சிறுவயதில் கவிதை , கட்டுரைப் போட்டிகளுக்குச் செல்லும்போது நாம் சிறந்ததாகத் தயாரித்துக்கொண்டு போயிருக்கிறோம் என்று நினைப்போம் , நம்மைவிட ஆகச்சிறப்பான ஆட்களை அந்த பல பள்ளிகள் கலந்துகொள்ளும் போட்டிகளில் பார்க்க முடியும். பள்ளியில், கல்லூரிகளில் உருவாகும் கலைஞன் முதலில் வெளி ஆட்களுடனே போட்டி போடுகிறான், அது ஒரு திரில் ஒரு அளவுக்கு மேலே (பொருளாதார சமூக வளர்ச்சியை சொல்லவில்லை ) மனதளவில் வளர்ந்த பின் தான் தனக்குத்தானே போட்டிபோட்டுக்கொள்கிறான்.
கதையோ , கவிதையோ , நாவலோ , கட்டுரையோ இல்லை தத்துவத்தேடலோ இதெல்லாம் வளர்ந்துகொண்டே இருக்கும் இயல்புடையது. அதாவது நம் மனதுக்குள்ளேயே வளர்த்துக்கொண்டு இருக்கும் ஆற்றல் உடையது. அது புறத்தோற்றத்தில் தெரியாமல் கூட இருக்க வாய்ப்புகள் உண்டு. நாம் " போட்டிக்காக " இயங்கவில்லை நமக்குள் இருக்கும் ஒருவனைத் தேடத்தான் இயங்குகிறோம் என்று புரிந்துகொள்ளவே சிலருக்கு பல வருடம் எடுக்கலாம் புரிந்துகொள்ளவே போகாமல் கூட இருக்கலாம்.
ஒரு இருளடைந்த குகைக்குள் ஒரு அகல்விளக்கை எடுத்துக்கொண்டு நடக்கிறோம் ,அந்தக் குகைக்குள் வெளிச்சமே இல்லை நடந்துகொண்டே இருக்கிறோம் , நடந்துகொண்டு இருக்கும்போது அந்த குகைகளை பாதி வெளிச்சத்தில் புரிந்துகொள்வோம் அல்லவா ? அதைப்போன்ற அனுபவமே எழுதும் போது கிடைக்கும் .
எழுதும் போதோ இல்லை எந்த ஒரு கலை வடிவத்திலோ நம்மை நாமே கண்டடைவது , நமக்குத் தெரியாத ஒரு விடயத்தை தெரிந்து கொள்வது , உணர்ந்து கொள்வது இதைவிட த்ரில்லான விடயமாக நான் எதையுமே சொல்ல மாட்டேன்.
மனித மனம் ஆழமானது , ஒரு இருண்ட குகைபோன்றது , அந்த நமக்குள்ளே இருக்கும் குகைக்குள் நம்மையே நாம் ஆழம் பார்ப்பது தான் எழுத்தும் எந்த ஒரு கலையும் என்பது என் புரிதல். என்ன நாவலாசிரியர்கள் , கவிஞர்கள் , கலைஞர்கள் சினிமா இயக்குநர்கள் , இசை மேதைகள் , நடனக் கலைஞர்கள் இவர்கள் யாரும் வேறு யாரிடமோ போட்டிபோடுவதில்லை அவர்களிடமே போட்டிபோடுகிறார்கள் , அவர்களில் இருக்கும் சிறந்த புதைந்த கலைஞனை கண்டடைகிறார்கள் , தோற்கிறார்கள் , ஜெயிக்கிறார்கள் , தன்னைத்தானே புதைந்த இடத்திலிருந்து மீட்டெடுக்கிறார்கள்.
என்ன அந்த ஆழம் போகும் கலைஞர்களின் மனதில் எதுவுமே ஆழமாக இருக்கும் , அன்பென்றால் ஊற்றெடுக்கும் , வக்கிரங்களும் இருக்கும், கலைஞர்களின் மனதுக்குள் உள்நுழைவதே ஒரு த்ரில் தான்.
ஒரு நாவல் மற்றும் எழுதிய எழுத்தாளனின் அகத்துக்குள் செல்கிறது "
".
எழுத்தாளனின் பல்வேறு சிடுக்கான மனநிலைக்கும் போகும் thrill அனுபவத்தைக் கொடுத்தது. எதை எழுத வேண்டும்? எதெல்லாம் எழுத்து ? ஒரு எழுத்தாளன் எவ்வளவு நம்பகமான விடயங்களை எழுத வேண்டும் , கண்ணால் காண்பதை எழுதாமல் , ஒரு கதாபாத்திரத்தின் இன்னொரு பக்கத்தை பேசவேண்டிய தேவை என்ன ? எழுத்துலகிற்குள் இருக்கும் லாபி போலித்தன்மை , அந்த இடத்தை தக்கவைக்க எந்த அளவுக்கும் இறங்குவது என்று அத்தனை கீழ்மைகளையும் தோலுரித்துக் காட்டுகிறது.
ஆறு எபிசோட்கள் ஒரு கதை என்றால் ஏழாவது எபிசோடு அப்படியே uturn எடுத்து வேறொரு கதைக்குள் போகிறது. அது மேலே சொன்ன விமர்சனங்களை எல்லாம் ஒரு வடிவத்தில் மறுத்துவிடுகிறது.. எழுத்துலகத்தை காத்திரமாக விமர்சித்துவிட்டு இல்லை இல்லை அது கற்பனை நான் வேறு ஒரு கதை சொல்லப்போகிறேன் என்கிறது.
எழுத்துலகத்தை ஆழமாக விமர்சித்துவிட்டு , அந்த விமர்சனம் எல்லாம் நுட்பமாக இருக்கிறது , அந்த நுட்பத்தை எல்லாம் ட்விஸ்ட் என்ற பெயரில் அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று கடந்து செல்கிறது.
சீரிஸ் ரெண்டு விதமான எழுத்தாளர்களை முன்வைக்கிறது. அதில் இரண்டு கதைகளுமே அருமை தான் , ஆனால் இரண்டாம் கதையை நியாயப்படுத்த முதல் கதை முழுவதும் Fake என்று சொல்லும்போது, அந்தப் படைப்பில் நம்பகத்தன்மை போகிறது , விஜய் லியோ படத்தில் இதைபோன்றே fake screen play அமைக்கப்பட்டிருக்கும்.. அதையே மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
லியோ படத்தில் அந்த fake கதை என்று சொல்லும் கதை கூட சுமாராகத் தான் இருக்கும். ஆனால் இந்தத் தொடரில் ஒரு அழுத்தமான கதையை சொல்லிவிட்டு அதை ரத்தமும் சதையுமாக சொல்லிவிட்டு இல்லை இல்லை அது உண்மையான கதையல்ல என்று சொல்லும்போது எரிச்சல் வருவதை தவிர்க்க முடியவில்லை.
ஆனாலும் இரண்டாவது கதையும் , எது எழுத்து ? என்று கதையின் போக்கில் ஒரு நாவலாசிரியருக்கு உணர்த்தும் கதையும் திரில் தான்.
இலக்கியம் என்பதே மனித மனங்களில் உள் அடுக்குகளில் பயணிப்பது தான். அதுவும் இலக்கியவாதியின் மனதின்உள்ளடுக்கு கொஞ்சம் ஆழமாக இருக்கும்போது அதில் பயணிப்பது ஒரு ரோலர் கோஸ்டர் ரைட் தான்.

No comments:
Post a Comment