Thursday 29 December 2011

பச்சை மஞ்ச வைட் தமிழன் டா

"தமிழா தமிழா நாளை நம் நாளே " ,
"தமிழ் என்றால் நானொரு தமிழன் டா "
"அழகிய தமிழ்மகன் நீ தானே "
என்னும் சொல்லும் பச்சை மஞ்ச வைட் தமிழர்கள் நிஜத்தில் அட்டை கத்தி வீரர்களாகவே இருக்கிறார்கள் .
முல்லைப்பெரியார் பிரச்சனையில் தமிழகத்தில் உள்ள விவசாய வாழ்வாதாரமே அழிந்து கொண்டிருக்கிறது அதற்கு குரல் கொடுக்காத தலைவர்,
இப்பொழுது முற்ப்போக்கு முகமுடிக்கு சூப்பர் ஸ்டார் அன்னா ஹசாரேவை ஆதரிக்கிறார் .
தேனீ, மதுரை பக்கம் தலைக்கு ரசிகர்கள் அதிகம், மக்கள் பணம் மட்டுமே முக்கியம் எக்கேடு கேட்டால் என்ன என்று தல சிங்கபூர் சென்றுள்ளார்
புத்தாண்டு கொண்டாட.விளம்பர வியாபாரி சூர்யா, அன்னா ஹசாரே அவர்கட்கு ஆதரவு தெரிவிக்கும் சூர்யா ,"உலக தமிழர்களின் வெற்றி" என்று ஆர்பரிக்கும் சூர்யா , இதற்கு குரல் கொடுக்கவில்லை. நாளைய முதலவர் விஜய் அவர்கட்க்கு கேரளாவில் ரசிகர்கள் அதிகம் அவர் வாய் திறக்க மாட்டார்
கொஞ்சம் மேலோட்டமாய் ஆராய்ந்து பார்த்தாலே தெரியும், புலம்பெயர்ந்த தமிழர்கள் ஈழத்தமிழர்கள் வெளிநாட்டிலே பார்த்தால் மட்டுமே படம் ஓடும் , அதனால் அங்கே தமிழனுக்கு ஆதரவு , இங்கு கேரளாவில் படம் ஓட வேண்டும் , கேரளா ரசிகனை பகைத்து கொள்ள முடியாது அதனால் இங்கே வாய் திறக்க கூடாது.இப்படி
பிழைப்புவாதியாய் இருக்கும் நடிகர்களுக்கு CUT OUT தோரணம் , பால் அபிஷேகம் .நீங்க கேட்கலாம்
அவங்க அவங்க வேலைய பார்க்குறாங்க படத்த மட்டும் பாருங்கன்னு ?
கலைத்துறை என்பது வியாபாரம் சார்ந்ததல்ல மக்கள் சார்ந்தது,மக்களின் பிரச்னையை மைய்யபடுத்தி பேசுவதே
கலை, அவனே கலைஞன்.

Wednesday 21 December 2011

கீதா சாரம் வாழ்வின் சாரமா

ரஷ்யாவில் கீதையை தடை செய்யவேண்டும் என்று ஒரு வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. கீதையை தடைசெய்யகூடாது
என்று இங்குள்ள RSS பா ஜா க கும்பல் கூச்சல் போடுகிறது.அப்படி என்ன கீதையில் கருத்து உள்ளது.
"எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்
உன்னுடையதை எதை நீ இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைதிருந்தாய், அது வீணாவதற்கு ?
எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்."

இவ்வாசகம் பகவத் கீதையின் சாரம் .இவ்வாசகத்தை சமகாலத்துடன் பொருத்தி பார்ப்போம் .
ஈழத்தின் போரிலே மக்கள் கொல்லப்பட்டது நன்றாகவே நடந்தது,பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டது
நன்றாகவே நடந்தது,குழந்தைகள் கொல்லப்பட்டது நன்றாகவே நடந்தது,பஸ் பால் விலை ஏற்றப்பட்டது
நன்றாகவே நடத்தது,பரமக்குடியில் தலித்துகள் கொல்லப்பட்டது நன்றாகவே நடந்தது.நாளை கூடங்குளம்
அணுமின்நிலையம் வரப்போகிறது அதுவும் நன்றாகவே நடக்கும்.இப்படி போராடும் மக்களுக்கு
எதிராய் உள்ளது கீதை வாசகம்."எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?"
அதாவது வாழ்க்கையையே , அமைதியையே இழக்கலாம் , ஆனால் மக்கள் போராட்ட உணர்வு மங்கிப்போய்
இந்த கேள்வியை தனக்குள் கேட்டுக்கொண்டு,கடவுள் இருக்கிறார் நாம் எதையும் இழக்கவில்லை என்று மனதை
தேற்றி கொண்டு, போராட்ட உணர்வையும் நீர்த்து போக செய்ய வேண்டும். கடவுள் என்ற உணர்வு வெறும் மூட நம்பிக்கையாய் இருப்பது கூட பிரச்சனை அல்ல,அது போராடும் மக்களை நீர்த்து போக செய்வதால் பிரச்சனையே. பிரச்சனைகள் சூழ்ந்த மக்களை போராட வழிசெய்யாமல் அவர்களை நீர்த்துப்போக செய்வதால் இது சுரண்டுபவனுக்கு ஆதரவாய் இருக்கின்றன. கடவுள் என்ற பாத்திரமும்,கடவுளின் கருத்துக்களும் என்றுமே ஆளும் சுரண்டும் மக்களுக்கு பேராதரவாய் இருந்திருக்கின்றன.இறுதியாய் இறைவன் மனித ரூபத்தில் வந்து இறுதியாய் காப்பான் என்று சொல்லப்பட்டு இருக்கிறது, மக்கள் போராடாமல் இறைவனுக்காய் காத்து கொண்டிருக்க வேண்டும்.

Tuesday 20 December 2011

"ஏழாம் அறிவு" உணர்வுகளை கொன்று கல்லா கட்டுவது

"இது உலக தமிழர்களின் வெற்றி", "இது மக்களின் வெற்றி " இவ்வாக்கியங்களை பார்த்தவுடன் தமிழ்கள் ஏதோ ஈழம் கிடைத்து விட்டது, இல்லை முல்லைப்பெரியார் அணை பிரச்சனை முடிவுக்கு வந்தது என்று நினைத்து விடவேண்டாம். இது ஏழாம் அறிவின் விளம்பரங்கள். ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்த பொழுது ஒரு IT துறையில் வேலை செய்த பெண் மற்றொரு பெண்ணிடம் "எந்த படம் டீ பார்த்த " என்று கேட்க மற்றொரு பெண் "வேலாயுதம்" என்று சொல்ல, அதற்கு இந்த பெண் கடும் சீற்றம் கொண்டாள் "போயும் போயும் விஜய் படமா பார்ப்ப,நான் ஏழாம் அறிவு பார்த்தேன் டீ செம மெசேஜ்,அப்படிப்பட்ட படம் தான் நான் பார்ப்பேன் "என்றாள். ஓரளவு இவர்கள் கொடுத்த விளம்பரங்கள் மக்களை சென்றடைந்து, இது தான் கலை இதை பார்க்காதவன் தமிழன் அல்ல,என்ற மாயை உருவாக்கபடுகிறது.

வலைபூக்களை மேய்ந்த பொழுது ,அனைவரும் தமிழ் பெருக்கெடுத்து கண்டிப்பாய் பார்க்க வேண்டிய படம் என்றார்கள்.முருகதாஸ் வரலாற்றை திரித்து சொல்லிவிட்டார் என்று சில விமர்சனங்கள் வந்தன. நமக்கு வராலாறு தெரியாது ,போதி தர்மர் யாரென்றே தெரியாது.ஆனால் புத்த மதம்,பார்பநீயதிற்கு எதிராய் இருந்தது,களப்பிரர் காலகட்டத்திலே மக்கள் முற்ப்போக்கு நோக்கி போய்க்கொண்டிருந்தார்கள் என்பதை படித்ததுண்டு.ஆனால் வரலாற்றின் தொடர்ச்சியிலே பார்ப்பனர்கள் சேர சோழ பாண்டிய பல்லவ மன்னர்கள்
துணை கொண்டு விரட்டி அடிக்கப்பட்டார்கள்.அப்படி இருக்க போதி தர்மன் பல்லவ மன்னனாய் இருந்திருந்தால் கூட புத்த துறவியாய் மாறியிருக்க வேண்டும்.அதனாலேயே துரத்தப்பட்டு இருக்க வேண்டும்.போதி தர்மன் ஏன் தான் பிறந்த மண்ணில் அக்கலைகளை சொல்லித்தரவில்லை, என்பதையும் வரலாற்று காலகட்டத்தையும் கொஞ்சம் சேர்த்து பார்த்தாலே புரியும் .

இப்படி சமணர்களையும்,புத்த மதத்தை தழுவியவர்களையும் விரட்டி அடிக்கப்பட்ட
காலத்தில் போதி தர்மர் சீனாவுக்கு சென்று இருக்ககூடும்.போதி தருமர் பற்றி இணையத்தை
புரட்டும் பொழுது அவர் ஒரு ஜென் துறவி என்று தெரிந்தது .அப்படி படம் எந்த ஜென் தத்துவத்தையும் சொல்லாமல்,அவர் ஜென் துறவி என்று கூட சொல்லாமல்?அவரை வெறும் கனல் கண்ணன் போல குங்குபு மாஸ்டர் போல காட்ட வேண்டிய அவசியம்?இயக்குனருக்கு எதை காட்டினால் கல்லா கட்டமுடியும் என்று தெரிந்திருக்கிறது .மேலும் புத்த தத்துவத்தை பார்பநீயத்துக்கு எதிராய் காட்ட முடியாது?என்ன டா எதற்கெடுத்தாலும் பார்ப்பனீயம் என்று சொல்கிறானே என்று நினைக்க வேண்டாம்?என் விமர்சனத்தை காப்பாற்றவே இயக்குனர் நாடு முன்னேறாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் இடஒதுக்கீடு என்கிறார்.இப்படி அடிவருடியாய் இருக்கும் இயக்குனரால் ஜென் தத்துவத்தை காட்ட முடியாது.


ஈழ பிரச்னையை அங்கங்கு தொட்டுவிட்டு செல்கிறார் இயக்குனர்,அதனால் இயக்குனரை முற்போக்காய் கருத வேண்டாம்.இலங்கையில் அவ்வசனத்தை வெட்ட வேண்டும் என்று சொன்னவுடனேயே வெட்டி விட்டு தான் ஒட்டி இருக்கிறார்கள். வெளிநாடுகளில் நமக்கு கல்லா ஈழ தமிழர்களே என்பதை தெரிந்து வைத்துள்ளார் இயக்குனர்.யாரை கதாநாயகனாய் போட்டு எடுத்துருக்கிறார்,ரத்த சரித்திரம் என்னும் படம் வந்த பொழுது , அதற்க்கு எதிர்ப்பு
கிளம்பிய பொழுது,நிருபர்களின் கேள்விக்கு பதில் சொன்ன விளம்பர விரும்பி சூரியா "ஈழம் அதெல்லாம் முடிந்து போன பிரச்சன "என்று சொன்னவர் வாயினாலே தமிழர்களின் பெருமையை சொல்கிறார் இயக்குனர். இதை தயாரித்தது என்னவோ சோனியா காந்தி கூட்டணியில் இருக்கும் , ஈழ மக்களை கொல்ல தமிழகம் வழியாய் ஆயுதம் கொண்டுபோன
பொழுதும் அறியாத ,இரண்டு மணிநேரம் உண்ணா விரதம் இருந்த கலைஞரின் பேரன் உதய நிதி தயாரிப்பில் படத்தை வெளியிட்டுள்ளார் இயக்குனர் .

அப்படத்தை வெளியிட்ட நாள் அதைவிட சிறப்பு ,தீபாவளி பண்டிகையை சமண மத நிறுவுனர் மகாவீரர் நினைவுநாளை வெற்றியாய் கொண்டாடுகிறது இந்து மதம் .சமண மதமும்,புத்த மதமும் மக்களை அறிவுடையவர்களாய் ஆக்கியது,திரும்பவும் பார்ப்பனர்கள் வென்றார்கள் , தீபாவளி ஒரு வெற்றிகொண்டாட்டம் .அவ்வெற்றி கொண்டாட்டத்தில்
ஹாப்பி தீபாவளி என்று சொல்லிக்கொண்டே வந்தது "ஏழாம் அறிவு " தமிழ் மக்களுக்கு "ஐந்து அறிவுதான் இருக்கிறது "கல்லா கட்டி விடலாம் என்று நினைத்து கொண்டே.

பின் குறிப்பு :
இதை இப்ப எழுத காரணம், நண்பர் மதி சுதா பதிவிற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தது. இதை முற்போக்கு படம் என்று நினைத்து கொண்டிருந்தவர்களுக்கு,என்னாலான ஒரு சிறு பதிவு.

சினிமாவில் ஈழத்திற்காக பேசும் நாயகர்கள்,முல்லைப்பெரியார் பற்றி பேசுவார்களா?கேரளத்தில் தமிழ் படங்கள் கொண்டாடப்படுகிறதே.முருகதாஸ் சூர்யா சத்தத்தையே காணும்

Monday 19 December 2011

பிரபல பதிவர்

பிரபல பதிவர்
பழைய நினைவுகளை
எழுதும் பொழுது ஆட்டோகிராப்
சேரன் ஆனேன் ,
காதல் கவிதை
எழுதும் பொழுது 'தபு ஷங்கர்'
ஆனேன் ,
சமூக படைப்புகள் , விமர்சனங்கள்
எழுதும் பொழுது மார்காசாய் நினைத்துக்கொள்வேன் ,
FACEBOOK ,TWITTER மூலம் புரட்சி
சாத்தியம் என நினைத்துக்கொள்வேன் ,
பஸ்ஸில் இடிப்பவனை எதிர்க்காத நான்
பெண்ணியம் பற்றி எழுதுவேன் ,
ஏன் இப்படி என்று வினவினால் ?
ஒரு எழுத்தாளன் சாட்சி மட்டுமே என்று மழுப்புவேன் ............
தோழர் போராட வாருங்கள் என்றால் ,
"SORRY பாஸ் எனக்கு லீவ் இல்லை என்பேன் " ,
நான் போராட்டத்திற்கு தயார் ,
போராடும் இடம் மெரினாவாக இருக்க வேண்டும் ,
SUNDAY EVENING ஆக இருக்க வேண்டும் ,
மெழுகுவர்த்தி வேண்டும் ,
கண்டிப்பாய் ஊழலை ஒழிக்க முடியும் ,ஈழத்தை
மீட்க முடியும் , மனிதகுல விடுதலை அடைய முடியும் .

Sunday 18 December 2011

ஐயப்பன் முல்லை பெரியார் பிரச்னையை தீர்த்து வைப்பாரா ?

ஊரே பற்றி எரியும் போது பிடில் வாசித்தானாம் நீரோ மன்னன். ஊரில் ஒரு ஆன்மிக பக்தன் இருந்தானாம் , எப்போது
பார்த்தாலும் பூஜை புனஸ்காரம் தானாம் . ரொம்ப அமைதியாவே இருப்பானாம் . ஊர்ல ஏதாவது பிரச்சனை நடந்தா கூட ,ரோட்ல ரெண்டு பேரு வெட்டிக்கிட்டு செத்தா கூட , அந்த வழில போகாம வேற வழில கோவிலுக்கு போவானாம் . பக்கத்து வீட்டுக்கும் இவங்க வீட்டுக்கும் குழையடி சண்டை வந்துச்சாம் , பக்கத்து வீட்டம்மா இவங்க அம்மாவை தள்ளிவிட்டதுல இவங்க அம்மா மண்டை உடைஞ்சு போச்சு . பையன் வெளில வந்திருக்கான் ,அம்மாக்கு ரத்தம் தலைல வடுஞ்சுக்கிட்டு இருந்துச்சு , அவங்கள பார்த்து "எல்லாம் பகவான் பாத்துக்குவாரு" அப்படின்னு ஒரு அமைதியா ஒரு புன்னைகை புரிந்து , கோவிலுக்கு கிளம்பிட்டான் .கோவில விட்டு வீட்டுக்கு வந்த உடனே அவங்க அம்மா நாக்கு புடுங்கற மாதிரி ஒரு வார்த்தை கேட்டாங்க "என்ன டா சாமி , நமக்கு வர பிரச்சனைய தீர்க்க போகுதா ?, ஒரு குழாய் அடி பிரச்சனைய கூட தீர்க்க முடியல என்ன டா சாமி ,
அம்மா அடிபட்டா கூட எல்லாம் கடவுள் செயல்னு அமைதியா இருக்கிற பைத்தியங்கள பக்தர்களா வச்சுருக்கிற சாமி என்ன டா சாமி ?" இதை எல்லாம் கேட்டுடிட்டு அவன் மந்திர புன்னகையோட அமைதியா ,தேஜஸா ஒரு வார்த்தை சொன்னானாம் ," அம்மா தேங்கா ஒடைக்கணும் கோவிலுக்கு , காசு இருக்கா " அப்படினானாம் , அம்மா கோவத்தோட "முதல்ல உன் மண்டையை உடைக்கணும்னு "சொன்னாங்களாம் .

தமிழ்நாட்டோட வாழ்வாதார பிரச்சனை முல்லைப்பெரியார் அணையா இல்லை சபரி மலையா ?????'
போர் குணத்தோட சில லட்ச மக்கள் போராடா? சில மக்கள் அடிவாங்கினாலும் பரவா இல்லை நாங்க
ஐய்யப்பன் தரிசனம் பார்க்காம வரமாட்டோம்னு அடம்பிடிக்கிறாங்க . கேரளா பா ஜா கா முல்லைப்பெரியார்
பிரச்சனையில் தமிழர்களை விரட்டும்பொழுது வாய் பேசாத தமிழக பா ஜா கா , சபரி மலையின் உரிமையை
விட்டுக்கொடுக்க முடியாது என்கிறது . ஐயப்ப பக்தர்களிடம் சில கேள்விகள்

1 ஐயப்பன் முல்லை பெரியார் பிரச்னையை தீர்த்து வைப்பாரா ?
2 முல்லை பெரியார் பிரச்னையை கூட தீர்த்து வைக்க வேண்டாம் , தன்னை நாடி வரும் பக்தர்களை
அடிவாங்காமல் வீடு திரும்ப ஏற்பாடு செய்வாரா ?

Friday 16 December 2011

பால் விலை ஏற்றத்திற்கு பதில் சொல்லுமா லோக்பால்

முல்லைப்பெரியார் மக்கள் எழுச்சி
தமிழகத்தில் இருந்து யாரும் ஐய்யப்பன் கோவிலுக்கு செல்லக்கூடாது என்று விஜயகாந்த்
சொல்வது தவறு, நமக்குள்ள உரிமையை யாரும் நாம் விட்டுக்கொடுக்க முடியாது என்று சொல்கிறார் பொன் ராதக்கிருஷ்ணன்.தமிழக விவசாயியின் வாழ்வுரிமை இங்கு பாதிக்கப்பட்டிருக்க, வருடத்திற்கு ஒரு முறை போகும் ஐயப்பன் கோவிலை
பற்றி எதிர்க்கட்சி தலைவர் சொல்கிறார், அதற்கு இன்னொரு தேசியக்கட்சி தலைவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதே பா ஜா கா போன்ற தேசியக்கட்சிகள் அங்கொரு முடிவும், இங்கே
தமிழகத்தில் ஒரு முடிவும் எடுக்கின்றனர் .ஏன் இடதுசாரிக்கட்சிகள் விடயத்தை விஞ்ஞான பூர்வமாய் பார்க்காமல்,இனத்தின் கண்ணோட்டத்தோடு பார்க்கின்றனர்,மார்க்சியவாதி
என்பவன் சர்வதேசியவாதி, விஞ்ஞான பூர்வ பார்வை கொண்டவன் , ஆனால் தமிழகத்தில் ஒரு நிலைப்பாடு,கேரளாவில் ஒரு நிலைப்பாடு என்று எடுக்கிறது போலி இடதுசாரி கட்சிகள். ஒரே ஆறுதலான விடயம், ஏன் மகிழ்ச்சியான விடயம் மக்கள் தன் எழுச்சியாக போராடுவது.


பால் விலை ஏற்றத்திற்கு பதில் சொல்லுமா லோக்பால்
பஸ் பால் விலை ஏற்றியது சரி,அது எல்லாம் நட்டத்தில் ஓடுகிறது என்று சொல்கிற நண்பர்களுக்கு ஒரு செய்தி.ஆவின் பால் ஒன்று இரண்டு ஒன்றியங்களை தவிர மற்ற எல்லா இடங்களிலும் லாபத்திலே தான் செல்கின்றன,இதை ஆவின் பால் உற்பத்தியாளர்களே சொல்கிறார்கள்,கோவையில் வருடத்திற்கு பதினைந்து முதல் பதினேழு கோடிகள்
லாபம் பார்க்கிறது, இப்படி பால் விலை உயர்த்துவதால் யாருக்கு லாபம், தனியாருக்கு
மட்டுமே. இப்படி தனியாருக்கு தாரை வார்ப்பது ஊழலில் சேராதா? இந்த பால் விடயம் எல்லாம் ஊழலிலே லோக்பால் மசோதாவில் வருமா,அண்ணாவின்(அன்னா)
தம்பிகள் என்ன சொல்லப்போகிறார்கள்.

Wednesday 14 December 2011

அடுத்த முதல்வர் ரஜினிகாந்த்

முல்லைபெரியார் பிரச்சன எல்லாம் ஒரு பிரச்சனையா அதுக்கு போய் இவ்வளவு பேரு கூடிக்கிட்டு .எங்க தானை தலைவன் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழால கூடிச்சே அது கூட்டம் . முல்லை பெரியார் பிரச்சன தீரனும்னா எங்க தலைவன் ரஜினி முத்துராமன் சார் ,தாணு சார் சொன்ன மாதிரி முதல்வர் ஆகணும் , ஏற்க்கனவே ஷங்கர் முதல்வன் படம் நடிக்க கூப்பிடப்ப நடிக்க முடியல , அடுத்த முதல்வர் நு ஒரு படம் ஷங்கர் வச்சு பண்ணலாம் , கேமிராக்கு ரத்னவேலு மியூசிக் ரெஹ்மான் தம்பின்னு போட்டுடுலாம் , ரெலீசுக்கு இமய மல போய்டலாம் . நீயா நானல்ல கூட ஏன் முல்லை பெரியார் பிரச்சன பத்தி பேசாம ரஜினி பத்தி பேசறாங்க , ஏன் நா அடுத்த முதல்வர் தலைவர் தானே .


நாட்ல நடக்குற எந்த பிரச்சனைக்கு தலைவர் குரல் கொடுக்கல சொல்லுங்க . ஈழத்தமிழன்
சோகமா இருக்க கூடாதுன்னு தலைவர் லண்டன் பிரான்ஸ் கனடா எல்லா இடத்துலையும் படத்த ரிலீஸ் பண்ணி மக்களை சந்தோஷ படுத்துவாறு . அதே மாதிரி ஹொகேனக்கல் திட்டம் பிரச்சன வந்தப்ப ஏன் மன்னிப்பு கேட்டாரு , கர்நாடகால இருக்கற தமிழன் படம் பாக்குனும்ல அந்த நல்ல எண்ணத்துக்காக தான் மன்னிப்பு கேட்டாரு . அதே மாதிரி நாட்டுல மற்றம் வரும்னு வோட் போட்டுட்டு பேட்டி கொடுத்தாரு . அவர் வோட் போட்ட அம்மா , மக்களுக்காக பஸ் பால் வில எல்லாம் கூட்டிருக்காங்க , கரண்ட் இல்லாததால வீட்ட்ல எல்லாரும் மனம் விட்டு பேச முடியுது . பஸ் வில னாலா அல்லாரும் நடந்து போறாங்க ஹெல்தியா இருக்காங்க , இந்த மாதிரி அம்மாவ சொல்லிக்கிட்டே போகலாம் , இத அன்னிக்கே கனிச்ச சூப்பர் ஸ்டார் , நாட்ல ஒரு நல்ல மாற்றம் வரும்னார் , வந்திச்சா இல்லையா ? இப்படி அரசியல கனிச்ச சூப்பர் ,"அடுத்த முதல்வர் " படம் நடிச்ச மட்டும் பத்தாது , அடுத்த முதல்வராகவே ஆகணும் . எங்க அண்ணன் இளைய தளபதி எதிர்க்கட்சி தலைவர் ஆகணும் .

டென்னிஸ் போட்டி நடத்தும் ஏழை , WHITE BOARD பஸ்ஸில் பணக்காரன் புரட்சி தலைவியின் புரட்சி பாதை

கலை வேறு
----------------

'"உன் வாழ்கை உன் கையில் " உங்க கவித படிச்சேன் சார் ரொம்ப சூப்பர்
சார் ,ஜோசியம் ஜாதகத்த கிழி கிழின்னு கிழிசுருக்கீங்க சார் , உங்களுக்கு பாரதின்னு
பேர் வச்சது கரெக்ட் தான் சார் ' . என்று தனக்கு வந்த இன்கமிங் காலில் வாசகனின்
பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தான் கவிஞன் பாரதி போனை வைத்த உடன் , உள்ளே இருந்து அவன் அம்மா "டேய் அந்த பொண்ணோட ஜாதகம் பக்காவா பொருந்தி இருக்காம் , என்ன டா சொல்ற " என்று கேட்டாள் ."ஜாதகம் பொருந்தி இருந்தா முடிச்சிடலாமா "என்றான் . பக்கத்தில் இருந்த நண்பன் "என்ன மாப்ள கவிதைக்கும் உன் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்ல " என்று கூறிய மறுநொடி "மாப்ள கலைய பாரு கலைங்கன பாக்காத " என்றான் புரட்சி கவி .

காதல் GATE
அவன் கல்லூரியிலேயே சிறந்த PROGRAMMER . ஜாவாவில் எட்டு போட்டு லைசென்ஸ் வைத்து இருந்தவன் ."டேய் பில் கேட்ஸ் எப்படி டா , I LOVE U டா " என்று எப்பொழுதுமே விரட்டிக் கொண்டிருப்பாள் அவன் பணக்கார வீட்டு மாமா பெண் . "FRESHERA இருக்கறப்பவே FIVE LAKH PER ANNUM கலக்கு டா பில் கேட்ஸ் I LOVE U " என்பாள் .

சில நாட்களுக்கு பிறகு
----------------------
"எனக்கு வேல போச்சு டீ , RECISSION அமெரிக்கால CLIENT BANK மூடிட்டாங்க ,வேலைய விட்டு தூக்கிட்டாங்க , கொஞ்சம் ரெண்டு மாசம் பொறு வேற COMPANIYA பாத்துக்கலாம் " என்றான் . அவள் பதில் எதுவும் பேசவில்லை ,வீட்டிற்கு வந்து தன் PROFILAI BHARATH MATRIMONIYIL பதிந்தாள் , குறிப்பாக " SOFTWARE ENGINEERS STRICTLY DONT APPLY " என்ற வாசகத்துடன் . அவன் காதலன் BILL GATESAI வீட்டின் GATE வரை கூட அனுமதிப்பதில்லையாம் .
ஜெய் அம்மா
----------------------------------------------------
அம்மா நட்டத்தில் உள்ளதால் பஸ் பால் விலை ஏறி இருப்பதாய் சொன்னார்கள் . ஆனால் சென்னையில் நடக்கும் டென்னிஸ் போட்டிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி , உலக திரைப்பட விழாவிற்கு இருபத்தி ஐந்து லட்ச நிதி . டென்னிஸ் போட்டி நடத்துபவனும் ,உலக திரைப்பட விழா நடத்துபவனும் மிகவும் ஏழை அதனால் தான் ஏழைகள் மீது பாரத்தை சுமத்தாமல் , பணக்காரர்களாகிய WHITE BOARD பஸ்ஸில் போபவர்களிடம் அம்மா பறிக்கிறார் , "நாலு பேரு நல்லா இருக்கணும்னா நாலு கோடி பேர் நாசமா போனா தப்பில்ல ", என்ன நான் சொல்றது

Thursday 1 December 2011

வால் மார்ட் ,பிணவறையில் உட்க்கார்ந்து சாப்பிட முடியுமா

சில்லறை வணிகத்தை இந்தியாவில் கொண்டு வரவேண்டும் , அனைவருக்கும் வேலை கிடைக்கும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் .KRP செந்தில் போன்ற படித்தவர்களே , அந்நிய முதலீடு வந்தால் என்ன தவறு அவர்கள் வரி கட்டுவார்கள் , இங்கே சரவணா ஸ்டோர்ஸ் போல சொந்த ஜாதியிலேயே மக்களை வேலைக்கு அமர்த்தி கொத்தடிமை போல நடத்துகிறார்கள் ,இது அன்னியர்கள் முதலீடு செய்வதால் குறையும் என்று சொல்கிறார்கள் .சரி உண்மையில் வால் மார்ட் என்னும் நிறுவனத்தில் என்ன தான் நடக்கிறது . வால் மார்ட் உலகில் உள்ள நாற்பத்து ஆறு நாடுகளின் வறுமையை வைத்து தனது பசியை போக்கிகொள்கிறதாம். உதாரணமாய் அங்கு வேலை செய்யும் தொழிலாளிகளை அதிக நேரம் வேலை செய்ய வைப்பது , கழிவறைக்கு கூட செல்ல அனுமதிக்காமல் வேலை வாங்குவது , மாசமாய் இருக்கும் பெண்கள் வேலைக்கு இடைஞ்சலாய் இருக்கும் என்று கருகலைக்க சொல்வது . ஒரு தொழிலாளி அவன் உரிமை வேண்டி எதிர்த்தால் அவனை கட்டம் கட்டுவது இப்படி நாற்பத்தாறு நாடுகளில் தன் கொடுங்கோல் ஆட்சியை நிறுவுகிறது வால் மார்ட் .

வால் மார்ட் மொத்தம் 102 டாலர் மில்லியன் கம்பெனி . அனைத்து பொருட்களையும் நம்ம ஊரு சரவணா ஸ்டோர்ஸ் போல மலிவான விலையில் கிடைக்கும் இடம் ,இது எப்படி சாத்திய படுகிறது , ஊழியர்களின் கடுமையான உழைப்பு , ஒரு நாளில் குறைந்தது பதினான்கு மணி நேர உழைப்பு , சில குழந்தைகள் 18 மணி நேரம் வேலை செய்வதினால் அங்கேயே படுத்து உறங்குகிறார்கள் . இது தான் இவர்கள் தரும் வேலையின் லட்சணம். 48 நாடுகளில் வால் மார்ட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் உள்ளன . அத்தனை நாடுகளும் ஏழை நாடுகள், மூன்றாம் உலக நாடுகள் . அந்நாடுகளில் வறுமை தலைவிரித்து ஆடும் ,வேலை வாய்ப்பு மிகக்குறைவாய் இருக்கும் , அத்தகைய நாடுகளில் புகுந்தால் வேலை தருகிறேன் என்று சொல்லிவிட்டு கம்மியான கூலிக்கு சுரண்ட முடியும் , கம்மியான விலைக்கு விற்க முடியும் , சந்தையை காப்பாற்ற முடியும் இது தான் வால் மார்டின் தாரக மந்திரம் , வெற்றியின் மூலதனம் .

வால் மார்டில் வேலைசெய்வோறது வருட சம்பளம் 400 டாலராம் . அதாவது தோரையமாய் 20000 ரூபாய் . வால் மார்டில் அதிகமாய் பெண்களையும் குழந்தைகளையும் வேலைக்கு வைக்கிறார்கள். அவர்களை தானே மலிவான விலைக்கு வேலை வாங்க முடியும் . குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதில் வால் மார்ட் பங்களாதேஷிலும் , சீனாவிலும் மாட்டி உள்ளது . குற்றசாட்டு என்ன வென்றால் , மற்றவர்கள் வேலை செய்வதை விட அதிக வேலை குறைந்த கூலி கொடுக்கப்பட்டதாம் . சீனாவில் நாள் ஒன்றிற்கு இருபது மணி நேர வேலை , ஏழு நாட்கள் வேலை , குறைந்த கூலி , வேலை செய்தது குழந்தைகள் , கேட்கவே ரணமாய் தான் உள்ளது அல்லவா ????

நாமெல்லாம் அங்காடி தெரு பார்த்து விட்டு சரவணா ஸ்டோர்ஸ் கடையை திட்டிகிறோம் , உண்மையில் வால் மார்ட் கடையில் என்ன நடக்கிறது , சீனாவில் NIKE சூ தயாரிக்க குழந்தை தொழிலாளர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள் . கண்டிப்பாய் நூறு சூ தயாரிக்க வேண்டும் ,அதில் ஒரு சூ தவறாய் இருந்தாலும் அன்றைய
கூலி குழந்தைகளுக்கு கிடையாது இதுவே வால் மார்ட் நிலை . மூன்றாம் உலக நாடுகளில் வால் மார்ட் தொழிற்சாலைகள் ஆபத்தான தொழில்நுட்பத்துடன் தான் இருக்குமாம் , தண்ணீர் குடிக்க , ஒன்றுக்கு போக , இரண்டுக்கு போக கூட வழி இல்லாமல் தான் தொழிலாளர்கள் , கொத்தடிமையாய் இருப்பார்கள் .
படிக்கும் பொழுதே நம் அங்காடி தெரு போல நூறு மடங்கு பிரச்சனை இருக்கும் என்று தெரிகிறது .

இத்தனை பிரச்சனைகள் வால் மார்ட் என்ற ஒரு நிறுவனத்துக்கே இருக்கிறது , இப்படி சில்லறை வணிகத்தில் ஐம்பத்தி ஒரு சதவிகிதம் வந்தால் , இந்திய மக்கள் தொகை ஐம்பத்தி ஒரு சதவிகிதம் குறையும் என்பதில் ஐயமில்லை .நான் சொல்வதில் பிழை இருந்ததாக நினைத்தால் , WALL MART என்று இணையத்தில் அடித்து தேடிப்பாருங்கள் . நம்மிடம் இன்று பொருட்களை வால் மார்ட் எவ்வளவுக்கு விற்றாலும் காசு கொடுத்து வாங்க கூடிய வசதி இருக்கலாம் . அதனால்
நாம் HIPPY ஆங்கிலம் பேசிவிட்டு "IF FOREIGN INVESTORS COME ,SO வாட்" என்று கேட்கலாம் . பிணங்களின் மீது அமர்ந்து உண்ண முடியுமா???????

சில்லறை வியாபாரமும் , குஸ்புவின் விலைவாசி பற்றிய கூட்டமும்

நேற்று சில்லறை வியாபாரத்தில் அன்னிய முதலீடு பற்றி கலைஞர் குறிப்பிடும் பொழுது " பொருளாதாரம் சுனாமீக்குள் சிக்கிக்கொள்ளும் " என்று சொல்லிவிட்டு ,இன்று கூட்டணி கட்சி அதனால் பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிப்பேன் என்று தி மு க சொல்லி உள்ளது.அப்படி என்றால் கலைஞர் கூற்றின் படி மக்கள் முக்கியம் அல்ல கூட்டணி கட்சியான காங்கிரஸ் முக்கியம் , தேவை பட்டால் நாட்டையே கூட்டிக்கொடுக்கலாம் .
இப்படி வோட்டு கட்சிகள் மக்கள் முன்பு அம்மனமாய் இருக்கின்றனர் . அதில் இன்று தி நகரில் விலைவாசி உயர்வை பற்றி கூட்டம் போடப்போகிறார்கள் .விலைவாசி உயர்வால் பாதிக்கப்பட்ட குஷ்பு அதில் வீர உரை ஆற்ற உள்ளார் . இங்கு சிறு வணிகர்களுக்கு ஆப்பு வைத்துவிட்டு , அங்கே விலைவாசி உயர்வை பற்றி பேசினால் தமிழக மக்களுக்கு புரியவா போகிறது . இருக்கவே இருக்கிறது இலவசங்கள் என்று கலைஞர் நினைத்து இருக்க கூடும் .

சில்லறை வணிகத்தை பற்றி நண்பர்களுடம் பேசிக்கொண்டிருந்த பொழுது ,அவர்கள் அதை வரவேற்றார்கள் .இதில் என்ன தவறு உள்ளது , வந்தா நல்லது தானே என்ற தொனியில் பேச்சுக்களை கொடுத்தார்கள் . நான் எனக்கு தெரிந்த அரசியல் மூலமாய் விளக்க முற்ப்பட்டேன் , பெப்சி கோக் இருவரும் எப்படி நாட்டில் உள்ள , பன்னீர் சோடா காளிமார்க் போன்ற வற்றை அழித்தார்கள் என்று விளக்கினேன் . பெப்சி கோக் வைத்து இருக்கும் கடைகளில் ஒரு FRIDGE இருக்கும் அதில் அவர்கள் பொருட்களே விற்பனை செய்யப்படும் , இவர்கள் கடைக்கு கொடுக்கும் பொழுது அந்த குளிரூட்டி இலவசமாய் கொடுக்கப்படும்
பின்பு அவர்கள் கடைக்காரர்களை மிரட்டுவார்கள் , எங்கள் பொருட்களை மட்டுமே விற்க வேண்டுமென்று . அந்த குளிரூட்டியில் பன்னீர் சோடா , போன்ற ஏனைய
பொருட்களை விற்க கூடாது என்று கடைக்காரர்கள் மிரட்டப்படுவார்கள் . அப்படி மற்ற குளிர்பானங்கள் அழிக்கப்படும் . நான் நாகப்பட்டினம் சென்ற பொழுது ஒரு கடையில் பன்னீர் சோடா கேட்டேன் அங்கு இல்லை ஆனால் பெப்சி இருந்தது என்பதே உண்மை நிலை .

மாப்பிளை விநாயகர் திரையரங்கிலே அவர்கள் சோடா விற்க முடியாது இதுவே இன்றைய நிலை , என்பதை விளக்கினேன் . மேலும் பன்னாட்டு நிறுவனங்கள் வந்தால் தண்ணீர் இலவசமாய் வழங்கப்படும் இல்லை குறைந்த விலைக்கு கொடுக்கப்படும் , மின்சாரமும் அப்படியே . ஆனால் அச்செலவுகள் சாமனிய மக்களின் சட்டை பையிலிருந்து உருவப்படும் .
இதனால் தான் நடக்கிறது விலைவாசி ஏற்றம் . இப்படி பெப்சி கோக் இவ்வளவு வேலை செய்தால் , வால் மார்ட் நம் சந்தையில் நுழைந்தால் ,சந்தை கைப்பற்றிவிட்டால் , அவர்கள் வைப்பது தான் விலை , அரசும் அவர்களுக்கு துணை புரியும் , விலைவாசி ஏற்றத்தை மக்கள் தலையில் கட்டும் .
இப்படி விலைவாசி ஏற்றத்தை எதிர்த்து , அதே நேரத்தில் சில்லறை வியாபாரத்தையும் ஆதரித்து வாக்களிக்க முடியுமா . அதை தான்
தி மு க செய்கிறது . அதிலும் குஷ்பு போன்ற வறுமையில் வாடுபவர் , தி மு க கட்சியில் இருந்து ஆரம்பம் முதல் போஸ்டர் ஒட்டிய தொண்டர் குஷ்பு பேசப்போகிறார் நானும் பார்க்க போகிறேன் .