Saturday, 1 June 2024

கருடன் == விசுவாசம் என்னும் ஊசிப்போன நிலப்பிரபுத்துவ வடை == spoiler alert

 மனித  உணர்ச்சிகளில் துரோகத்துக்கென்று தனிப்பட்ட இடமுண்டு. வேறு எந்த ஒரு உணர்ச்சியையும் விட துரோகத்தை சந்திக்காத மனிதர்களே இருக்க முடியாது. பிறந்தநாள் முதல் மனிதன் அடிக்கடி சந்திக்கும் விடயம் துரோகம். ஒன்று ஏமாறும் ஆளாக நாமிருப்போம் இல்லை நாமே ஏமாற்றும் ஆளாக இருப்போம்.   அந்த துரோகத்துக்கும்  பழிவாங்களுக்கும் சினிமாவில் ஒரு பிரதான இடமுண்டு. உலகின் ஆகச்சிறந்த திரைக்கதைகள் எல்லாமே பொறாமை உணர்ச்சி,   துரோகம்  சார்ந்தவையாக இருக்கவே வாய்ப்புகலுண்டு. 

துரோகத்தால் ஏமாற்றப்பட்டு பழிவாங்கும் கதைகளே மாஸ் சினிமா ஆகின்றன. 

இங்கு துரோகத்தை ஏமாந்ததை அப்படியே கவித்துமாக முடித்தால் உலக சினிமா அதையே அந்த ஏமாற்றப்பட்டவனின்  தரப்பிலிருந்து யாரோ பழி வாங்கினால்   அது மாஸ் சினிமா.  புரூட்டஸ், ஜூலியஸ் சீசர்  கதையும்  சுப்ரமணியபுர கஞ்சா கருப்பு கதையும் வேறு வேறல்ல.  ஏமாற்றப்பட்டு கொல்லப்படுகிறான் அழகர், பரமன்  பெண்ணின் துரோகத்தை உணர்ந்து அவளை கொலை செய்கிறான்.  அந்தக் காதலியே அழகரை  காட்டிக்கொடுக்கிறாள்.  காதல் மூலம் துரோகத்தை உணர்ந்தவர்கள் எல்லாம் அந்தப் பெண்ணின் ரத்தத்தை பரமன்  வெட்டும் போது  முகத்தில் வரும் ரத்தத்தில் தங்கள் துரோகத்தை தங்கள் ஏமாற்றப்பட்டதை ஏமாற்றியதை   கழுவிக்கொள்கிறார்கள்.        அப்படியே வெட்டிய பரமன்  தன்னுடைய  நெருங்கிய  நண்பன் காசியால் காட்டிக்கொடுக்கப்படுகிறான்.   அழகரை வீழ்த்தியது காதலென்றால், பரமனை  வீழ்த்தியது நட்பு.  அந்த நட்பும் காதலும் இணையும் புள்ளி துரோகம்.  

நெருங்கிய நட்போ, காதலோ  துரோகத்தில்  உடையும்போது நமக்குள் சொல்லமுடியாத வலியும் கண்ணீருமே  மிஞ்சும். கண்ணீர் கரைந்துவிட்ட பிறகு கூட அந்த துரோகத்தின் வலி நம் இறப்பு வரை நம்கூட வரக்கூடிய  வலி. கர்ணனை நாம் ஏன் நினைவில் வைத்திருக்கிறோம்  மஹாபாரதத்தில் துரோகத்தால் வீழ்த்தப்பட்ட  கதாப்பாத்திரம்  கர்ணனின் பாத்திரம்  துரோகத்துக்கும். பழிவாங்களுக்கும் சினிமாவில் என்றுமே  சந்தை  மதிப்புண்டு. 

வடசென்னை,  ஆடுகளம், சுப்ரமணியபுரம் , மெட்ராஸ்  இந்தபடமெல்லாம்  ஒரே கதை தான். பொறாமை, துரோகம், கொலை, பழி வாங்கல்  இந்த ஆதரப்புள்ளிகளிலேயே இந்தக் கதைகள் நகர்வதை பார்க்கமுடியும். 

சொல்லப்போனால் கூர்ந்து கவனித்தால் இது ஒரு template clitche கதையென்று சொல்லலாம்.  அதன் சமீபத்திய பிரதி  தான் "கருடன்". 

"கருடன்" என்பதே ஒரு வைணவ குறியீடு, கருடனை பார்க்காமல் பெருமாளை பார்க்க முடியாதென்பார்கள். கருடன்  சக்திவாய்ந்தவர் என்பார்கள். இந்தப் படத்திலும் கோவிலை காப்பாற்றும் அதிகாரத்திலிருக்கும் குடும்பத்துக்கு" விசுவமாக"  இருக்கிறார்  சொக்கன் அவரே கருடன்.  இந்த விசுவாசமே  கதையின் ஆதாரப்புள்ளி. 

இந்த விசுவாசம்  என்னும் விடயமே நிலப்பிரபுத்துவ விழுமியம். அந்த விசுவாசம் என்பதே சாதிய விழுமியம்,  மேலே  இருக்கும் சாதிக்கு கீழே இருப்பவர்கள் அடிபணிவது.. இந்த கருத்தாக்கம் விசுவாசம் என்னும் வார்த்தையே  அரத பழசான விழுமியம் மற்றும் வார்த்தை.  இந்த அரசியல்ரீதியான புரிதலே படத்துடன்  ஒன்றா முடியாமல்  செய்தது.  ஒரே நேரத்தில் முற்போக்கு விடயங்களை பேசிக்கொண்டே கருடனை  ஆதரிக்கவே முடியாது  அப்படி எதோ ஒரு கோணத்தில் நமக்கு படம் பிடிக்கிறதென்றால்  நம் அரசியலை  எந்த புள்ளியில் நமக்கு  இந்தப் படம் பிடிக்கிறது என்பதை பரிசீலிக்க வேண்டும். 

இந்தப்  படம் விசுவாசத்தை கதாநாயக பிம்பத்துடன்  காட்டுகிறது, அந்த விசுவாசம் இல்லையென்றால் இத்தனை  வெட்டுகுத்துக்களே நடந்திருக்காது. யோசித்து பார்த்தால்   சொக்கன் ரொம்ப அடிமையாக இல்லாமல்  விசுவாசமாக இல்லாமல் இருந்திருந்தாலே  பாதி  விடயங்களை பாதி கொலைகளை தடுத்திருக்க முடியும். சொல்லப்போனால் கதையே நகர்ந்திருக்காது என்பது வேறு விடயம். 

80, 90 களில் இருப்பதைப்போல விசுவாசம் இப்போது உள்ளதா? தமிழகத்தில் சாதி பற்றிய புரிதல்கள் மேம்பாட்டுக்கொண்டே  இருக்கிறது. முற்போக்கு படங்கள் ஒரு பக்கம் வந்துகொண்டிருக்கிறது. அரசியலில், இலக்கியதில் முன்பை விட  புரிதல் மேம்பட்டிருக்கிறது.  இப்போதெல்லாம் யாருமே கை கட்டி நிற்பதில்லை,   

சின்ன கௌண்டர் நடக்கும்போது குடைபிடிக்கும் வடிவேலுக்கள்  சமூகத்தில்  இல்லை. சாதிய மனநிலை  மாறிக்கொண்டிருக்கிறது,  பட்டியலின மக்கள் படிப்பதால் தான் நாங்குநேரி சம்பவமே நடந்திருக்கிறது.  

அப்படியிருக்க இப்போதும் சோறு போட்டால் விசுவமாக  இருக்கிறார் சொக்கன் என்னும் அரத பழசான   கதையை  நாம் ரசிக்கிறோமென்றால் நம் மனது update ஆகிக்கொண்டிருக்கிறது அதில் பழைய விழுமியங்களை  ரசிக்கிறோமென்றால் நம் மனது பின்னோக்கி இழுக்கப்படுகிறது தானே?

கருடன் படத்தில்  விசுவாசத்தில் தான் சொக்கன் கருணாவின் மச்சான் கையை வெட்டுகிறார். அந்தக் கையை  வெட்டுவதிலிருந்து தான் பிரச்சினையே ஆரம்பமாகிறது. அதற்கு முன் கருணாவின் பாட்டி கொல்லப்படுகிறாள் அவளே கோவில் நிர்வாகத்தை பார்த்துக்கொண்டிருக்கிறான்.  எதிரிகள் பிளான் செய்யும்போதே  அந்த பாட்டி அடுத்த காட்சியில் கொல்லப்படுவார் என்று தெரிகிறது.  அந்த நிர்வாகம் சொக்கனிடம்  வருகிறது. சொக்கன் முன்பே ஆதியை எச்சரித்திருந்தால்  இத்தனை பிரச்சினை வந்திருக்கவே வந்திருக்காது.  சொக்கன் கருணாவுக்கு விசுவாசமாக இருக்கிறார். அதனால் சில விடயங்களை ஆதியிடம் மறைக்கிறார்   அதுவே கருணாவின் மச்சான் கை உடைவதற்கு காரணமாக  இருக்கிறது. 

இத்தனைக்கும் கருணா  சொக்கனை சாதி பார்க்காமல் பழகுகிறார். அதை ஒரு காட்சியில் சொக்கன் சொல்கிறார். ஆனால் தவறென்று தெரிந்து கூட கருணாவிடம் இருக்கும் பிரச்சினைகளை சொல்லாமலே விட்டதே  படத்தின் பிரச்சினை. அதாவது இவர்கள் சொல்லும் "விசுவாசம்"  கதையின் போக்கிலேயே பல பேரை  காவு வாங்கியிருக்கிறது. கடைசியில் ஆதியாக வந்த சசிகுமாரையும்  இந்த சொக்கனின் விசுவாசமே கொல்கிறது. 

சொக்கனுக்கு தெரியும்   ஆதிக்கு எதிராக பெரிய சதி நடக்கிறதென்று.    அந்த இடத்தில் ஆதியை போட்டுத்தள்ள   அத்தனை ஆயுதங்களை சொக்கன் பார்க்கிறார் . இருந்தாலும் ஆதியை தனியாக விட்டுவிட்டு போகிறார்.  சொக்கனின் பிரச்சினை தான் ஆதி கொலை செய்யப்படுவதற்கான  காரணம்.   சொக்கன் ஆதியிடம் உண்மையை பேசியிருந்தாலே பாதி பிரச்சினை ஏன் பிரச்சினையே வராமல் ஆதியால்  அந்தப்  பிரச்சினையை solve செய்திருக்க முடியும்.   படத்தின் காட்டப்பட்ட காட்சியின் படி   ஆதி நல்ல சிந்தனையாளராகவும்   கருணா கொஞ்சம் யோசிக்கத்தெரியாதவராகவும்    சொக்கன் அனைத்துமே தெரிந்தும்  அமைதியாக கடந்துபோவதாக  காட்டப்படுகிறது. 

சொக்கன் இரண்டு அண்ணன் போல இருப்பவருக்கும் விசுவாசமாக இருக்கிறார். ஆனால் ஆதியா கருணாவா என்று பார்த்தால்  கருணா பக்கமே நிற்பார். கருணா நிறைய தவறுகள் செய்கிறார் என்று சொக்கனுக்கு தெரியும் . சொக்கன் நல்ல அறிவாளி தான் நியாயமாக யோசிப்பவர் தான், அப்படியிருக்க ஆதியிடம்  சொக்கன்   பல உண்மைகளை பேசியிருந்தாலே  கருணாவையும் காப்பாற்றியிருக்கலாம்,  ஆதியையும்  காப்பாற்றி  இருக்கலாம்.    சொக்கனின் முட்டாள்தனத்தால்  தான் ஒரு சாம்ராஜ்யமே வீழ்கிறது . 

படத்தின்  வில்லனாக கருணா காட்டப்படுகிறார், உண்மையில் வில்லன் கருணா தானா இல்லை சொக்கனின்  விசுவாசமா?  ஆனால் படத்தில் விசுவாசமே கதாநாயக பிம்பத்துடன் காட்டப்படுகிறது.  விசுவாசமென்பது  இலவச உழைப்பு, சாதியால் ஒடுங்கி இருந்தாலும்  நிலப்பிரபுவிடம் பம்மிக்கொண்டே இருப்பது.  அது போலியானது, அரசியல்நீக்கமானது.  ஒரு நவீன சமூகத்தில் இன்னுமா "விசுவாசம" எனும்  ஊசிப்போன  வடை  ஓடுகிறதா?   அந்த விசுவாசம் "சமூக நீதி" பேசும் ஊரில் பெரிய சந்தையை வைத்திருக்கிறதென்றால்  நம் அரசியலை நாம் உரசிப்பார்க்க வேண்டும். 

சரி அந்த விசுவாசமாவது  நேர்மையானதாக இருக்கிறதா?  ஆதி, சொக்கன், கருணா மூன்று பேரையும்  வளர்த்திருக்கிறாள்  பாட்டி.  அந்த பாட்டியை கருணா  கொலை செய்கிறார். இது கடைசி காட்சிக்கு முந்தைய  காட்சியில்  சொக்கனுக்கு தெரிகிறது. கடைசி காட்சியில் அந்தப் பாட்டியை கொலை செய்தது கருணா  அண்ணன்  என்று தெரிந்த பிறகும் , அண்ணே அண்ணே  மதினியை விட்டுரு அண்ணே என்று காலில் விழுகிறார் சொக்கன்.   சொக்கனின் காதலி செங்கல் சூளையில்  அடித்து எரிக்கப்பட்டு கொண்டிருக்கிறாள். இந்தப் பக்கம்   ஆதியின் மனைவியும், குழந்தையும் கருணாவால் அடிக்கப்படுகிறார்கள்.    

ஆதியை கொன்றது  கருணா தான் என்று சொக்கனுக்கு தெரிகிறது. பாட்டியை கொன்றதும் கருணா தான். தன்  காதலியை தன் மதினியை அடிப்பது கருணா தான் என்று சொக்கனுக்கு தெரிகிறது. உடனே நியாயத்தின்  பக்கமெல்லாம் கருணா செல்லவில்லை.  வேறு வழி தெரியாமல் கருணாவை கொலை செய்கிறார் கர்ணன். அந்தக் காதலியை. மதினியை உயிரோடு விட்டிருந்தாலே சொக்கன் நியாயத்தை பேசி இருக்க மாட்டார்.  சொக்கனால்  யாரை வேண்டுமானாலும் அடிக்க முடியும், ஆனா விட்டுடுணே  விட்டுடுன்னு  சொக்கன் கதறுகிறார் இது அவர் விசுவாசம் என்று சொல்கிறார்கள். 

விசுவாசமென்றால்  பாட்டியை கொன்ற கருணாவிடம் எதற்கு கெஞ்சிக்கேட்க வேண்டும்.   கடைசியில் யாரையும் விடாமல் கருணா  கொன்றுவிடுவார் என்ற பயத்தில்தான் சொக்கன் கருணாவை கொல்கிறார்.  

இது விசுவாசம் மட்டும் தானா? உள்ளுக்குள் சாதி இல்லையா? அந்த சோறு போட்ட சாதி அதில் இருக்கும் அண்ணன்  என்ன தப்பு செய்தாலும் காதலியை கொலையே செய்ய துணிந்தாலும்   அவரிடம் கெஞ்சவேண்டுமென்பது   சாதிய கண்ணோட்டமில்லையா?  இதை வெறும் action படமாக பார்க்க முடியுமா? 

விசுவாசம் என்ற சாதிய விழுமியத்தை இயக்குநர் வைக்கிறார்.

இதெல்லாம் இயக்குநருக்கு தெரியாமல் இல்லை,  கருணாவின் வீட்டில் ஒதுக்கப்பட்ட இடத்திலேயே தான் சொக்கன் தங்க  வைக்கப்பட்டிருக்கிறார். காட்சிகளில் காட்டுகிறார்கள்.  கருணா ஒரு காட்சியில் நாங்க சோறு போட்டோம்  அப்புறம் ஏண்டா  ஆதி குடும்பத்துக்கு உதவி செய்யற என்று கேட்கும்போது,  அதற்கு பதில்  சொல்லும் சொக்கன் அவர்கள் என்னைய குடும்பத்துல ஒருத்தனா நடத்தினாங்க என்கிறார். 

அப்படியிருக்கும் ஆதியை காவு கொடுத்து கருணா பக்கம் நிற்பதென்பது  சாதிய விசுவாசமா?  சோறு போட்ட பாட்டி  கொல்லப்படும்போது கூட  பாட்டி பக்கம் சொக்கன் நிற்கவில்லை கருணா பக்கமே நிற்கிறார்   என்று  கதை காட்டப்பட்டுள்ளது.  

திரைக்கதையை மண், பொன், பெண் என்று இயக்குநர் பிரித்திருக்கிறார். இந்த மூன்றின் மேலே வைக்கும் ஆசையே  துன்பத்துக்கு காரணம் என்பதைப்போல  கருத்தை சொல்ல வருகிறார் இயக்குநர். சினிமா எவ்வளவு மாறிவிட்டது  இன்னுமா பெண்ணை பொருளாக பார்க்கக்கூடிய சிந்தனை. அது சமூகத்தில் இல்லையா என்று  நீங்கள் கேட்கலாம், அந்த பொதுபுத்தியை எடுத்து கதை விமர்சித்திருந்தால் பரவாயில்லை  ஆனால் திரைக்கதையின் ஆதாரப்புள்ளியே  அதுதான. பொதுப்புத்தியில் ஊறிப்போன சாக்கடையான  விழுமியங்களை  இயக்குநர்  கொண்டு வந்துள்ளார்.

ஒரு பெண் உயிருடன் இருப்பவள் அல்ல அவர் பொருளைப்போன்றவள் என்னும் நிலவுடமை ஊசிப்போன இன்னொரு வடை   தான் இந்தத்திரைக்கதை..   இப்படி திரைக்கதையை  நொண்டிப்பார்த்தால்  ஊசிப்போன   வாடை   வருகிறது. 

இப்போது தனிநபர்களை வில்லனாக காட்டுவதை விட ஒரு சிஸ்டம் வில்லனாக காட்டப்படுகிறது. இப்போது jஜெய்பீம் படத்தில்  போலீஸ் கஸ்டடி கொலைகள் தான்  வில்லன். அதேபோன்று  விடுதலை விசாரணை படங்களில் கூட  இதை சொல்லமுடியும். இந்தப் பக்கம் வலதுசாரி இயக்குநர் லோகேஷ் கனகராஜ்   போதை  உலகத்தை  வில்லனாக வைக்கிறார். சார்பாட்ட பரம்பரை படத்திலும் இவர் தான் வில்லன் என்று சொல்ல முடியாது. மாநாடு படத்தில்  இசுலாமியரை மோசமாக சித்தரிக்கும் சிஸ்டம் வில்லன். சித்தா படத்தில் pedophile  வில்லன். goodnight படத்தில் குறட்டை வில்லன் என்று திரைக்கதைகள் மாறிக்கொண்டிருக்கிறது. 

breaking bad ,  money heist, squidd games என்று ott க்களில்  வில்லன்கள் சிஸ்டமாக உள்ளார்கள்.  பீகில் படத்தில் வில்லன்  ஸ்போர்ட்ஸ் அரசியல், துணிவு படம் லோக்கல் பேங்க் பிரச்சினைகள்  என்று கதை சொல்லல் முறை  மாறிக்கொண்டிருக்கிறது.  இப்பவும் ஹீரோ வில்லன் விசுவாசம், விவேகம் நட்பு துரோகம் என்று எத்தனை நாளைக்கு வேட்டியை  ஏற்றிக்கட்டிக்கொண்டு  [பழைய நிலப்பிரபுத்துவ விழுமியங்களை பேசிக்கொண்டிருக்க போகிறோம். 

கிராமம் என்றாலே சண்டை வெட்டு குத்து படங்கள் தானா. கிராமத்தில் சொல்லவேண்டிய கதைக்களங்கள்  இல்லவே  இல்லையா?  பாரதிராஜா காட்டாத பிரச்சினைகளா ? பாரதிராஜா படத்தில் சாதி சாதி மறுப்பு மற்றும் காதல்  பிரதான பிரச்சினைகளாக பேசப்பட்டிருக்கும், கள்ளிப்பால்  போட்டு கொலை செய்யப்படும் பெண்  சிசுக்கொலைகளுக்கு எதிராய் எடுத்த படம் தான் கருத்தம்மா? அது கிராமத்துக்கே உண்டான  தனித்துவமான  பிரச்சினை  அந்த இடத்தைப்பற்றிய ஆய்வு. 

தன் கிராமத்தில் இருக்கும் சொந்த சாதி விடயங்களை கூட விமர்சனக் கண்ணோட்டத்துடன்  எடுத்தவர் பாரதி  ராஜா.  கிராமங்களில் அழகான உணர்வுகளே இல்லையா.   நேற்று மதுரை பற்றி எழுதியிருந்த போது  நண்பர்கள்  மதுரையில் இதெல்லாம் நடப்பதில்லையா என்று எழுதியிருந்தார்கள், எல்லா ஊரிலும் நடப்பதைப்போல  இங்கும் சில விடயங்கள் நடக்கின்றன,   ஆனால் ஒட்டுமொத்த மதுரையும் மோசமான ஊரா?  இங்கும் எல்லா ஊர்களில் உள்ளவர்களை போல சாதி வெறியர்கள் உள்ளார்கள் , ஆனால் அவர்கள் பெரும்பான்மை  இல்லை.  

சரி இந்தப் [படத்தில் சசிகுமார் சூரிக்கு பின்னால் நிற்கிறார்.    சசிகுமார் மார்க்கெட் இருக்கும் ஹீரோ சூரி காமெடியன்  இந்த ரோலை  சூரிக்கு நெருக்கமாக இருக்கும் சிவகார்த்திகேயனிடம் கேட்டிருந்தால் நடித்திருப்பாரா?  ஆனால் நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் தான் சசிகுமார் பின்னாலிருந்து அடக்கி வாசித்திருக்கிறார்.  இந்த துரோகத்தை பற்றிய படத்தில்   நடித்தவர் சசிகுமார் மதுரைக்காரர் தானே?    

மதுரைக்காரர்கள் பற்றி அமீர் பிரச்சினையின் போது  கரு பழனியப்பன் சொல்வார் . அமிருக்காக  அப்போதே கூட  இருந்தவர் சசிகுமார் சசிகுமார் உதவி இயக்குநர் தான். பருத்தி வீரன் படத்துக்கு சசிகுமார் அன்றே  அமீருக்கு ஒரு கோடி கொடுத்துள்ளார்.    அது அண்ணன் தம்பி போன்ற நட்பு தான், அமீர்சொந்த மதமா  இல்லை சசிகுமார் சாதியா? அமீர்  சிவகுமார், சூர்யா பழக்கத்துக்காக  அந்தப் பக்கம் இந்தப் பக்கம்  கடன் வாங்கி பருத்தி வீரனை முடித்திருக்கிறார் அவரும் மதுரைக்காரர்.     

எனக்குத் தெரிந்து சாதி பார்க்காமல் அண்ணன் தம்பியாக  பழகும் மதுரைக்காரர்களை  நிறைய பேர்  எனக்குத்தெரியும். இது துரோகத்தின் ஊருமல்ல,, சாதியின் ஊருமல்ல. இங்கும் சாதி பிரச்சினை தலைவிரித்தாடும்  இடங்கள் உண்டு . ஆனால் முற்போக்கு சக்திகளும் உண்டு.   தனிப்பட்ட முறையில் மதுரையில் மட்டுமே  இதெல்லாம் நடக்கிறதா, அதென்ன இழுத்து இழுத்து பேசினால் மதுரை மொழி என்று  யார்  சொன்னது. வெறும் போறாய்ங்க வராய்ங்க இழுத்து இழுத்து பேசுவது மட்டுமே மதுரை மொழியா? இங்கு  ஆடை என்று எடுக்கும்போது கூட  இங்கு யாரும் pant shirt கூட போடுவதில்லை என்று template மதுரையை  காட்டுகிறார்கள்.   என்றாவது ஒருநாள் ஒரு நல்ல மதுரை படத்தை பார்ப்பேன் என்னும் நம்பிக்கை உள்ளது.

"கருடன்" திரையரங்கில் பெரிய opening, வெற்றிப்படம்   ஆனால் அதில் சொல்லப்பட்டதெல்லாம் சரியா?  சண்டை காட்சிகளை  விடுத்து கதையை நோண்டினாலே அத்த்னை ஓட்டைகள், இன்னொருபக்கம்  அரசியலாக  பார்த்தால் கூட ஊசிப்போன வடையாகவே இருக்கிறது,  மண், பொன்னுடம் பெண்ணை ஒப்பிட  முடியுமா?  ஒரு male gaze  என்ற வார்த்தையை தீபா லட்சுமி தோழர் சொல்வார் அப்படி ஒரு male gaze  மோசமான விடயங்களை   கதாநாயக பிம்பத்துடன் காட்டும்படம்  தான்  "கருடன்"

கடைசியாக  கருடன் , நியாயமில்லை என்றால் சமன்படுத்திவிடும்  என்கிறார்,  அப்படியென்றால் இதற்கு சூத்திரதாரி யான அமைச்சர் உயிருடன் தான் இருக்கிறார். நல்லவர்கள் குடும்பமே நாசமாக்கிருக்கிறதே   அதெல்லாம்  கருடன் கணக்கில் சேராதா?  கருடன் என்ற குறியீடு கூட பலம் பொருந்தியவன், பெருமாளுக்கு பக்கத்திலிருக்கும் பலசாலி  என்னும் வைணவ குறியீடாகவே காட்டப்பட்டிருக்கிறதோ?   இந்த கருடனும்  கோவில்  அதன் நிர்வாகத்தை பார்ப்பவராகவே பலசாலியாகவே இருக்கிறார் அல்லவா?    மொத்தத்தில்  கருடன்  பிற்போக்கின்  கண்ணாடி.



No comments: