பற்றி என்ன புரிதல் இயக்குநர்களுக்கு உள்ளது என்ற கேள்வி மனதில் தொக்கி நிற்கிறது.
இந்த 200 கோடி விட்டுவிட்டு வருகிறார் என்பதை பார்த்திபன் முதல் சமுத்திரக்கனி வரை பேசியுள்ளார்கள்.
அமீர் கூட விஜய் வருவதை ஆதரிக்கவே செய்தார். நான் சொல்லும் இயக்குநர்கள் எல்லாம் intellectual என்ற தளத்தில் அறியப்பட்டவர்கள். 200 கோடியை விட்டுவருகிறார் என்று சொல்லும் சமுத்திரக்கனியிடம் , நாம் வேலையை விட்டு வருகிறேன் என்னை associate director ஆக நேரடியாகச் சேர்த்துக்கொள்ளுங்கள் assistant எல்லாம் வேலை செய்யமாட்டேன் என்று சொன்னால் ஒத்துக்கொள்வாரா ? assistant என்றால் கூட தேர்வு வைக்கவே செய்வார் அல்லவா . assistant என்றால் இயக்குநருக்கு அடுத்த position, நான் வேறு துறையில் பெரிய வேலையில் இருந்துள்ளேன் , அதனால் நேரடியாக associate ஆகிவிடுவேன் என்று சொன்னால் கேட்பார்களா இவர்கள்.
த்ரிஷாவை கேள்வி கேட்கும் பார்த்திபன்கள் ஏன் விஜயைக் கேள்வி கேட்பதில்லை? சினிமாவில் கேரியர் உச்சத்தில் விஜய் இருக்கிறார் என்பதா ? இல்லை அந்த பிம்பம் ஏற்படுத்திய பிரமிப்பா ? இல்லை "ரூட் " நிறுவனம் திரும்பித் தாக்கும் என்ற விடயமா எல்லாமும் சேர்ந்த பிழைப்புவாதமா ? ஒரு பெரிய இயக்குநர்கள் என்று அறியப்பட்டவர்களே விஜயைப் பார்த்து பயப்படுவது ஏன்? அந்த பிம்பத்தில் பின்னிருக்கும் அரசியல் என்ன?
விஜயின் பிம்பம் எம் ஜி ஆர் போல organic ஆனதா? பிம்பம் என்பதே organic இல்லை கட்டமைக்கப்படுவது தான். ஆனால் விஜயின் பிம்பம் என்பது போலிகளிலேயே போலிப் பிம்பம். பிம்பம் என்பதே போலி அதில் போலிப் பிம்பம் என்பதை ஒரு மொழியால் எப்படிச் சொல்லவேண்டுமென்று தெரியவில்லை. எம் ஜி ஆர் ஆகப்பெரிய வெற்றிகளைத் தொடர்ந்து கொடுத்தவர், மக்கள் கூட்டம் கூட்டமாக எம் ஜி ஆர் படத்துக்குச் செல்வார்கள்.
சினிமாவில் எம் ஜி ஆர் எப்படி வருவார் நல்லவராக வருவார் , குடிக்க மாட்டார் , உழைப்பாளிகளின் பின்னால் நிற்பார், புரட்சிகர பாடல்களைப் பாடுவார் , அம்மாவுக்கு , தங்கைக்கென்றால் எம் ஜி ஆர் அன்பைக் கொட்டிக்கொடுப்பார். அவர் படத்தில் என்றுமே தோற்கவே மாட்டார் , மூன்று அடி வாங்கிவிட்டு அடுத்து அடிகொடுப்பது தான் எம் ஜி ஆர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய இடதுசாரிப் பாடல்கள் எல்லாம் அவருக்குப் பொருந்திப்போயின, பின் கண்ணதாசன் முதல் வாலி வரை எம் ஜி ஆருக்கு எழுதிய பாடல்களில் அவர் பிம்பம் உயர்ந்தது. அது சுதந்திர இந்தியா காலகட்டம், லட்சியவாதம் பிரதானமாக முன்னிநின்ற போது. களத்தில் திராவிட அரசியலும் , கம்யூனிச அரசியலும் பிரதிபலிக்கும் போது அதன் திரை வடிவமாக எம் ஜி ஆர் என்னும் பிம்பம் மேலே வந்தது. சிவாஜியை போல வெவ்வேறு பாத்திரங்களில் நடித்திருந்தால் எம் ஜி ஆரால் இவ்வளவு உயரத்துக்குச் செல்ல முடியாது. திரையில் ஒரு larger than life பாத்திரத்தைச் சித்தரிப்பது அதை வளர்த்துவிட்டு வருவது என்பது தான் எம் ஜி ஆர்.
அந்தப் பிம்பம் சினிமாவில் ஒரு ஏழை பங்காளன் என்ற விடயத்தை கட்டமைத்தது . சினிமாவைத் தாண்டி அரசியலில் அவர் வேறொரு ஆளாக இருந்திருக்கிறார் . ஆனால் ஒரு திரைப் பிம்பமாக எம் ஜி ஆர் பிம்பம் பிரமாண்டமானது .
அடுத்த வந்த ரஜினிகாந்த் விஜயகாந்த் பிம்பங்கள் சற்று மாறுபட்டது, ரஜினிகாந்த் அனைத்து ஒழுங்குகளையும் கட்டுடைக்கும் இளைஞராக யாருக்கும் அடங்காதவராக , குடிகாரராக , பொறுக்கியாக,
ரவுடியாக , வீட்டிற்கு அடங்காத துடுக்கான இளைஞராக வருவார். அவர் காமெடி படங்களான "தில்லு முள்ளு " முதல் "தம்பிக்கு எந்த ஊரு " வரை சொல்பேச்சு கேட்காத இளைஞராக வருவார். ரஜினியும் பெரிதாக எந்த ஒரு மாறுபாடையும் காட்டியதில்லை , ரஜினிக்கு ஆகப்பெரிய உலக அளவில் நடிக்கக்கூடிய திறமை இருக்கிறது என்றாலும். ஒரு பக்கம் சிவாஜியின் நடிப்பை ஸ்டைலாக செய்துவிட்டு , நடிப்பை சிவாஜியிடனும் ,
image ஐ வளர்த்துக்கொள்வதை எம் ஜி ஆரிடமும் எடுத்துக்கொண்டது அவரை உற்று கவனித்தால் பார்க்கலாம்.
"ஆடு புலி ஆட்டம் " படத்தில் ரஜினி, கமல் இருவரும் திருடர்களாக ஒரே கூட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ரஜினி கமலைத் தூக்கி சாப்பிட்டுவிட்டு செல்வார். ஒரு வண்டி ஓட்டும்போது கூட shave பண்ணிக்கொண்டே வண்டி ஓட்டுவார். கமல் அதில் நாயகன் , ஆனால் ரஜினி வசனங்கள் அனல் பறக்கும்.
"கல்யாணம் பண்ணுவதற்கு திருடுவதே மேல் " என்பது போன்ற வசனங்கள் . "நினைத்தாலே இனிக்கும் " படத்தில் "அப்பாக்கள் தாத்தாக்கள் வந்தார்கள் போனார்கள் " என்ற வசனம் இன்று வரை ட்ரெண்ட்.
ரஜினி கமலுடன் நடிக்கும்போது கம்ல் என்ன தான் நடித்தாலும் ரஜினி out of focus இல் வந்தாலும் ஒரே ஒரு ஸ்டைலான லுக்கில் ரஜினி ரசிகர்களை தன் பக்கம் கொண்டுவந்துவிடும் நடிப்பும் ஆற்றலும் ரஜினிக்கு உண்டு.
ஆனாலுமே ரஜினியின் பிம்பமும் கட்டமைக்கப்பட்ட பிம்பம் தான். எதற்கும் அடங்காத அடக்கமுடியாத ஒரு ஒழுங்கற்ற கட்டற்ற ஒரு பிம்பம். இதை ரஜினி தெரிந்து செய்தாரா தெரியாமல் செய்தாரா என்பதெல்லாம் இங்கு விடயமல்ல. ரஜினியின் பலம் வேகம் , காமெடி மற்றும் என்னவேண்டுமானாலும் செய்தாலும் ரசிகர்கள் ஒத்துக்கொள்வார்கள் என்ற பிம்பம். 87 க்கு பின் 99 வரை ரஜினியின் படங்கள் பெரும்பாலும் ஒரே கதை தான்
சொல்லப்போனால் சொத்தைக் காப்பாற்றும் கதைகள் தான்."""வேலைக்காரன் ", "பணக்காரன் ", "உழைப்பாளி ", "முத்து ", "அருணாச்சலம் ", "படையப்பா " போன்ற படங்கள்.
போக்கிரித்தனமா யாருக்கும் அடங்காத இளைஞர் முதல்பாதி என்றால் , பின் தனது நடுத்தறவயதில் ரஜினி நடித்தது எல்லாமே சொத்தைக் காப்பாற்றும் ஆண்டைகள் , முதலாளிகள் கதை தான். இல்லை தளபதி போன்ற ரவுடித்தனத்தை கதாநாயக பிம்பமாக கொண்டாடும் படங்களும் "பாட்ஷா " போன்ற யாருமே ஒன்றுமே செய்யமுடியாத டான் கதைகளும் வந்து போகும்..
ரஜினியின் பிம்பம் கட்டமைக்கப்பட்ட பிம்பம் என்றாலும் சினிமாவில் ரஜினியின் நடிப்பு ஸ்டைல் எல்லாம் வேறு ரகம். சினிமாவில் எம் ஜி ஆர் ரஜினி போன்றவர்கள் ஆகத் திறமையானவர்கள். அவர்கள் காலகட்டத்தில் எத்தனையோ போட்டிகள் வந்தாலும் அவர்கள் உயரம் என்பது வேறு. அவர்களை நெருங்க முடியாத வண்ணமே அவர்கள் "பிம்பம் " இருந்தது. ஓரிருமுறை கமல் , விஜயகாந்த் படங்கள் ரஜினி படங்களைத் தாண்டி இருக்கலாம் ஆனால் ஒட்டுமொத்தமாக கிட்டத்தட்ட 50 வருட கேரியர் ரஜினிக்கு உண்டென்றால் அதில் கிட்டத்தட்ட 46 47 வருடமாக ரஜினி சூப்பர் ஸ்டார்.
ரஜினி ஒரு மேடையில் இப்படிச்சொல்கிறார் " ராஜாதி ராஜா " ஓடாது என்று ரஜினிக்கு தோன்றியிருக்கிறது.
ராஜாதி ராஜா ஓடவில்லை என்றால் சில சென்டர்களில் காசு கொடுத்து 175 நாள் ஒட்டிவிடுவோம் என்று நினைத்தாராம். அதை மேடையில் ஓப்பனாக சொல்கிறார் ரஜினி. அதாவது நாம் நினைப்பதைப் போல
ரஜினி போன்ற உச்ச உச்சா உண்மையிலேயே கேரியர் உச்சம் தொட்ட நடிகருக்குக் கூட தனது பிம்பத்தைத் தக்க வைக்க சில்லறைத்தனங்கள் செய்யவேண்டியதாக உள்ளது.
சரி விஜய்க்கு வருவோம் விஜய் எப்போது கேரியர் உச்சத்தில் இருந்தார்? விஜய் நடித்தது மொத்தமே 69 படங்கள் தான் . ரஜினி, கமல் , விஜயகாந்த் எல்லாருமே 150 பிளஸ் படங்கள் நடித்தவர்கள் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். விஜயகாந்த் படங்கள் மொத்தம் 35 படங்கள் வெள்ளிவிழா ஓடியிருக்கும் , அதவாது 175 நாட்கள் படங்கள் எத்தனை படங்கள் இருக்கிறதோ அதுபொருத்தே நட்சத்திர அந்தஸ்து மாறும்.
ரஜினி , கமல் கொடுத்த வெற்றிகள் எல்லாம் அதைவிட பெரிய வெற்றிகள் தான். இந்த உயரங்களை எல்லாம் விஜய் தொட்டதே இல்லை.
ரஜினி ,கமல் , விஜயகாந்த் எத்தனை விதமான பாத்திரங்களை நடித்திருப்பார்கள் , அதற்குண்டான மெனக்கெடல் இருக்கும். அடுத்த லேயரில் உள்ள கார்த்திக், சத்யராஜ் , பிரபு , சரத்குமார் , அர்ஜுன் இவர்கள் எல்லாருமே 100 படங்கள் நடித்த நடிகர்கள். பட எண்ணிக்கை பாத்திரங்களில் வித்யாசம் இதில் எந்த இடத்தில் விஜய் கேரியர் உச்சம் எதிலும் இல்லை.
விஜய் 69 படங்களில் விஜய்க்கு சொல்லிக்கொள்ளும் படங்கள் என்றால் என்ன ? பூவே உனக்காக , காதலுக்கு மரியாதை, லவ் டுடே, நண்பன் ,துள்ளாத மனமும் துள்ளும், குஷி , friends, கில்லி, போக்கிரி , துப்பாக்கி , கத்தி, தெறி, பிகில் , மெர்சல் , மாஸ்டர் , லியோ, சர்க்கார், திருப்பாச்சி ,சிவகாசி , திருமலை . இதில் கூட சிலப்படங்களை சேர்க்கவேண்டும் என்று சேர்த்திருக்கிறேன் , ஏனென்றால் விஜய் நண்பாஸ் நண்பீஸ் போலி வசூல்களைத் தூக்கிக்கொண்டு வருவார்கள். அதைத்தாண்டி பிரியமானவளே, பத்ரி என்று சிலப்படங்களை சேர்த்துக்கொண்டாலும் கூட விஜய் வெற்றிப்படங்கள்எண்ணிக்கை இருபத்தைந்தை தாண்டாது.
சில தோல்விப்படங்களில் கூட விஜய் நடிப்பு நன்றாக இருக்கும் என்பது வேறு விடயம். வசீகரா, சச்சின் போன்ற படங்களில் நகைச்சுவை சிறப்பாகவே இருக்கும்.
ஆனால் இளையராஜா போட்ட பாடல்களின் எண்ணிக்கை , வடிவேலு கவுண்டமணி நடித்த காமெடி எண்ணிக்கை போல விஜய் மக்களிடம் ரீச் ஆனாரா என்றால் இல்லை. industry Hit என்று சொல்வார்கள் அதாவது அப்போதுவரை அதிக வசூலான படங்களில் அதிக வசூல் . அது பெரும்பாலும் ரஜினி கமல் விஜயகாந்திடம் இருந்தது. பெரும்பாலும் ரஜினி அபூர்வ சகோதரர்கள் வந்த போது அந்தப் படம்
கேப்டன் பிரபாகரன் வந்த போது அந்தப் படம் பின் தேவர் மகன் , பின் பாட்ஷா வந்த பிறகு அந்த சாதனை ரஜினி படங்களின் சாதனையை ரஜினி படங்கள் முறியடிக்கும் இன்று வரை. இப்போது 2.o படத்தில் அந்த record உள்ளது. இரண்டாவது இடத்தில் ஜெயிலர் , அதிகம் ஊதிப்பெருக்கப்பட்ட லியோ கூட ஜெயிலர் வசூலைத் தொடவில்லை என்பது தான் உண்மை.
விஜயின் ஆரம்பப்படங்கள் எப்படி இருந்தது? ரஜினிகாந்த் ரசிகன் , விஜயகாந்த் தம்பி என்று ரசிகன் படத்தில் ஒரு வசனமொன்று வரும் அது தான் ஆரம்பக்கால பிம்பம். "செந்தூரப் பாண்டி" படத்தில் விஜயகாந்த் தம்பியாக நடித்தது அவரை பட்டிதொட்டியெல்லாம் சேர்த்தது. அதைத்தாண்டி விஜய் படங்களில் சோப்பு போடும் காட்சி, கபடி ஆடும் காட்சி, குத்து பாடல்கள் என்பதே விஜய் ஆரம்ப காலகட்ட திரைவாழ்க்கை.
தான் நடித்த 69 படங்களில் ஒன்பதாவது படமாக வந்த "பூவே உனக்காக " படத்திலேயே விஜய் தனது அதிகாரபூர்வ வெற்றியைப் பெறுகிறார். விஜய் பெரிய அளவு வெளியே தெரிந்திருந்தாலும், அப்போது பிரபுதேவா , பிரசாந்த் படங்களுக்கு பெரிய முதலீடு இருக்கும் . ரகுமான் போன்றவர்கள் இசையமைப்பார்கள் பி சி ஸ்ரீராம் கேமரா என்றிருக்கும். இசையமைப்பாளர்களில் விஜய்க்கு பெரும்பாலும் இசையமைத்தவர் தேவா மற்றும் எஸ் ஏ ராஜ்குமார் இல்லை வித்யாசாகர். ஒரு நடிகனின் மார்க்கெட்டை வைத்தே technician கள் கேமராமேன் முடிவு செய்யபடுபார்கள்.
முதலில் "பூவே உனக்காக" படத்தில் விஜய் நடித்ததே ஒரு இமேஜ் இல்லாத புதுமுகம் நடித்தால் இந்தக் கதை ஓடும் என்பதால் தான் , தயாரிப்பாளரின் முதல் சாய்ஸ் அன்று முரளி , விக்ரமன் அவர்களே விஜய் நடித்தால் நன்றாக இருக்கும் இது இளைஞர்களுக்கான கதை என்று சொல்லியிருக்கிறார். விஜயின் முதல் பெரிய இசையமைப்பாளர் இளையராஜா தான் அதுவும் அது பாசில் படமென்பதால் . பாசில் படங்களுக்கு இளையராஜாவே இசையமைப்பார்.
அன்று வளரும் இளைஞர்களில் பிரபுதேவா, அரவிந்த் சாமி , பிரசாந்த் இவர்கள் தான் பெரிய ஹீரோக்கள் அடுத்த கட்டத்தில் விஜய் , அஜித்தெல்லாம் இருந்தார்கள் பூவே உனக்காகவுக்கு முன்பே அஜித் ஆசை வந்துவிட்டது. அதற்கு முன்பே பிரசாந்த் அறிமுகமாகி ஹாட்ரிக் வெற்றிகள் குமித்துவிட்டார் . ஒரு பக்கம் பாலு மகேந்திரா இன்னொரு பக்கம் மணிரத்னம் சங்கர் என்று பெரிய மார்க்கெட் . பிரபுதேவா காதலன் படத்தின் பட்ஜெட் 9 கோடி. ரகுமான் இசை இந்தியாவெங்கும் கலக்கி , பிரபுதேவாவுக்கு PAN இந்தியன் மார்க்கெட் உருவானது.. பெரிய பெரிய பட்ஜெட் பெரிய பெரிய படங்கள். ரகுமான் பெரும்பாலும் இசைமைப்பார்.
அந்தப் படங்கள் ஓடுகிறது பிரபுதேவா வெற்றியைத் தக்கவைத்துக்கொண்டாரா , இல்லை பிரசாந்த் தக்கவைத்துக்கொண்டாரா என்பதெல்லாம் வேறு விடயம். 95 க்கு முன் அப்படிதான் இருந்தது. அஜித்துக்கு காதல் கோட்டை பட்டிதொட்டியெல்லாம் ஓடி தேசிய விருது இயக்குநருக்கு வாங்கிக்கொடுக்கிறது , 97 காதலுக்கு மரியாதை வருகிறது. விஜய் ஹிட் கொடுப்பதற்கு முன்பே அஜித் ஹிட் தொடங்கியிருப்பார் என்பதற்க்காக சொல்கிறேன்.
அன்று விஜய் அஜித் மட்டும் சினிமா அல்ல உச்சத்தில் 7 நடிகர்கள் இருப்பார்கள் , ரஜினி , கமல் , விஜயகாந்த் , கார்த்திக் , சத்யராஜ் , பிரபு ஏழாவது இடம் சிலநேரம் சரத்குமாரிடம் இருக்கும் பின் சில நேரம் அர்ஜுன் அங்கு இருப்பார். பின் ராம்கி ,முரளி , ரகுமான் , சிவகுமார் போன்றவர்களும் நடுவில் இருப்பார்கள் விஜய் ,அஜித், பிரபுதேவா , அரவிந்த் சாமி , பிரசாந்த் , விக்ரம் , செல்வா , விக்னேஷ் கரண் என்று பலரும் இருப்பார்கள்.
பாக்யராஜ் , டி ஆர் , பாண்டியராஜன் போன்றவர்களும் இருப்பார்கள் . அதில் அங்கொன்றும் இங்கொன்றும் விஜய் அஜித் எல்லாம் ஹிட் கொடுப்பார்கள். காதலுக்கு மரியாதை வரை விஜய் இடமெல்லாம் 15 முதல் 20 வரை இருக்கலாம்.
நான் எதற்கு சொல்லவருகிறேன் என்றால் விஜய் அன்றெல்லாம் நம்பர் ஒன் இல்லை. பின் 97 க்கு பிறகு விஜய் அஜித் படங்கள் தொடர்ந்து ஓடுகின்றன விநியோகஸ்தர்களை திருப்தி படுத்துகின்றன. படையப்பாவுக்கு பிறகு ரஜினி எடுத்த பெரிய இடைவெளியில் இருவரும் பெரிய ஹீரோவான இடத்தை பிடிக்கிறார்கள். ஆனாலும் நம்பர் ஒன் இடமெல்லாம் இல்லை. CD யால் சினிமா அழிந்துகொண்டிருந்த போது ரஜினி விஜயகாந்த் கமல் அஜித் விஜய் இவர்கள் படங்களே திரையரங்குள் ரசிகர்களைக் கூட்டிக்கொண்டு வந்தன என்பது உண்மை தான் என்ராலும். 2002 காலகட்டங்களில் விக்ரம் , சூர்யா எல்லாம் நிலையான இடத்தை பிடித்துவிட்டார்கள்.
தனுஷ் , சிம்பு , விஷால் , ஜீவா , ஜெயம் ரவி என்ற வரிசையும் வரத்தொடங்கியது. தமிழ் சினிமா பார்ப்பதற்கு ஹீரோயிச சினிமாவாகத் தோன்றினாலும் அந்த அந்த காலகட்டங்களில் ஒரு இயக்குநர் வருவார் அவருக்கென்று மார்க்கெட் ஒரு பத்து இருபது வருடங்கள் இருக்கும். பின் இன்னொரு இயக்குநர் வருவார்.
வருடத்துக்கு 150 படங்கள் வருமென்றால் 2000 களுக்கு பிறகு ஒரு 20 படங்களே திரையரங்கில் ஓடும். அதில் விஜய் படங்களும் இருக்கும் அவ்வளவே.
விஜய் விநியோகஸ்தர்களுக்கான நாயகன் தான் மாற்றுக்கருத்து இல்லை , ஆனால் "ஜனநாயகன் பிம்பச்சிறை " என்ற புத்தகத்தில் சொல்வதைப் போல விஜய் தனியான உயரத்தில் எல்லாம் என்றுமே இருந்ததில்லை. விஜய் வசீகரா படமும் சாமி படமும் ஒரே நாளில் வந்தது , சாமி வசீகரா படத்தை தடம் தெரியாமல் ஆக்கியது. தீனா , friends இரண்டும் ஒரே நாளில் ரிலீஸ் ஆனாலும் friends படத்தில் விஜயும் ஒரு ஹீரோ அதைத்தாண்டி மலையாள இயக்குநர் வடிவேலு இளையராஜா என்று அதன் வெற்றி கூட்டு வெற்றி.
friends படத்தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் இப்படிச்சொல்கிறார் தீனா படம் friends ஐ விட இரண்டு மடங்கு திரையரங்கில் கலெக்ட் ஆனதாகச் சொல்கிறார். விஜயின் ஆக்ஷன் ஹீரோ அவதாரம் திருமலை படத்திலிருந்தே தொடங்குகிறது . அதெல்லாம் ஏற்கனவே ரஜினி செய்தது தான். விஜய் முத்திரை, துள்ளல், நடனம் , காமெடி என்று விஜய் முழுத்திறமையைக் காட்டி ஆக்ஷன் ஹீரோ என்று அங்கீகரிக்கப்பட்ட படம்
"கில்லி ". அது வந்தது 2004 . கில்லி வருவதற்கு முன் 1999 க்கு வந்த படையப்பா தான் industry hit , கில்லி பெரிய வெற்றிபெற்றிருக்கலாம் ஆனால் படையப்பாவை எல்லாம் தாண்டவில்லை.
2005 களில் திருப்பாச்சி சிவகாசி என்று விஜய் கிராப் ஏறிக்கொண்டிருக்கும்போது அடுத்த வந்த படம் தான் சச்சின் , சந்திரமுகியுடன் வந்தது . படையப்பா IH வசூலை சந்திரமுகி முறியடித்தது. நான் யானை இல்லை குதிரை என்று ரஜினி சொன்னார். ஓடாத சச்சின் படத்துக்கு 200 நாள் போஸ்டர் ஓட்டினார்கள். திருப்பாச்சி , சிவகாசிக்கு பிறகு விஜய்க்கு கிடைத்த ஒரே வெற்றிப்படம் போக்கிரி. போக்கிரிக்கு பிறகு துப்பாக்கி வரை அவர் மார்க்கெட் நிலையானதாக இல்லை.
விஜய் படங்கள் படுக்கும் போது இந்தப் பக்கம் அஜித் படங்களும் ஒரு பக்கம் விக்ரம் படங்களும் சூர்யா படங்களும் ஓடிக்கொண்டு தான் இருந்தன. சூர்யா படங்கள் பெரிய பெரிய வெற்றிகளைப் பெற்று ஆந்திராவில் எல்லாம் ஓடியது. 100 கோடி வசூலானது விஜயோ அஜித்தோ அல்ல , ரஜினிக்கு பிறகு 100 கோடி வசூலைப் பார்த்தது "ஏழாம் அறிவு " தான்.
விஜய் படங்களின் நிலைமை என்ன குருவி , ATM , வில்லு, சுறா , வேட்டைக்காரன், வேலாயுதம் என்று செல்லும் இடமெல்லாம் தோல்விப்படங்கள் பொல்லாதவன் , வேல் படங்களுடன் வந்த அழகிய தமிழ் மகன் மதிய காட்சியிலேயே ஆட்கள் இல்லை பொல்லாதவன் பெரிய வெற்றி , வேல் ஒரு ஆவேரேஜ் ஹிட் , ATM படம் தோல்வி.
"ஏழாம் அறிவு " வந்தபோது கூட வந்த "வேலாயுதம் " படத்துக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. தேவி திரையரங்கில் நான்கு அரங்குகள் இருக்கும் தேவி ,தேவி பாரடைஸ் இரண்டும் 1000, 1100 சீட் அரங்குகள் , கடலுக்குள் படம் பார்ப்பதைப் போன்ற அனுபவத்தைக் கொடுக்கும், இந்தப்பக்கம் தேவி கலா , தேவி பாலா 200 300 சீட்கள் அரங்கம் வேல்யுதம் படத்துக்கு இரண்டு சிறிய அரங்குகள் ஏழாம் அறிவு படத்துக்கு இரண்டு 1000 சீட் அரங்குகள் ஒதுக்கப்பட்டது. இப்படித்தான் அனைத்து அரங்குகளும் ஒதுக்கப்பட்டபோது விஜய் ரசிகர்கள் பெரிய அரங்குகள் கொடுக்கச்சொல்லி போராட்டம் நடத்தினார்கள். அது அன்று செய்தியாக வந்தது.
சரி சூர்யா சமகால நடிகர் தான். ஆனால் பொல்லாதவன் படத்துடன் ATM வந்ததும் , சிறுத்தை , ஆடுகளம் படங்களுடன் காவலன் படமும் தர்ம அடி வாங்கியது. சரி அவர் போட்டியாளரான அஜித் படத்துடன் விஜய் மோதும் போது என்ன நடந்திருக்கிறது வீரம் , ஜில்லா வீரம் வெற்றி . துணிவு , வாரிசு துணிவு வெற்றி . போக்கிரி , திருமலை படங்கள் அஜித் படங்களுடன் வந்து வெற்றி பெற்றிருக்கிறது. பிகில் , கைதி வந்தபோது கைதி பெரிய வெற்றி பெற்றது . KGF பீஸ்ட் படத்தை விட நன்றாகவே ஓடியது.
இந்தக் கணக்கெல்லாம் நமக்கு ஏன் தேவை நாம் ரசிகர்மன்ற சண்டையில் ஈடுபடப்போகிறோமா இல்லை இல்லவே இல்லை. விஜய் ஊதிப்பெருக்கப்பட்ட பிம்பம் என்று சொல்வதற்க்கே இத்தனை தரவுகள் "ஜனநாயகன் பிம்பச் சிறை " புத்தகத்தில் விஜய் மட்டுமே இண்டஸ்ட்ரியை ஆதிக்கம் செலுத்தினார் என்று சொல்வதைப்போல களம் இல்லை. விஜய் சேதுபதி , சிவா கார்த்திகேயன் முதல் பிரதீப் ரங்கநாதன் , சூர்யா தம்பி கார்த்தி என்று 100 கோடி கிளப்க்களில் பலர் தொடர்ச்சியாக சேர்ந்துகொண்டு இருக்கிறார்கள்.
விஜய் மட்டுமே பாக்ஸ் ஆபீசை ரூல் செய்யவில்லை . பல ஹீரோக்களைப் போல விஜயும் இருக்கிறார் சொல்லப்போனால் இன்னும் ரஜினி கமலே retire ஆகவில்லை. விஜய் படங்கள் சோலோவாக சிறப்பாக ஓடலாம் ஆனால் competition போது நம்பர் ஒண்ணாக உள்ளதா என்றால் சில நேரங்களில் விஜய் படங்கள் மூன்று நான்காம் இடங்களுக்கும் தள்ளப்பட்டிருக்கிறது.
மெர்சல் , சர்க்கார் படங்கள் எல்லாம் நெகட்டிவ் பிம்பம் அதாவது படத்துக்கு பிரச்சினைகளை அரசியல் ரீதீயாக ஏற்படுத்தியதால் ஓடியது. அப்படி ஓடிய படங்களும் இருக்கவே செய்கின்றன. படம் ரிலீஸ் போது எதாவது பிரச்சினைகள் கிளப்பப்படும் அந்தச் சூழலே படத்தைப் பிரபலப்படுத்தும் அப்படியே படம் ஓடத்தொடங்கும்.
விஜயின் பிம்பம் எப்படி நம்பர் ஒன் என்று காட்டப்படுகிறது? அதற்கு பின்னால் இருப்பவர்கள் பி டி செல்வகுமார் மற்றும் எஸ் ஏ சந்திரசேகர். பெரும்பாலும் பழைய 2000 களுக்கு முன்பு ஓடாத படத்துக்கு ஒரு ஷோ 100 நாள் காட்டி வெற்றிபடமென்று நம்பவைப்பார்கள். பின்பு பத்திரிகைகளில் பேட்டிகள். போட்டி நடிகர்களின் வாய்ப்புகளை தட்டிப்பறித்து உள்ளே செல்வார்கள். போட்டி நடிகர்கள் படங்களுக்கு காசு கொடுத்து ஆள் அனுப்பி படம் நல்லா இல்லை என்று சொல்லவைப்பது . பத்திரிகையில் பேட்டிகள் , போட்டி நடிகர்களை தரக்குறைவாக பேசுவதற்கு பத்திரிகையாளர்களை பயன்படுத்துவது என்று பல வேலைகளை
பார்த்துத்தான் ஒரு சூப்பர் ஸ்டார் பிம்பம் கட்டப்படும்.
2010 களை ஒட்டி இருக்கலாம் குமுதத்தில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சர்வே எடுக்கிறார்கள் அஜித் முதலிடத்திலும் விஜய் இரண்டாம் இடத்திலும் வருகிறார்கள். விஜய் ரசிகர்மன்றதுடன் சென்று எஸ் ஏ சந்திரசேகர் மிரட்டி ரிசல்ட்டை மாற்றி அறிவிக்கச்சொன்னார்கள். இதைப்போன்று சில்லி வேலைகளை ஓரளவு எல்லா நடிகர்களும் பார்ப்பார்கள் தான், சூப்பர் ஸ்டார் என்னும் பிம்பம் ஏன் ரஜினிக்கே கூட கட்டமைக்கப்பட்டது தான் , "ராஜாதி ராஜா " படத்தை 175 நாட்கள் ஓடவைத்துவிடலாம் என்று ரஜினி திட்டத்தை மேடையில் பேசியிருப்பார், பிம்பத்தில் உயரத்தில் நிற்க குரங்கு வித்தைகள் எல்லாம் தேவைப்படுகிறது என்பது உண்மை. ராஜாதி ராஜா ஓடவில்லை என்றாலும் ரஜினி தனக்கிருக்கும் திறமைக்கு நம்பர் ஒன் தான்.
ஆனால் விஜயின் பிம்பம் வேறு. ரஜினி சினிமாவில் ஆவது பெரிய ஆள் தான், விஜய் சினிமாவில் கூட நம்பர் ஒன் என்று போலியான தரவுகளைக் கொடுத்துக்கொடுத்து ஏமாற்றிக்கொண்டிருப்பவர். சினிமாவில் வடை சுடுவதென்றால் விஜயை சொல்வார்கள். ரஜினிக்கும் , எம் ஜி ஆருக்கும் சினிமாவில் பிம்பத்தை கட்டமைப்பது நடக்கிறது என்றால். விஜய்யின் பிம்பம் சினிமாவுக்குள் இருந்து அல்ல , விஜய் பெரிய ஸ்டார் அவர் படங்கள் மட்டுமே வசூலை வாரிக்குமிக்கும் என்று சினிமா நடிப்பைத்தாண்டி விஜயின் பிம்பம் வெளியில் அவர் ஆகச்சிறந்த மாஸ் , அவருக்கு charisma உண்டு என்று கட்டமைக்கப்படுகிறது. இதுதான் இருப்பதிலேயே ஆபத்தான விடயம்.
விஜய்க்கு ரசிகர்கள் உண்டு மறுப்பதற்கு இல்லை , அதில் Genz துப்பாக்கிக்கு பிறகு உருவான ரசிகர்கள் organic ஆக உருவாகவில்லை , திட்டமிட்டு உருவாக்கப்பட்டவர்கள். ரூட் என்ற நிறுவனம் PR டீம் வைத்து , அவர் படங்கள் வானளாவ வெற்றிபெற்றன என்று பொய் சொல்லி சொல்லி. உருவாக்கப்பட்டது. விஜய் PR டீம் எப்படி செயல்படும் ஒரு நேரத்தில் விஜயை கடவுள் பிம்பத்துக்கு உயர்த்திப்பிடிக்கும் pr நிறுவனம் விஜய் போட்டியாளர்களை சகட்டுமேனிக்கு troll செய்யத்தொடங்கும்.
விஜய் போட்டியாளர் அஜித் என்றால் அஜித் மனைவி மகள் அனைவரையும் ட்ரோல் செய்யத்தொடங்கும்.
பொதுவாக அது போலியாக ட்ரோல் செய்யப்பட்டாலும் அதை ட்விட்டரில் பார்க்கும் விஜய் ரசிகன் அந்த ட்ரோல் செய்யும் தற்குறி மனநிலைக்கு வருவான். இது ஒரு மாதிரி கஞ்சா போதையைப் போன்றது, ட்விட்டரில் முன்பெல்லாம் விஜய் , அஜித் ரசிகர்கள் இருவரும் கண்டபடி திட்டிக்கொள்ண்டு ட்ரெண்டு செய்வார்கள் 2012 களுக்கு பிறகு இந்தச் சண்டையை இன்டர்நெட்டில் பார்க்க முடியும்.
அது மேலிடத்திலிருந்து தலைவர்களில் இருந்து பெறப்பட்ட உத்தரவின் பெயரிலேயே அந்தச் சண்டைகள் நடைபெறும். முதல் ட்விட்ட் போட்டவர்கள் fake id யாக சம்பளம் வாங்கிக்கொண்டு போடுபவர்களாக இருக்கலாம், ஆனால் அதை உண்மை என்று நம்பி பங்கு பெரும் விஜய் அஜித் ரசிகர்கள் அதில் மனமுவந்து சண்டை போடும் போது விழுமியங்கள் வீழ்கிறது.
இதில் பெரிய சிக்கல் ஒன்றைப் பார்த்திருக்கிறேன் அஞ்சான் படம் பெரிய தோல்வியைச் சந்தித்தது அதற்கு காரணம் விஜய் அஜித் ரசிகர்களே. சேர்ந்து படத்தை ட்ரோல் செய்து படத்தை காலி செய்தார்கள். ஒரு 15 வருடமாக சூர்யா அவர்களுக்கு திரையரங்கில் பெரிய வெற்றி கிடைக்காமல் இருப்பதற்கு இந்த PR வேலைகள் காரணம்.
இதில் இன்னொரு சிக்கல் என்னவென்றால் இதெல்லாம் பிளான் செய்து நடத்தப்படுகிறது என்ற விடயம் ட்விட்டரில் புதிதாக நுழையும் ரசிகனுக்குத் தெரியாது. வாசிப்பும் இல்லை என்றால் அவனுக்குத் தெரிந்த ரெண்டு பேர் விஜய் மற்றும் அஜித். அதிலிருந்து ஒரு ரசிகர் படை உருவாகும். அங்கு இருக்கும் ட்ரெண்ட்களைப் பார்த்துவிட்டு இந்த இரண்டு பக்கம் தான் தரம் போல என்று ரசிகனும் பாதிபாதியாக பிரிந்து ஆதரவு தெரிவிப்பார்கள்.
விஜய்க்கும் , அஜித்துக்கும் உண்டான opening இப்படி ஊதிப்பெருக்கப்பட்ட பிம்பத்தால் தானே தவிர , ரஜினி,எம் ஜி ஆர், விஜய்காந்த் போன்று அல்ல. ரஜினி என்பது பிம்பம் தான் ஆனால் விஜய் என்பது ஒரு ஊதிப்பெருக்கப்பட்ட போலி பிம்பம். விஜயின் கூட்டம் எப்படி கூட்டப்பட்டிருக்கிறது என்று பார்த்தால் அது வெறும் ரசனை சார்ந்து மட்டுமல்ல அதற்கு பின்பு ஒருங்கிணைக்கப்பட்ட PR வேலைகள் உண்டு.
விஜயின் PR வேலைகளை பார்த்து வளர்ந்த சிவ கார்த்திகேயன் இன்று "தாய் கிழவி " போன்ற பிற்போக்கான படத்தைக் கூட முற்போக்கான தரமான படமென்று மக்களிடம் விதைக்கிறார். அனிருத் முதல் சாய் அப்யங்கர் வரை PR வேலைகளே அவர்களை மைக்கேல் ஜாக்சன் அளவுக்குக் காட்டுகின்றன.
இதைப்பற்றி ஏன் இப்போது எழுத வேண்டும். விஜய் டான்ஸ் நன்றாக ஆடுவாரா ஆடுவார் அதை ரசிக்கிறேன் இல்லை காமெடி சென்ஸ் ரஜினிக்கு பிறகு நன்றாக இருக்கும் ரசிக்கிறேன் என்று சொல்வதில் பிரச்சினை இல்லை. ஆனால் விஜய் தேவ தூதர் , விஜய் charismatic தலைவர், விஜய்க்கு தங்கச்சியாக இருப்பேன் ஏன் மனைவியாகக் கூட இருப்பேன் என்று பைத்தியக்காரத்தனம் அதிகமாக இருக்கும்போது அதைப்பற்றி பேசவேண்டிய தேவை இங்கு உள்ளது.
கரூர் சம்பத்துக்கு பிறகும் கூட விஜய் காரணமில்லை என்று ஒரு கூட்டம் நம்புகிறது . இன்னும மரணங்கள் மட்டுமே ஒரு ஐம்பது நடந்திருக்கிறது . எதையும் விஜய் என்ற மாமனிதரை அசைத்துப்பார்க்கவில்லை. மனைவியைக்கூட அந்த அளவு worth இல்லை என்று நகர்ந்துவிடுகிறார். அதற்கு விசிலடிக்கும் கூட்டமொன்று,
விஜயைப் பார்க்கப்போய் அந்த வண்டியில் தலையை விட்டால் முக்தி அடையலாம் என்று பையித்தியம் முற்றும் போது . நாம் இடையில் புகுந்து அது அப்படியல்ல என்று சொல்லவேண்டிய கட்டாயம் உள்ளது.
இதை எழுதுவதால் விஜய் ஜெய்துகொண்டிருக்கிறார் என்று நினைக்கவேண்டாம் . விஜய் டெபாசிட் கூட வாங்க மாட்டார் என்பது எந்த அளவு உண்மையோ விஜய்க்கு ஒரு 25 லட்சம் முதல் 30 லட்சம் பேர் விஜய்க்கு வாக்களிப்பார்கள். அதில் ஒரு 10 லட்சம் பேருக்காவது மனநலம் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் உண்டு.
அது தேர்தல்களை பாதிக்காமல் இருக்கலாம் , ஆனால் ஒரே நேரத்தில் இவ்வளவு பேருக்கு மனநலம் பாதிப்பு ஏற்படுகிறது என்றால் நாம் முன்னேறிய சமூகம் தானா ? என்ற கேள்விகள் உண்டு.
எல்லாருமே அரசியலுக்கு வரலாம் தவறில்லை , ஏன் பாஜக ,அதிமுக , நாம் தமிழர், பாமக இவர்கள் மேல் எல்லாம் கடுமையான விமர்சனங்கள் உண்டு . விமர்சனம் இருந்தால் மட்டுமே வேறு வேறு கட்சிகள் . ஏன் விடுதலைச் சிறுத்தைகள் ,திமுக மீது கூட விமர்சனம் உண்டு தான். அது வேறு. ஆனால் எந்த ஒரு விழுமியமே இல்லாமல் ஒரு mob பைத்தியக்கார கூட்டம் , சோம்பிக் கூட்டத்தைப் பார்த்தால் பயமாகவே இருக்கிறது.
இங்கு organised ஆக pr டீம் வைத்து இளைஞர்களின் மூளை சலவைச் செய்யப்படுகிறது. அது சில ஆயிரக்கணக்கில் இருந்தால் கூட ஆபத்து தானே?
Saturday, 1 June 2024
கருடன் == விசுவாசம் என்னும் ஊசிப்போன நிலப்பிரபுத்துவ வடை == spoiler alert
மனித உணர்ச்சிகளில் துரோகத்துக்கென்று தனிப்பட்ட இடமுண்டு. வேறு எந்த ஒரு உணர்ச்சியையும் விட துரோகத்தை சந்திக்காத மனிதர்களே இருக்க முடியாது. பிறந்தநாள் முதல் மனிதன் அடிக்கடி சந்திக்கும் விடயம் துரோகம். ஒன்று ஏமாறும் ஆளாக நாமிருப்போம் இல்லை நாமே ஏமாற்றும் ஆளாக இருப்போம். அந்த துரோகத்துக்கும் பழிவாங்களுக்கும் சினிமாவில் ஒரு பிரதான இடமுண்டு. உலகின் ஆகச்சிறந்த திரைக்கதைகள் எல்லாமே பொறாமை உணர்ச்சி, துரோகம் சார்ந்தவையாக இருக்கவே வாய்ப்புகலுண்டு.
துரோகத்தால் ஏமாற்றப்பட்டு பழிவாங்கும் கதைகளே மாஸ் சினிமா ஆகின்றன.
இங்கு துரோகத்தை ஏமாந்ததை அப்படியே கவித்துமாக முடித்தால் உலக சினிமா அதையே அந்த ஏமாற்றப்பட்டவனின் தரப்பிலிருந்து யாரோ பழி வாங்கினால் அது மாஸ் சினிமா. புரூட்டஸ், ஜூலியஸ் சீசர் கதையும் சுப்ரமணியபுர கஞ்சா கருப்பு கதையும் வேறு வேறல்ல. ஏமாற்றப்பட்டு கொல்லப்படுகிறான் அழகர், பரமன் பெண்ணின் துரோகத்தை உணர்ந்து அவளை கொலை செய்கிறான். அந்தக் காதலியே அழகரை காட்டிக்கொடுக்கிறாள். காதல் மூலம் துரோகத்தை உணர்ந்தவர்கள் எல்லாம் அந்தப் பெண்ணின் ரத்தத்தை பரமன் வெட்டும் போது முகத்தில் வரும் ரத்தத்தில் தங்கள் துரோகத்தை தங்கள் ஏமாற்றப்பட்டதை ஏமாற்றியதை கழுவிக்கொள்கிறார்கள். அப்படியே வெட்டிய பரமன் தன்னுடைய நெருங்கிய நண்பன் காசியால் காட்டிக்கொடுக்கப்படுகிறான். அழகரை வீழ்த்தியது காதலென்றால், பரமனை வீழ்த்தியது நட்பு. அந்த நட்பும் காதலும் இணையும் புள்ளி துரோகம்.
நெருங்கிய நட்போ, காதலோ துரோகத்தில் உடையும்போது நமக்குள் சொல்லமுடியாத வலியும் கண்ணீருமே மிஞ்சும். கண்ணீர் கரைந்துவிட்ட பிறகு கூட அந்த துரோகத்தின் வலி நம் இறப்பு வரை நம்கூட வரக்கூடிய வலி. கர்ணனை நாம் ஏன் நினைவில் வைத்திருக்கிறோம் மஹாபாரதத்தில் துரோகத்தால் வீழ்த்தப்பட்ட கதாப்பாத்திரம் கர்ணனின் பாத்திரம் துரோகத்துக்கும். பழிவாங்களுக்கும் சினிமாவில் என்றுமே சந்தை மதிப்புண்டு.
வடசென்னை, ஆடுகளம், சுப்ரமணியபுரம் , மெட்ராஸ் இந்தபடமெல்லாம் ஒரே கதை தான். பொறாமை, துரோகம், கொலை, பழி வாங்கல் இந்த ஆதரப்புள்ளிகளிலேயே இந்தக் கதைகள் நகர்வதை பார்க்கமுடியும்.
சொல்லப்போனால் கூர்ந்து கவனித்தால் இது ஒரு template clitche கதையென்று சொல்லலாம். அதன் சமீபத்திய பிரதி தான் "கருடன்".
"கருடன்" என்பதே ஒரு வைணவ குறியீடு, கருடனை பார்க்காமல் பெருமாளை பார்க்க முடியாதென்பார்கள். கருடன் சக்திவாய்ந்தவர் என்பார்கள். இந்தப் படத்திலும் கோவிலை காப்பாற்றும் அதிகாரத்திலிருக்கும் குடும்பத்துக்கு" விசுவமாக" இருக்கிறார் சொக்கன் அவரே கருடன். இந்த விசுவாசமே கதையின் ஆதாரப்புள்ளி.
இந்த விசுவாசம் என்னும் விடயமே நிலப்பிரபுத்துவ விழுமியம். அந்த விசுவாசம் என்பதே சாதிய விழுமியம், மேலே இருக்கும் சாதிக்கு கீழே இருப்பவர்கள் அடிபணிவது.. இந்த கருத்தாக்கம் விசுவாசம் என்னும் வார்த்தையே அரத பழசான விழுமியம் மற்றும் வார்த்தை. இந்த அரசியல்ரீதியான புரிதலே படத்துடன் ஒன்றா முடியாமல் செய்தது. ஒரே நேரத்தில் முற்போக்கு விடயங்களை பேசிக்கொண்டே கருடனை ஆதரிக்கவே முடியாது அப்படி எதோ ஒரு கோணத்தில் நமக்கு படம் பிடிக்கிறதென்றால் நம் அரசியலை எந்த புள்ளியில் நமக்கு இந்தப் படம் பிடிக்கிறது என்பதை பரிசீலிக்க வேண்டும்.
இந்தப் படம் விசுவாசத்தை கதாநாயக பிம்பத்துடன் காட்டுகிறது, அந்த விசுவாசம் இல்லையென்றால் இத்தனை வெட்டுகுத்துக்களே நடந்திருக்காது. யோசித்து பார்த்தால் சொக்கன் ரொம்ப அடிமையாக இல்லாமல் விசுவாசமாக இல்லாமல் இருந்திருந்தாலே பாதி விடயங்களை பாதி கொலைகளை தடுத்திருக்க முடியும். சொல்லப்போனால் கதையே நகர்ந்திருக்காது என்பது வேறு விடயம்.
80, 90 களில் இருப்பதைப்போல விசுவாசம் இப்போது உள்ளதா? தமிழகத்தில் சாதி பற்றிய புரிதல்கள் மேம்பாட்டுக்கொண்டே இருக்கிறது. முற்போக்கு படங்கள் ஒரு பக்கம் வந்துகொண்டிருக்கிறது. அரசியலில், இலக்கியதில் முன்பை விட புரிதல் மேம்பட்டிருக்கிறது. இப்போதெல்லாம் யாருமே கை கட்டி நிற்பதில்லை,
சின்ன கௌண்டர் நடக்கும்போது குடைபிடிக்கும் வடிவேலுக்கள் சமூகத்தில் இல்லை. சாதிய மனநிலை மாறிக்கொண்டிருக்கிறது, பட்டியலின மக்கள் படிப்பதால் தான் நாங்குநேரி சம்பவமே நடந்திருக்கிறது.
அப்படியிருக்க இப்போதும் சோறு போட்டால் விசுவமாக இருக்கிறார் சொக்கன் என்னும் அரத பழசான கதையை நாம் ரசிக்கிறோமென்றால் நம் மனது update ஆகிக்கொண்டிருக்கிறது அதில் பழைய விழுமியங்களை ரசிக்கிறோமென்றால் நம் மனது பின்னோக்கி இழுக்கப்படுகிறது தானே?
கருடன் படத்தில் விசுவாசத்தில் தான் சொக்கன் கருணாவின் மச்சான் கையை வெட்டுகிறார். அந்தக் கையை வெட்டுவதிலிருந்து தான் பிரச்சினையே ஆரம்பமாகிறது. அதற்கு முன் கருணாவின் பாட்டி கொல்லப்படுகிறாள் அவளே கோவில் நிர்வாகத்தை பார்த்துக்கொண்டிருக்கிறான். எதிரிகள் பிளான் செய்யும்போதே அந்த பாட்டி அடுத்த காட்சியில் கொல்லப்படுவார் என்று தெரிகிறது. அந்த நிர்வாகம் சொக்கனிடம் வருகிறது. சொக்கன் முன்பே ஆதியை எச்சரித்திருந்தால் இத்தனை பிரச்சினை வந்திருக்கவே வந்திருக்காது. சொக்கன் கருணாவுக்கு விசுவாசமாக இருக்கிறார். அதனால் சில விடயங்களை ஆதியிடம் மறைக்கிறார் அதுவே கருணாவின் மச்சான் கை உடைவதற்கு காரணமாக இருக்கிறது.
இத்தனைக்கும் கருணா சொக்கனை சாதி பார்க்காமல் பழகுகிறார். அதை ஒரு காட்சியில் சொக்கன் சொல்கிறார். ஆனால் தவறென்று தெரிந்து கூட கருணாவிடம் இருக்கும் பிரச்சினைகளை சொல்லாமலே விட்டதே படத்தின் பிரச்சினை. அதாவது இவர்கள் சொல்லும் "விசுவாசம்" கதையின் போக்கிலேயே பல பேரை காவு வாங்கியிருக்கிறது. கடைசியில் ஆதியாக வந்த சசிகுமாரையும் இந்த சொக்கனின் விசுவாசமே கொல்கிறது.
சொக்கனுக்கு தெரியும் ஆதிக்கு எதிராக பெரிய சதி நடக்கிறதென்று. அந்த இடத்தில் ஆதியை போட்டுத்தள்ள அத்தனை ஆயுதங்களை சொக்கன் பார்க்கிறார் . இருந்தாலும் ஆதியை தனியாக விட்டுவிட்டு போகிறார். சொக்கனின் பிரச்சினை தான் ஆதி கொலை செய்யப்படுவதற்கான காரணம். சொக்கன் ஆதியிடம் உண்மையை பேசியிருந்தாலே பாதி பிரச்சினை ஏன் பிரச்சினையே வராமல் ஆதியால் அந்தப் பிரச்சினையை solve செய்திருக்க முடியும். படத்தின் காட்டப்பட்ட காட்சியின் படி ஆதி நல்ல சிந்தனையாளராகவும் கருணா கொஞ்சம் யோசிக்கத்தெரியாதவராகவும் சொக்கன் அனைத்துமே தெரிந்தும் அமைதியாக கடந்துபோவதாக காட்டப்படுகிறது.
சொக்கன் இரண்டு அண்ணன் போல இருப்பவருக்கும் விசுவாசமாக இருக்கிறார். ஆனால் ஆதியா கருணாவா என்று பார்த்தால் கருணா பக்கமே நிற்பார். கருணா நிறைய தவறுகள் செய்கிறார் என்று சொக்கனுக்கு தெரியும் . சொக்கன் நல்ல அறிவாளி தான் நியாயமாக யோசிப்பவர் தான், அப்படியிருக்க ஆதியிடம் சொக்கன் பல உண்மைகளை பேசியிருந்தாலே கருணாவையும் காப்பாற்றியிருக்கலாம், ஆதியையும் காப்பாற்றி இருக்கலாம். சொக்கனின் முட்டாள்தனத்தால் தான் ஒரு சாம்ராஜ்யமே வீழ்கிறது .
படத்தின் வில்லனாக கருணா காட்டப்படுகிறார், உண்மையில் வில்லன் கருணா தானா இல்லை சொக்கனின் விசுவாசமா? ஆனால் படத்தில் விசுவாசமே கதாநாயக பிம்பத்துடன் காட்டப்படுகிறது. விசுவாசமென்பது இலவச உழைப்பு, சாதியால் ஒடுங்கி இருந்தாலும் நிலப்பிரபுவிடம் பம்மிக்கொண்டே இருப்பது. அது போலியானது, அரசியல்நீக்கமானது. ஒரு நவீன சமூகத்தில் இன்னுமா "விசுவாசம" எனும் ஊசிப்போன வடை ஓடுகிறதா? அந்த விசுவாசம் "சமூக நீதி" பேசும் ஊரில் பெரிய சந்தையை வைத்திருக்கிறதென்றால் நம் அரசியலை நாம் உரசிப்பார்க்க வேண்டும்.
சரி அந்த விசுவாசமாவது நேர்மையானதாக இருக்கிறதா? ஆதி, சொக்கன், கருணா மூன்று பேரையும் வளர்த்திருக்கிறாள் பாட்டி. அந்த பாட்டியை கருணா கொலை செய்கிறார். இது கடைசி காட்சிக்கு முந்தைய காட்சியில் சொக்கனுக்கு தெரிகிறது. கடைசி காட்சியில் அந்தப் பாட்டியை கொலை செய்தது கருணா அண்ணன் என்று தெரிந்த பிறகும் , அண்ணே அண்ணே மதினியை விட்டுரு அண்ணே என்று காலில் விழுகிறார் சொக்கன். சொக்கனின் காதலி செங்கல் சூளையில் அடித்து எரிக்கப்பட்டு கொண்டிருக்கிறாள். இந்தப் பக்கம் ஆதியின் மனைவியும், குழந்தையும் கருணாவால் அடிக்கப்படுகிறார்கள்.
ஆதியை கொன்றது கருணா தான் என்று சொக்கனுக்கு தெரிகிறது. பாட்டியை கொன்றதும் கருணா தான். தன் காதலியை தன் மதினியை அடிப்பது கருணா தான் என்று சொக்கனுக்கு தெரிகிறது. உடனே நியாயத்தின் பக்கமெல்லாம் கருணா செல்லவில்லை. வேறு வழி தெரியாமல் கருணாவை கொலை செய்கிறார் கர்ணன். அந்தக் காதலியை. மதினியை உயிரோடு விட்டிருந்தாலே சொக்கன் நியாயத்தை பேசி இருக்க மாட்டார். சொக்கனால் யாரை வேண்டுமானாலும் அடிக்க முடியும், ஆனா விட்டுடுணே விட்டுடுன்னு சொக்கன் கதறுகிறார் இது அவர் விசுவாசம் என்று சொல்கிறார்கள்.
விசுவாசமென்றால் பாட்டியை கொன்ற கருணாவிடம் எதற்கு கெஞ்சிக்கேட்க வேண்டும். கடைசியில் யாரையும் விடாமல் கருணா கொன்றுவிடுவார் என்ற பயத்தில்தான் சொக்கன் கருணாவை கொல்கிறார்.
இது விசுவாசம் மட்டும் தானா? உள்ளுக்குள் சாதி இல்லையா? அந்த சோறு போட்ட சாதி அதில் இருக்கும் அண்ணன் என்ன தப்பு செய்தாலும் காதலியை கொலையே செய்ய துணிந்தாலும் அவரிடம் கெஞ்சவேண்டுமென்பது சாதிய கண்ணோட்டமில்லையா? இதை வெறும் action படமாக பார்க்க முடியுமா?
விசுவாசம் என்ற சாதிய விழுமியத்தை இயக்குநர் வைக்கிறார்.
இதெல்லாம் இயக்குநருக்கு தெரியாமல் இல்லை, கருணாவின் வீட்டில் ஒதுக்கப்பட்ட இடத்திலேயே தான் சொக்கன் தங்க வைக்கப்பட்டிருக்கிறார். காட்சிகளில் காட்டுகிறார்கள். கருணா ஒரு காட்சியில் நாங்க சோறு போட்டோம் அப்புறம் ஏண்டா ஆதி குடும்பத்துக்கு உதவி செய்யற என்று கேட்கும்போது, அதற்கு பதில் சொல்லும் சொக்கன் அவர்கள் என்னைய குடும்பத்துல ஒருத்தனா நடத்தினாங்க என்கிறார்.
அப்படியிருக்கும் ஆதியை காவு கொடுத்து கருணா பக்கம் நிற்பதென்பது சாதிய விசுவாசமா? சோறு போட்ட பாட்டி கொல்லப்படும்போது கூட பாட்டி பக்கம் சொக்கன் நிற்கவில்லை கருணா பக்கமே நிற்கிறார் என்று கதை காட்டப்பட்டுள்ளது.
திரைக்கதையை மண், பொன், பெண் என்று இயக்குநர் பிரித்திருக்கிறார். இந்த மூன்றின் மேலே வைக்கும் ஆசையே துன்பத்துக்கு காரணம் என்பதைப்போல கருத்தை சொல்ல வருகிறார் இயக்குநர். சினிமா எவ்வளவு மாறிவிட்டது இன்னுமா பெண்ணை பொருளாக பார்க்கக்கூடிய சிந்தனை. அது சமூகத்தில் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம், அந்த பொதுபுத்தியை எடுத்து கதை விமர்சித்திருந்தால் பரவாயில்லை ஆனால் திரைக்கதையின் ஆதாரப்புள்ளியே அதுதான. பொதுப்புத்தியில் ஊறிப்போன சாக்கடையான விழுமியங்களை இயக்குநர் கொண்டு வந்துள்ளார்.
ஒரு பெண் உயிருடன் இருப்பவள் அல்ல அவர் பொருளைப்போன்றவள் என்னும் நிலவுடமை ஊசிப்போன இன்னொரு வடை தான் இந்தத்திரைக்கதை.. இப்படி திரைக்கதையை நொண்டிப்பார்த்தால் ஊசிப்போன வாடை வருகிறது.
இப்போது தனிநபர்களை வில்லனாக காட்டுவதை விட ஒரு சிஸ்டம் வில்லனாக காட்டப்படுகிறது. இப்போது jஜெய்பீம் படத்தில் போலீஸ் கஸ்டடி கொலைகள் தான் வில்லன். அதேபோன்று விடுதலை விசாரணை படங்களில் கூட இதை சொல்லமுடியும். இந்தப் பக்கம் வலதுசாரி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் போதை உலகத்தை வில்லனாக வைக்கிறார். சார்பாட்ட பரம்பரை படத்திலும் இவர் தான் வில்லன் என்று சொல்ல முடியாது. மாநாடு படத்தில் இசுலாமியரை மோசமாக சித்தரிக்கும் சிஸ்டம் வில்லன். சித்தா படத்தில் pedophile வில்லன். goodnight படத்தில் குறட்டை வில்லன் என்று திரைக்கதைகள் மாறிக்கொண்டிருக்கிறது.
breaking bad , money heist, squidd games என்று ott க்களில் வில்லன்கள் சிஸ்டமாக உள்ளார்கள். பீகில் படத்தில் வில்லன் ஸ்போர்ட்ஸ் அரசியல், துணிவு படம் லோக்கல் பேங்க் பிரச்சினைகள் என்று கதை சொல்லல் முறை மாறிக்கொண்டிருக்கிறது. இப்பவும் ஹீரோ வில்லன் விசுவாசம், விவேகம் நட்பு துரோகம் என்று எத்தனை நாளைக்கு வேட்டியை ஏற்றிக்கட்டிக்கொண்டு [பழைய நிலப்பிரபுத்துவ விழுமியங்களை பேசிக்கொண்டிருக்க போகிறோம்.
கிராமம் என்றாலே சண்டை வெட்டு குத்து படங்கள் தானா. கிராமத்தில் சொல்லவேண்டிய கதைக்களங்கள் இல்லவே இல்லையா? பாரதிராஜா காட்டாத பிரச்சினைகளா ? பாரதிராஜா படத்தில் சாதி சாதி மறுப்பு மற்றும் காதல் பிரதான பிரச்சினைகளாக பேசப்பட்டிருக்கும், கள்ளிப்பால் போட்டு கொலை செய்யப்படும் பெண் சிசுக்கொலைகளுக்கு எதிராய் எடுத்த படம் தான் கருத்தம்மா? அது கிராமத்துக்கே உண்டான தனித்துவமான பிரச்சினை அந்த இடத்தைப்பற்றிய ஆய்வு.
தன் கிராமத்தில் இருக்கும் சொந்த சாதி விடயங்களை கூட விமர்சனக் கண்ணோட்டத்துடன் எடுத்தவர் பாரதி ராஜா. கிராமங்களில் அழகான உணர்வுகளே இல்லையா. நேற்று மதுரை பற்றி எழுதியிருந்த போது நண்பர்கள் மதுரையில் இதெல்லாம் நடப்பதில்லையா என்று எழுதியிருந்தார்கள், எல்லா ஊரிலும் நடப்பதைப்போல இங்கும் சில விடயங்கள் நடக்கின்றன, ஆனால் ஒட்டுமொத்த மதுரையும் மோசமான ஊரா? இங்கும் எல்லா ஊர்களில் உள்ளவர்களை போல சாதி வெறியர்கள் உள்ளார்கள் , ஆனால் அவர்கள் பெரும்பான்மை இல்லை.
சரி இந்தப் [படத்தில் சசிகுமார் சூரிக்கு பின்னால் நிற்கிறார். சசிகுமார் மார்க்கெட் இருக்கும் ஹீரோ சூரி காமெடியன் இந்த ரோலை சூரிக்கு நெருக்கமாக இருக்கும் சிவகார்த்திகேயனிடம் கேட்டிருந்தால் நடித்திருப்பாரா? ஆனால் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் தான் சசிகுமார் பின்னாலிருந்து அடக்கி வாசித்திருக்கிறார். இந்த துரோகத்தை பற்றிய படத்தில் நடித்தவர் சசிகுமார் மதுரைக்காரர் தானே?
மதுரைக்காரர்கள் பற்றி அமீர் பிரச்சினையின் போது கரு பழனியப்பன் சொல்வார் . அமிருக்காக அப்போதே கூட இருந்தவர் சசிகுமார் சசிகுமார் உதவி இயக்குநர் தான். பருத்தி வீரன் படத்துக்கு சசிகுமார் அன்றே அமீருக்கு ஒரு கோடி கொடுத்துள்ளார். அது அண்ணன் தம்பி போன்ற நட்பு தான், அமீர்சொந்த மதமா இல்லை சசிகுமார் சாதியா? அமீர் சிவகுமார், சூர்யா பழக்கத்துக்காக அந்தப் பக்கம் இந்தப் பக்கம் கடன் வாங்கி பருத்தி வீரனை முடித்திருக்கிறார் அவரும் மதுரைக்காரர்.
எனக்குத் தெரிந்து சாதி பார்க்காமல் அண்ணன் தம்பியாக பழகும் மதுரைக்காரர்களை நிறைய பேர் எனக்குத்தெரியும். இது துரோகத்தின் ஊருமல்ல,, சாதியின் ஊருமல்ல. இங்கும் சாதி பிரச்சினை தலைவிரித்தாடும் இடங்கள் உண்டு . ஆனால் முற்போக்கு சக்திகளும் உண்டு. தனிப்பட்ட முறையில் மதுரையில் மட்டுமே இதெல்லாம் நடக்கிறதா, அதென்ன இழுத்து இழுத்து பேசினால் மதுரை மொழி என்று யார் சொன்னது. வெறும் போறாய்ங்க வராய்ங்க இழுத்து இழுத்து பேசுவது மட்டுமே மதுரை மொழியா? இங்கு ஆடை என்று எடுக்கும்போது கூட இங்கு யாரும் pant shirt கூட போடுவதில்லை என்று template மதுரையை காட்டுகிறார்கள். என்றாவது ஒருநாள் ஒரு நல்ல மதுரை படத்தை பார்ப்பேன் என்னும் நம்பிக்கை உள்ளது.
"கருடன்" திரையரங்கில் பெரிய opening, வெற்றிப்படம் ஆனால் அதில் சொல்லப்பட்டதெல்லாம் சரியா? சண்டை காட்சிகளை விடுத்து கதையை நோண்டினாலே அத்த்னை ஓட்டைகள், இன்னொருபக்கம் அரசியலாக பார்த்தால் கூட ஊசிப்போன வடையாகவே இருக்கிறது, மண், பொன்னுடம் பெண்ணை ஒப்பிட முடியுமா? ஒரு male gaze என்ற வார்த்தையை தீபா லட்சுமி தோழர் சொல்வார் அப்படி ஒரு male gaze மோசமான விடயங்களை கதாநாயக பிம்பத்துடன் காட்டும்படம் தான் "கருடன்"
கடைசியாக கருடன் , நியாயமில்லை என்றால் சமன்படுத்திவிடும் என்கிறார், அப்படியென்றால் இதற்கு சூத்திரதாரி யான அமைச்சர் உயிருடன் தான் இருக்கிறார். நல்லவர்கள் குடும்பமே நாசமாக்கிருக்கிறதே அதெல்லாம் கருடன் கணக்கில் சேராதா? கருடன் என்ற குறியீடு கூட பலம் பொருந்தியவன், பெருமாளுக்கு பக்கத்திலிருக்கும் பலசாலி என்னும் வைணவ குறியீடாகவே காட்டப்பட்டிருக்கிறதோ? இந்த கருடனும் கோவில் அதன் நிர்வாகத்தை பார்ப்பவராகவே பலசாலியாகவே இருக்கிறார் அல்லவா? மொத்தத்தில் கருடன் பிற்போக்கின் கண்ணாடி.
Friday, 31 May 2024
MAD COMPANY == தனிமையை நிரப்பும் வியாபாரம் == SPOILER ALERT
முதலாளித்துவம் வேர்களை பிடுங்கி எரிகிறது. பணத்தேவைக்கு நம்மை வெளியூருக்கு அடித்து துரத்துகிறது. நண்பர்களை வெவ்வேறு சமூக அடுக்குகளில் நிறுத்துகிறது. ஒன்றாக இருந்த நண்பர்கள் வர்க்கமாக உடைந்து கொண்டே இருக்கிறார்கள் . கூட்டுகுடும்பங்கள் தனிகுடும்பாகிறது. அண்ணனுக்கு வேலை சென்னை என்றால் தம்பி மதுரை இன்னொரு தம்பி சிங்கப்பூர் என்று குடும்பங்கள் இயல்பிலேயே தனித்தனியாகிறது. அது அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கணவன் ஒரு ஊரிலும் மனைவி ஒரு ஊரிலும் என்று பொருளாதாரம் தேவைகள் எந்த உறவையும் மாற்றிக்கொண்டே இருக்கிறது. முதலாளித்துவம் எந்த உறவையும்விட பொருளாதாரமே முக்கியமானதாக்குகிறது.
அந்தப் பொருளாதாரம் தனிப்பட்ட உறவுகளை நட்பை, காதலை, திருமணத்தை, உறவுகளை, குடும்பம் என்னும் அமைப்பை அனைத்தையும் மாற்றுகிறது. ஒரு காலத்தில் புனிதமென்றல்லாம் பார்க்கப்பட்ட உறவு, நட்பு, காதலெல்லாம் இந்த முதலாளித்துவ தாக்குதல்களால் செயலிழந்து விட்டன. ஈரமிருக்கும் இடங்களில் எல்லாம் காய்ந்திருக்கிறது. நம் மனதளவில் ஈரமே இல்லாத வறண்ட மனதுடைவராக மாற்றுகிறது முதலாளித்துவம்.
கொஞ்ச நாட்களுக்கு முன்னே "பர்ஹானா " என்றொரு படம் தனிமையில் இருப்பவர்கள் பேசுவதற்கு ஒரு கம்பெனி அந்த முகத்தை மறைத்துக்கொண்டு பேசும் நபரைப்பற்றி நமக்கு எந்த தகவலும் இருக்காது, ஆனால் அந்தத்தனிமைக்கு ஒரு உறவைபோல போனில் பேசுவதைப்போல ஒரு நிறுவனத்தில் நாயகி வேலை செய்வார். அதாவது emotional service என்று சொல்கிறார்கள், அந்த service கொடுக்கும் நிறுவனத்தைப்பற்றி பர்ஹானா பேசியிருக்கும். 80 களில் இப்படி ஒரு கதை சொல்லியிருந்தால் இது எல்லாம் கதையா என்று சிரித்திருப்பார்கள் சொல்லப்போனால் இப்படி ஒரு சிந்தனைப்போக்கே இயக்குனர்களுக்கு வந்திருக்காது.
ஒரு கலை ஏன் ஒரு கற்பனைகூட சமூகத்தின் பிரதிபலிப்பாக இருக்குமல்லவா. பர்ஹானா படத்தில் போன் கால் மூலமாக emotional service செய்வார்கள். அப்படியொரு கதையே "தனிமையை" விலை பொருளாக விளைவிக்கும் சமூகத்தில் தானே உற்பத்தி செய்ய முடியும் . அப்படி ஒரு வெப் சீரிஸ் தான் "MAD COMPANY ".
ரெட் கார்டு கொடுக்கப்பட்ட நடிகர் ஒரு நிறுவனத்தைத் தொடங்குகிறார். நிறுவனத்தின் நோக்கம் emotional service. அம்மா, அப்பா, மனைவி, காதலி. மகள் என்று மக்கள் தேவைக்காக நடிக்க வேண்டும் அதற்கொரு application. அந்த நிறுவனம் நடத்தும் போது ஏற்படும் சிக்கல்கள், நடிப்பு பற்றிய உரையாடல், ஒவ்வொரு கதைக்கு பின்னால் இருக்கும் emotional தேவைகள் என்று புதிய கதைக்களம். தமிழில் crime, அரசியல் என்று அரைத்த மாவையே அரைக்காமல் புதிய கண்ணோட்டத்துடன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.
எத்தனை விதமான emotion தேவைகள் உண்டு என்பதை நல்ல விறுவிறுப்பாக சுவாரசியமாக கொடுத்திருக்கிறார்கள். அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். இந்தக் கதையை விட இந்தக் கதை உருவான சமூக பொருளாதார தேவைகளே இந்தக் கதையை முக்கியமான கதையாக மாற்றியிருக்கிறது, குறைந்தபட்சம் எனக்கு அப்படி ஒரு நவீன கதையாக உளவியல் ரீதியான கதையாகத் தோன்றியது.
இருந்தாலும் வந்தது ஆஹா ott , பிரசன்னா எல்லாம் தமிழக மக்கள் மனதில் பெரிய ஸ்டார் இல்லை என்பதிலேயே கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் சீரிஸ் என்று தோன்றியது. தமிழிலும் புதிய கதை சொல்லல்களும், புதிய களங்களுடன் வரும் கதைகளும் இருக்கவே செய்கிறது. மார்க்கெட் பெரிதாக இல்லாததால் கண்டுகொள்ளப்படாமல் போவதால் மறுபடியம் அரைத்த மாவுக்கு வந்துவிடுகிறோம்.
2024 இல் சட்டென்று யாரிடமாவது பேசவேண்டுமென்று போனை நோண்டுகிறோம், போன் பேச முடியாதவர்கள் whatsapp மட்டும் பண்ணுங்கள் கொஞ்சம் பிஸி என்று சொல்லிவிட்டால், ஆவேஷம் பகத் பாசில் போல ஆகிறோம். கடைசியில் உணர்ச்சிகளை சினிமா, நாவலில் தேடிக்கொண்டிருக்கிறோம். கடைசியில் உணர்ச்சிகளுக்கு OTT யில் சரணடைகிறோம்.
ஏன் மஞ்சுமல் பாய்ஸ் படம் ஓடுகிறது, அப்படி ஒரு நட்பு 2024 இல் இருக்க வாய்ப்பில்லை. முதலாளித்துவத்தில் உணர்ச்சிகளே உணர்வுகளே fantasy ஆகிவிட்டது. அதனால் அப்படி ஒரு நட்பை திரையில் பார்த்தவுடன் இல்லாத ஒன்றை பார்த்தால் ஓரு உணர்ச்சி பீறிடும் அல்லவா அது திரையரங்கில் ஏற்பட்டது , முன்பெல்லாம்
பாட்ஷா படம் போல படம் பார்த்தால் தான் goose bumbs வரும், இப்போது எல்லாம் எளிய உணர்ச்சிகளை எதார்த்த உணர்ச்சிகளை காட்டினால் கல்லா காட்டுகிறது இயல்பில் நம் வாழ்வில் வெற்றிடத்தை சினிமா, ott இவை நிரப்புகின்றன.
சொல்லப்போனால் இது தான் "mad company ". உணர்ச்சிகள் இல்லாத இடத்தையெல்லாம் சினிமா ott மூலம் நிரப்புவது. அப்படி சிலருக்கு குடி mad company ஆகிறது, சிலருக்கு இளையராஜா இசை mad company ஆகிறது.
இந்த mad company என்பதே metaphor தான். நிஜத்தில் தேட முடியாததை virutual ஆகத் தேடுவது mad company சொல்லப்போனால் facebook writeup கூட mad company யாக இருக்கலாம்.
Thursday, 30 May 2024
வார்த்தைக்கு நடுவில்
இருக்கும் இடைவெளியில்
எழுதப்படாத வார்த்தைகள்
ஒளிந்துகொள்கின்றன, ....!
ஒவ்வொரு வார்த்தையும்
இன்னொரு வார்த்தையுடன்
பிரிந்தே இருக்கிறது.
ஒவ்வொரு எழுத்தும்
இன்னொரு எழுத்துடன் பிரிந்தே
இருக்கிறது.........
பிரசித்திப்பெற்ற
புதினத்தை படித்துமுடித்த
பின் மூடியே வைக்கப்படுகிறது.........
நனைத்துவிட்ட
அருவி ......முதுகுத்தண்டிலோ
தலையிலோ தங்குவதில்லை....
சிலரின்
நினைவுத்துளிகள் மட்டும்
துடைக்கப்படாத துளியாக
Monday, 20 May 2024
HOTSPOT == Tamil Movie Review == Spoiler Alert
நான்கு கதைகள் நான்குமே அரசியல் பேச முற்பட்டிருக்கிறது. சமூகத்துக்கு தொடர்பே இல்லாத கதைகளை விட ஏதோ ஒரு விதத்தில் சமூகத்துக்கு தொடர்பான கதைகளை அரசியல் கண்ணோட்டத்துடன் சொல்லியதற்கு முதலில் வாழ்த்துகள். நான்கில் மூன்று கதைகள் சமகால ஆண், பெண் உறவுச் சிக்கல்களையும், ஒரு கதை குழந்தைகள் சார்ந்த கதையாகவும் உள்ளது. இந்த நான்கு கதைகளையும் ஒரு உதவி இயக்குநர் தயாரிப்பாளருக்கு சொல்வதைப்போல, அந்த தயாரிப்பாளரின் வாழ்வுடன் ஒத்துவருவதாகவும் காட்டி இணைத்தது, இயக்குநரின் திரைக்கதை யுக்தியை க் காட்டுகிறது.
"Fame Game " என்ற குழந்தைகளை மையமாக வைத்தெடுக்கப்பட்ட கதை எனக்குப் பிடித்திருந்தது. airtel super singer மாதிரி நிகழ்வுகளில் குழந்தைகள் காதல் பாடல்கள் எல்லாம் பாடும்போது எரிச்சல் வரும். குழந்தைகளை வைத்து இவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று கோபம் வரும். குழந்தைகளை வைத்து வேலை வாங்குவது சட்டப்படி குற்றமென்றால், அதை வைத்து பிசினஸ் செய்யும் தொலைக்காட்சிகள் தண்டிக்கவே பட்டதில்லையே. சொல்லப்போனால் அனைத்து சேனல்களிலும் குழந்தைகளை மையப்படுத்தும் நிகழ்ச்சிகள் இருந்துகொண்டு தான் இருக்கிறது. சரி மணிரத்தினம் "கடல்" என்ற படமெடுக்கும் போது அந்த நாயகிக்கு 15 வயதாம், இந்த சினிமாக்காரர்கள் தான் நுட்பமான உணர்வு கொண்டவர்களாம். "Ethics " என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்பார்கள்.
குழந்தைகளை இந்த மாதிரி நிகழ்வுகள் காவு வாங்குகிறது. கலாச்சார ரீதியாக போலியான மீடியாவுக்கு இந்தக் குழந்தைகள் expose ஆகிறார்கள். மீடியாவுக்கு போன குழந்தையுடன் உரையாடினால் அந்தக் குழந்தை எவ்வளவு போலியானதாக மாறியிருக்கிறது என்பதை உணர முடியும். சிறுவயதில் சம்பாதிப்பதைத் தாண்டி போலியாக பிழைப்புவாதியாக எப்படி மாறவேண்டும் என்பதையும் குழந்தை கற்றுக்கொள்கிறது. அந்தப் போலித்தனங்களை இந்த "Fame Game " கதை விமர்சனபூர்வமாக காட்டுகிறது.
பிரச்சினைகளை சுட்டிக்காட்டும் விதத்தில் இது ஆகச்சிறப்பான கதை மாற்றுக்கருத்து இல்லை ஆனால் பிரச்சினையை சரியான முறையில் பேசுகிறதா? நாயகனான கலையரசனுக்கு அவர் பெண் "எம் ஜி ஆர் " ஆக நடிக்கும் போது பிரச்சினை இல்லை "ரகுவரனாக " நடிக்கும்போது பிரச்சினை இல்லை. அந்த மீடியா எல்லாம் ஆரம்பத்தில் அந்த நாயகனுக்கு பிரச்சினை இல்லை தான். எப்போது பாலுணர்ச்சி தூண்டும்படி
ஸ்கிரிப்ட்டில் அந்தச் சிறுமி நடிக்கும்போதே தந்தையாகிய கலையரசனுக்கு பிரச்சினை என்று தோன்றுகிறது.
கடைசியாக அந்தச் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆட்படுத்தப்பட்டு கொல்லப்படுகிறாள். கதையில் அந்தச் சிறுமி பாலியல் ரீதியாக கொல்லப்படவில்லை என்றாலோ, சிறுமி இரட்டை அர்த்த ஸ்கிட்ட்டில் நடிக்கவில்லை என்றாலோ கலையரசனுக்கு கோபமே வந்திருக்காது. வன்புணர்வுப்பட்டால் தான் இரட்டை அர்த்தம் பேசுவது மட்டும் இங்கு பிரச்சினையா? சிறுவயதிலேயே பெரியவர்கள் போல குழந்தைகள் உணர்வு மாற்றப்படுகிறதே, ஒரு நூறு பேர் கை தட்டுவார்கள் என்பதற்க்காக அந்தக் குழந்தைகளின் மனநலன் பாதிக்கப்படுமே அது எல்லாம் பரவாயில்லையா?
சித்தார்த் நடித்த "Escaype Live " என்றொரு தொடர் உண்டு. அதில் இதே மாதிரி ஒரு பிரபலக் குழந்தையின் கதை அதில் அந்த குழந்தையின் குணாதிசயம் சம்பளம் ஏற ஏற மாறிக்கொண்டிருப்பதை காட்டியிருப்பார்கள். அப்படிக் காட்டியிருந்தால் இது பல குழந்தைகளின் கதையாக மாறியிருக்கும். அங்கு ஒரு வன்புணர்வு வந்ததால் தான் பிரச்சினை என்று காட்டும்போது கதை மீடியா குழந்தைகளை abuse செய்வதை நோக்கி போகிறதா? இல்லை குழந்தை abuse உடன் சுருங்கிக்கொள்கிறதா?
இந்தக் கதையை பார்க்கும் பெற்றோர் , child abuse எங்கில்லை ? நாம் good touch bad touch சொல்லிக்கொடுத்தால் போதுமானது, மற்றபடி பிரபலமாக இருப்பது, சிறுவயதிலேயே சம்பாதித்து புகழ் வெளிச்சத்தில் இருக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற குழந்தைகளின் விழுமியங்கள் வீழ்ச்சி அடைவதெல்லாம் முக்கியமில்லை என்றாகிவிடுமல்லவா? இங்கு வன்புணர்வு வலிந்து திணிக்கப்பட்டதாக உள்ளது. ஏன் மீடியாவில் மட்டும் தான் குழந்தைகள் abuse செய்யப்படுகிறார்களா? வீட்டில் சித்தப்பா, பெரியப்பா மாமா ஏன் சொந்த அப்பா என்று abuse கள் அதிகமிருப்பது வீட்டில் தான். அந்த குழந்தையின் மரணம் கதை சொல்ல நினைத்ததை மடை மாற்றுகிறது. அரசியலை இன்னும் கூர்மையாக பேசவில்லை .
இருந்தாலும் ஒரு விவாதத்தைத் தூண்டும் கதை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
காலம்காலமாக திருமணமாகிவிட்டால் பெண்கள் ஆண் வீட்டுக்கு வருகிறார்கள். இது சாதாரண விடயமாக
ஆண்களுக்குத் தோன்றலாம், ஆனால் பெண்ணின் கண்ணோட்டத்தில் ஒரு மரத்தை வேருடன் பிடுங்கி வேறொரு தொடர்பே இல்லாத இடத்தில் ஊன்றுவதைப்போன்றது. அதைப் பற்றி பேசுகிறது "Happy Married Life". ஆண்கள் தாலி கட்டிக்கொள்ள வேண்டும், பெண் வீட்டுல் ஒரு மாதமும் ஆண் வீட்டில் ஒரு மாதமும் இருக்கவேண்டும் என்று தீர்வை இயக்குநர் சொல்கிறார்.
இங்கு ஆண், பெண் உறவில் அவர்கள் வீட்டில் இவர்கள் இருப்பதும், இவர்கள் வீட்டில் அவர் இருப்பதும் மட்டும் பிரச்சினை அல்ல. ஒரு அம்மா மகனைக் கையாள்வதற்கும் மகளைக் கையாள்வதற்குமே நிறைய வித்யாசங்கள் உண்டு தானே. நிலப்பிரபுத்துவ அம்மா தன் மகளை அடிமையாகவும், மருமகனை ராஜகுமாரன் போலவும் நடத்தலாம் அல்லவா? பெண்ணடிமை எங்கிருந்து தொடங்குகிறது, தாய் வழிச் சமூகமாக இருந்தபோது கூட்டமாக இருப்பார்கள், யார் வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் உறவு வைத்துக்கொள்வார்கள். அந்தக் கூட்டத்துக்கு தலைவி ஒரு பெண் தான்.
என்று சொத்துடமை சமூகம் வருகிறதோ, அங்கு இது என் குழந்தை என் விந்துக்களில் பிறந்த குழந்தை என்றாகிறது. எப்படி இது என் சொத்து போல, இது என் மனைவி என்றாகிறது. சொட்டுடமையின் அங்கமாகிறாள் பெண். ஆணாதிக்கத்தின் ஊற்றே சொத்துடமை தான். இங்கு மனைவி மட்டுமே கருத்தரிக்கிறாள், அப்போதே கணவனின் சொத்தாகிறாள், அந்த ஆதிகமான மனநிலை எங்கிருந்து கணவனுக்கு வருகிறதென்றால், சொத்துடமை மூலம் கட்டப்பட்ட குடும்பம் என்ற அமைப்பினுள் தான்.
"குடும்பம்" என்னும் அமைப்பே சொத்துடமை அமைப்பு தான், இறந்த பிறகு வாரிசு வேண்டாமா என்பதே சொத்துக்களை காப்பதற்கு தான். அப்படியென்றால் யாரு வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம் என்பது அர்த்தமல்ல, அந்த காட்டுக்குள் இருந்த சமூகம் மாறி குடும்பம் என்ற அடுத்த கட்டத்துக்கு நகர்வதைப்போல சோசலிசம் கம்யூனிசம் வரும்போது குடும்பம் என்ற அமைப்பு வேறு வடிவமெடுக்கும். அங்கு சொத்துடமை இருக்காது, அதனால் பெண்களை சொத்தாக கௌரவமாக பார்க்கும் பாணி இருக்காது. பெண்கள் காதலிக்கலாம் பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்துவிட்டு இன்னொரு மனம் புரியலாம் அதற்கு குற்ற உணர்ச்சி தேவையல்ல என்பதைப் போன்ற சமூகம் மாறும்.
"குடும்பம்" எப்போதும் ஒரே போன்று இருந்ததால 1980 களில் இருக்கும் கூட்டுகுடுமபம் இப்போது அல்ல. அண்ணன் வெளிநாட்டில் இருக்கலாம் தம்பி வெளியூரில் இருக்கலாம், கூட்டுக்குடும்பம் அழிந்து தனியான குடும்பமாக வடிவம் மாறுகிறதல்லவா அதுவே அடுத்த கட்டத்துக்கு இன்னும் மாறும், அது அப்படிதான் இருக்க முடியும். அப்படியிருக்க வரலாற்று ரீதியாக அணுக வேண்டிய பிரச்சினையை வெறும் சடங்குகள் வைத்தே தீர்க்க முடியும் என்று இயக்குநர் தீர்வு சொல்கிறார்.
"தக்காளி சட்னி" உனக்கு வந்தால் ரத்தம் எனக்கு வந்தால் தக்காளி சட்னி என்று ஆண் பெண் உறவு உள்ளதென்பதை சொல்கிறது. இந்தக் கதை முழுவதும் விறுவிறுப்பு நிறைய ட்விஸ்ட்கள் உண்டு, கதை எதார்த்தத்தை பிரதிபலிக்கிறதா? என்றால் இல்லை. software இல் வேலை செய்யும் நாயகன், கம்பெனி கழிவறையில் masturbate செய்கிறார், அது CCTV யில் பதிவாகி, கம்பெனி குரூப்பில் போட்டுவிடுவதால் அவர் பணிநீக்கம் செய்யப்படுகிறார்.
கம்பெனியில் எந்த வேலை இருந்தாலும் cctv யை கழிவறையில் வைப்பார்களா? software company எப்படி இயங்குகிறது , அங்கு கழிவறைகள் எப்படி இருக்கும் என்று புரிதலே இல்லாத காட்சியமைப்பு. software company யை விடுங்கள் வேறெங்காவது இப்படி ஒரு கழிவறையில் cctv யை மறந்தும் கூட வைப்பார்களா?
சரி அப்படியே வைத்தாலும், இப்படி ஒரு காட்சி வருகிறதென்றால், அதை பதிவு செய்து whatsapp குழுமத்தில் பகிர்பவரும் குற்றவாளிதானே . இதெல்லாம் தவறென்று தெரியாத தற்குறிகள் தான் software company யில் வேலை செய்கிறார்களா?
இந்த சினிமா இயக்குநர்களுக்கு IT துறை மேல் என்ன காண்டு என்று தெரியவில்லை, ஆபீஸ் வரும் நாயகன் அங்கே கழிவறையில் mastrubrate செய்கிறார், அதை cctv படம் பிடிக்கிறது என்று ஒரு காட்சி. சரி அப்படியே அவர் ஒன்றுக்கு போகிறார் என்று வைத்துக்கொள்வோம், அதை படம் பிடித்தால் கூட தவறு தானே, இவ்வளவு மொக்கையாக எப்படி யோசிக்க முடிகிறது. அதாவது IT துறை elite என்றாலே ஆபீஸ் என்று கூட பார்க்காமல்
மோசமாக இருப்பார்கள், அதை பகிரக்கூடாது என்று கூட தெரியாத நுண்ணுணர்வில்லாதவர்கள் என்பது இயக்குநரின் பார்வை.
திரைக்கதை "அதிர்ச்சி" என்ற விழுமியம் மட்டுமே இருந்தால் சிறந்த கதை என்று யாரோ ஒருவர் சொல்லியிருப்பார்கள் போல , அதிர்ச்சி மேலே அதிர்ச்சி வைத்திருக்கிறார் இயக்குநர் . விதயசமாக இருக்கிறது ஆனால் எதார்த்தமாக இல்லை. இது வெறும் தொடக்ககாட்சி மட்டும் தான், அதைத்தாண்டி
நிறைய அதிரிச்சிகள் இந்தக் கதையிலுண்டு..
நாயகன் lust வேறு love வேறு என்று யோசிக்கும் நாயகனாக காட்டப்படுகிறார். அவர் காதலிப்பது ஒரு பத்திரிகையாளர் பெண் மணியை. காஜு பிடித்த காதலன் என்பதை அந்த பத்திரிகையாளர் கண்டுபிடிக்க மாட்டாரா? காதலன் ஆண் விபச்சாரியாக இருக்கிறார், காதலி ஒரு article எழுதும் போது அதை கண்டுகொள்கிறாள்.
அடுத்த பெண்களிடம் காசுக்காக உறவு கொள்ளும் ஆண் , அந்த இடத்தில customer ஆக அம்மாவே வந்தால் ? ஒரு சின்ன புரிதலின்மையில் அம்மாவை தவறாக நினைக்கும் சூழல் நாயகனுக்கு ஏற்படுகிறது. காதலன் ஆண் விபச்சாரம் செய்யலாம் ஆனால் அம்மாவை அந்த இடத்தில் பார்த்தால் கலாச்சார காவலனாக மாறுகிறார் . ஒரு பெண் love வேறு lust வேறு என்று காதலன் இருக்கும்போதே அவர் தத்துவத்தை அவரிடமே பேசிவிட்டு இன்னொருவருடன் உறவு கொள்வேன் என்று சொன்னால் ஆணுக்குள் இருக்கும் கலாச்சார காவலன் என்ன செய்வார் என்பதை பல ட்விஸ்ட்களுடன் சொல்கிறது இந்தக் கதை.
ஆணுக்கு எந்த நீதியோ பெண்ணுக்கும் அந்த நீதி தான் என்னும் கண்ணோட்டத்தில் இந்தக் கதையை ஏற்றுக்கொள்ளலாம். love வேறு lust வேறென்றாலும் சில விழுமியங்கள், ஒழுக்கவிதிகள் காதலன், காதலிக்கு வேண்டுமென்று சொல்கிறது கதை. பெண்களுக்கு ஆண்கள் வேறொருவருடன் உறவு கொள்வது மட்டுமே பிரச்சினையா? இந்த love, lust என்பதெல்லாம் இயல்பானது, அதை கட்டமைக்கவெல்லாம் முடியாது. அது இருவருக்கான அந்தரங்க விடயமென்பதைத்தாண்டி அதில் பெரிதாக சரி தவறென்று சொல்வதே தவறென்று நினைக்கிறன்.
ஒரு ஆண் நிறைய பேருடன் உடல் ரீதியாக போகிற போக்கில் lust வைத்திருக்கிறார் என்று சொன்னால், கதைப்படியே அந்த பெண் பத்திரிகையாளரை அவர் காதலிக்கவே இல்லை என்று அர்த்தமாகிறது. எப்படி ஒரு பெண்ணைக் காதலித்துக்கொண்டே நிறைய பேருடன் lust ஆக இருக்க முடியும், இதை அந்தக் காதலி காதலனுக்கு விளங்க வைக்கிறாள், அப்படி விளங்க வைக்கலாம் ஆனால் மறுபடியும் காதலில் சேர முடியுமா? அது அந்த இடத்திலேயே உடைந்து விட்டது, சொல்லப்போனால் காதலிக்கும்போதே தான் அவர் வேறு பல உறவுகளில் இருக்கிறார் என்பது தானே நிதர்சனம். அப்படி open relationship என்கிறார்கள் அப்படி இருக்கும் ஒருவனை வம்படியாக காதலி என்று சொல்வது டாக்சிக் ஆகாதா? இருவருக்கும் ஒத்து வராது என்று விலகுவது தானே சரி? அதைத்தாண்டி ஆணாதிக்கமென்றால் என்னவென்று வகுப்பை வேறு அந்தக் காதலி எடுக்க வேண்டியதாக உள்ளது.
"கல்லானாலும் கணவன்" என்று காதலன் என்ன தவறு செய்தாலும் ஏற்றுக்கொண்டு, அவனை திருத்துவது தான் வேலையா? சரி இப்போது திருந்திவிட்டேன் என்று சொல்லிவிட்டு, மறுபடியும் வேறொரு ஆட்களுடன் உறவு கொள்ள மாட்டார் என்று என்ன நிச்சயம்? கலாச்சார ரீதியான விடயங்களை, ஆணாதிக்கத்தை ஒரு சில காட்சிகள் மூலம் ஆணுக்கு உணர்த்திவிட முடியுமா.ஆணுக்கு 25 வயது என்று வைத்துக்கொள்வோம் , 25 வருடங்களில் ஆணாதிக்கவாதியாக வாழ்ந்துவிட்டு ஒரு சில தருணங்களில் மாறிவிடுவாரா? அப்படியிருக்க இந்தக் காதலி என்பவள் தான் ஏமாந்ததாய் உணர்ந்த பின்பு நடுவிரலைக் காட்டி அல்லவா வெளியே வந்திருக்க வேண்டும். அதை விடுத்து அந்த டாக்சிக் உறவுக்குள்ளேயே போய் சிக்கிக்கொள்கிறாள் பெண் பத்திரிகையாளர்.
"Golden rules" என்று இன்னொரு கதை காதலித்த ஆண் தான் பெரியம்மா மகன் என்று உணரும்போது ஏற்படும் கதை தான். காதலிக்கும்போது அண்ணன் தங்கை என்று தெரியாமல் காதலித்தவர்களின் அதிர்ச்சி தான் இந்தக் கதை. சமூகம் சில விழுமியங்களை முன்னே வைத்திருக்கிறது இதெல்லாம் தான் உறவு என்று சமூகத்துக்கு சில விழுமியங்களுண்டு, அது உடைக்கப்படும் போது ஏற்படும் அதிர்ச்சியை இந்தக் கதை சொல்கிறது.
பெரும்பான்மையான ஆண். பெண் பிரச்சினைகளை பேசாமல் எங்கோ ஏதோ ஒரு விதி விளக்காக அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் அதிர்ச்சி கதைகளை படமாக செய்திருக்கிறார்கள். படத்தில் பெரும்பான்மையானவர்களின் பிரச்சினைகள் பேசப்படாமல், elite வாழ்வியல் பிரச்சினைகள் பேசப்படுவதால் படத்தில் ஒரு ஒட்டாத அந்நியத்தன்மை உண்டு. முக்கியமான ஆண், பெண் உறவுச்சிக்கல்களை படம் பேசியதா என்றால் இல்லை என்பேன். ஆண், பெண் உறவுக்குள் இருக்கும் மேலோட்டமான பிரச்சினைகளை அழுத்தமான பிரச்சினைகளை காட்டுவதைப்போல ஒரு பாவனை படத்திலுண்டு.
கலையின் வேலை விவாதத்தை தூண்டுவது, அந்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறது. பொதுபுத்தியிலிருக்கும் மேலோட்டமான முற்போக்கை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர். இயக்குநரின் நோக்கம் சிறப்பானது தான் ஆனால் மேலோட்டமாக உள்ளது, கொஞ்சம் ஆழ்ந்து எடுத்தால் , நல்ல இயக்குநராகக்கூடிய பார்வை அவரிடம் உள்ளதென்று நினைக்கிறேன்.



.jpg)


.jpg)