Friday 3 May 2024

இரயிலில் தொலைந்த "பெண்கள் " தங்களை வெளியே மீட்டெடுக்கும் கதை == Use Me == Dust Bin ==:லப்பாட்டா லேடீஸ் == Laapataa Ladies == Spoiler Alert

 

இரண்டு ஆண்கள் உயிருக்கு உயிராக நண்பர்களாக இருப்பதைப்போல பெண்கள் ஏன் இருப்பதில்லை? இந்தக் கேள்வி எளிய கேள்வி என்றாலும் பதில் எனக்குத் தெரியாமல் இருக்கலாம். ஒரு வேளை ஆண் என்பதாலேயே இந்தக் கேள்வியின் முக்கியத்துவம் எனக்குத் தெரியாமல் இருக்கலாம். ஒரு வேளை இந்தக் கேள்வியின் பதிலை நோக்கி என்னைச் சுற்றியிருக்கும் பெண்கள் நகரந்துவிட்டால் எனக்கான ஆணுக்கான privilege இல்லாமல் போகலாம். இதெல்லாம் அவ்வளவு முக்கியமான கேள்வியா?
"லப்பட்டா லேடீஸ் " படத்தில் இப்படி ஒரு காட்சி வருகிறது, ஒரு வயதான பெண் இன்னொரு பெண்ணிடம் ஒரு உணவைப் பற்றி சொல்கிறாள். ஒரு பிடித்தமான உணவு தன் மகனுக்கும், கணவருக்கும் பிடிக்காததால் செய்வதே இல்லை என்று சொல்கிறார். அப்படியே தனக்கு என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்பது மறந்தே போனதென்கிறார். இப்படித்தான் கணவன், குழந்தை என்று பெண் தனக்கு பிடித்த உணவைக் கூட சமைத்து சாப்பிட முடியாத பெண்ணால் எப்படி இன்னொரு பெண்ணுடன் நட்பாக இருக்க முடியும், அவளுக்கென்று உணவே இல்லாத போது நட்பு மட்டும் இருக்க முடியுமா என்ன?
இப்படிச் சின்ன சின்ன விடயங்களில் பெரிய செய்தியைச் சொல்லிவிட்டுப் போகிறது "லப்பட்டா லேடீஸ்".
படமுழுவதும் பெண்கள், அடிமைத்தனத்தை அப்படியே ஏற்றுக்கொள்ளும் பெண், புருஷன் பெயரை சொல்லாத பெண், படம் வரையும் திறமை இருந்தும் கணவன் படத்தை வரைந்துவிட்டு கட்டில் தலையணைக்குள் பத்துக்கும் பெண், முற்போக்கான பெண், தன் முற்போக்கை மறைத்துக்கொண்டு தான் இன்னொரு இடத்துக்கு போகவேண்டும் என்பதற்க்காக மற்றவர்களை ஏமாற்றும் பெண், கடைவைத்து விட்டு ஆணினமே fraud என்று சொல்லிவிட்டு சொந்தக்காலில் நிற்கும் பெண். இப்படி பலவிதமான பெண்கள் .
பொதுவாக பெண்ணியப்படங்களில் பெண்கள் உடல்ரீதியாக வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுவது, பெண் உடல் சார்ந்த அரசியல், அதை போகப்பொருளாக பார்ப்பது "No means no " என்று பெரிய அரசியலை முன்வைத்து பேசப்படும். "ஆசை" பட பிரகாஸ்ராஜ்கள் "உதிரிப்பூக்கள் " விஜயன் போன்றவர்கள் விமர்சிக்கப்படுவார்களே தவிர "மௌன ராகம் " மோகன் எல்லாம் நமக்கு ஒரு ஆத்தீகவாதியாகவே தெரியாது அல்லவா?
"லப்பட்டா லேடீஸ்" சின்ன சின்ன விடயங்களில் இருக்கும் சுரண்டலை அம்பலப்படுத்துகிறது. பார்ப்பதற்கு சின்ன விடயமாக இருக்கும் ஆனால் பாதிக்கப்படும் பெண்ணின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் விடயங்களை வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது தான் இந்தப் படத்தின் தனித்துவமான விடயம்.
தீபக் என்பவருக்கு திருமணமாகிறது, பெண்ணின் வீட்டில் சடங்குகள் முடிந்து தன்னுடைய வீட்டிற்கு மனைவியை ரயிலில் கூட்டி வருகிறார். முகம் மூடி, கீழே குவிந்திருக்கும் வடக்கத்திய பெண் அவள்.
compartment க்குள் மூன்று திருமணமான ஜோடிகள், திருமண ஜோடிகள் எல்லாம் ஒரே போன்ற உடையை அணிந்திருக்கிறார்கள். பக்கத்துக்கு பக்கத்தில் இரண்டு ஜோடிகள் உட்கார்ந்திருக்க இறங்கபோகும் ஸ்டேஷனில் இன்னொரு பெண்ணை எழுப்பி இறங்கிவிடுகிறார். அவளும் எதுவும் சொல்லாமல் இறங்கி விடுகிறாள். மனைவி மாறிவிடுகிறது.
தீபக் மனைவி வேறொரு ஸ்டேஷனில் இறங்கும் போதே தான் தொலைந்து போனதை உணர்கிறாள்.
குனிந்துகொண்டு இருப்பதால் கணவர் ஷூ மட்டும் தானே அவள் கண்ணுக்குத் தெரியுமல்லவா? முகத்தை மூடிக்கொண்டதால் அவள் தொலைந்து போகிறாள். ஒரு குறியீடாகவே படிமமாகவே அது முக்கியக்காட்சி,
அவள் முகம் மறைக்கப்பட்டிருக்கிறது அவள் குணித்திருக்கிறாள், கடிவாளம் கட்டியதைப்போல கணவன் எங்கு செல்கிறானோ அங்கு தானே செல்லமுடியும்.
தீபக் மனைவி ஸ்டேஷனில் தொலைந்து போகிறாள், ஆனால் அவள் திருமணத்திலிருந்தே தொலைந்து போய்விட்டாள் அல்லவா? அவள் கணவனின் விருப்பம், கணவனின் ஊர், கணவனின் கனவு மட்டுமே அவள் கனவு அல்லவா? இப்படி ஏற்கனவே தொலைந்து போன பூல் குமாரி, இங்கு கணவனிடமிருந்தும் தொலைந்து போகிறாள். அவளுக்கு அவள் ஊரின் பெயர் கூடத்தெரியாது. எங்கிருந்து வருகிறோம் என்பதைச் சொல்லத்தெரியாது. எங்கு போகப்போகிறோம் என்பதையும் சொல்லத்தெரியாது. ஸ்டேஷனில் கஷ்டப்படுகிறான்.
அவள் தொலைந்துபோன அந்த நான்கு நாட்களில் அவள் தன்னைத்தானே மீட்டெடுக்கிறாள். ஒரு வேளை தொலைந்து போகாமல் இறந்திருந்திருந்தால் கணவனின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்திருப்பாள், அந்த நான்கு நாட்களில் மாய் என்ற தள்ளுவண்டி கடைக்கார அம்மாவுடன் நட்பாகிறாள், அங்கு சோட்டு ஸ்டேஷன் மாஸ்டர்,, அப்துல் என்று தனக்கான புதிய உலகத்தை அமைத்துக்கொள்கிறாள். ஒரு வேளை அவள் தொலையாமல் இருந்திருந்தால் கணவன், குடும்பம் என்று தொலைந்து போயிருப்பாள்?
தள்ளுவண்டி வைத்திருக்கும் மாய் வயதானவர், ஆண்களை நம்பாமல் இருப்பவர். தனியாக இருப்பவர், ஆண்கள் என்றால் fraud உபயோகப்படுத்திக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை கொண்டவர். கணவன், மகன் எல்லாரையும் துரத்திவிட்டு தனியாக இருப்பவர்.. அவர்களில் வேலைக்கு செல்கிறாள் பூல் குமாரி, அவருடன் சேர்ந்து வேலை செய்யும்போது தான் எவ்வளவு அப்பாவியாக உலகமே தெரியாமல் வளர்க்கப்பட்டுளோம் என்பதை உணர்கிறாள்.
இன்னொருபக்கம் இடம் மாறிப்போன புஷ்பா ராணி இயல்பிலேயே திருமணம் வேண்டாம் என்ற கொள்கை இருப்பவராக மேல்படிப்பு படிக்கவேண்டும் என்று இருப்பவராக இருக்கிறார். தீபக் வீட்டில் இருக்கும் பெண்களிடம் நட்பாகிறார் புஷ்பா ராணி. அங்கிருக்கும் பெண்களின் திறமையை வெளிகொண்டுவருகிறார். அங்கிருக்கும் விவசாயத்துக்கு தன்னாலான உதவிகளைச் செய்கிறாள்.
புஷபா ராணி அந்த வீட்டில் இருக்கும் இன்னொரு பெண்ணின் வரையும் திறமையை வெளியே கொண்டு வருகிறாள்.
இந்தப்பக்கம் மஞ்சு மாய் பூல் குமரியால் தனியாக சம்பாதிக்க முடியும், ஆனைச் சாராமல் இருக்க முடியும் என்பதை உணர்த்துகிறாள். இப்படி பெண்கள் நட்பாக இருக்கும்போது மலையை பிளக்கும் வேலைகளைக் கூட சர்வசாதாரணமாகச் செய்கிறார்கள் என்று இந்தக் கதை உணர்த்துகிறது. தொலைந்து போன பெண்களை தங்களை கண்டுபிப்பது தான் படத்தின் கதை. சொல்லப்போனால் தொலைந்து போகவில்லை என்றால் அவர்களை கண்டுபிடித்திருக்கவே முடியாதல்லவா?
படம் நல்ல feel good படம், படத்தைப் பார்த்தவுடன் எனக்குத்தோன்றிய விடயம் பிரேசில் நாட்டைச்சேர்ந்த ஒரு பெண் இங்கே கணவருடன் ஊரைச்சுற்றி பார்க்க வருகிறார், வந்த இடத்தில் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுகிறாள், அப்படியிருக்க இப்படி கதையில் வருவதைப்போல feel good ஆக solution இருந்துவிட முடியுமா? காவல்துறை, சாதி என்று அனைத்து நிறுவனங்களும் அந்தத் தொலைந்த பெண்ணிற்கு எதிராக அல்லவா இருக்கும், அப்படி கண்டுபிடிக்க விட்டுவிடுவார்களா இயல்பில். ஆனால் ஒரு புனைவென்று வைத்துக்கொண்டால் நல்ல கதை,
மிதவாத ஆணாதிக்கவாதி தான் பெண்ணை வன்புணர்வு செய்யவில்லை என்று சொல்லலாம், ஆனால் அவள் என்ன உணவு உண்ண வேண்டும், என்ன படிக்க வேண்டும்,, யாரைத் திருமணம் செய்யவேண்டும் என்று சொல்லும்போதே அவன் தீவிரவாத ஆணாதிக்கவாதியாகிறான் அல்லவா? ஒரு பெண் தொலைந்துபோவதற்கு தெரிந்தோ தெரியாமலோ காரணமாக இருக்கிறான் இந்தியக் கணவன். ஒரு பெண் திருமணமானபின்பு சாதியச் சூழலில் அந்தக் குடும்பத்துக்கே சொந்தமாகிறாள். கணவன் அவளை ஒடுக்குகிறான் , குடும்பம் அவளை ஒடுக்குகிறது , அவள் இயல்புத்தன்மையை கெடுக்கிறது .
சில வலிகள் வெளியே தெரியாமல் இருக்கலாம் , அந்த வெளியே தெரியாத வலிகளை யாரும் பேசாத வலிகளைத் தான் இந்த லப்பட்டா லேடீஸ் பேசுகிறது. வன்புணர்வுகளைத் தானி மெல்லிய ஆணாதிக்கங்களை பேசுகிறது.
காட்சியாகவே சில காட்சிகள் கவிதையாக இருந்தது, பூல் குமாரி ஒரு குப்பைத்தொட்டியின் பின் ஒளிந்திருப்பாள் அப்போது அந்த குப்பைத்தொட்டியில் மேலே "use me " என்று எழுதியிருக்கும். குப்பைத்தொட்டி போலெ பயன்படுத்தப்படுவது அந்தப்பெண் தானே,"use me " என்று சொல்வதும் அவள் தானே.
இன்னொரு காட்சியில் பூல் குமாரி எந்தப் பக்கம் போவதென்று தெரியாமல் இருப்பாள், இரண்டு பக்கமும் பார்த்து இரண்டு tubelight கள் இருக்கும். அப்படி நிறைய காட்சிகளில் கவிதையாக கதை சொல்லியுள்ளார்
படத்தில் வரும் ஆரம்ப காட்சி பின்னணி இசை அட்டகத்தியில் வரும் "ஆடிப்போன ஆவணி " பாடலை நினைவுப்படுத்தியது.
மொத்தத்தில் ஒரு நல்ல திரையனுபவமாக காட்சிகள் விரிந்தது, அவள் முகமூடியை திறந்துவிட்டு மேலே நிமிர்ந்தால் மட்டுமே உலகம் அவள் கண்ணுக்குத் தெரியும்.
4 பேர் மற்றும் உரை இன் படமாக இருக்கக்கூடும்

No comments: