Tuesday, 30 November 2010

நந்தலாலா -ரசிகனுக்குள் ஒளிந்திருக்கும் ஆணாதிக்கம்

நந்தலாலா ஒரு மன எழுச்சியான படம் " தமிழில் முதல் திரைப்படம் " என்றெல்லாம் ஒருபக்கம் பாராட்டு மழை .
இன்னொருபுறம் படம் கிகுஜிரோ பார்த்து களவாடப்பட்டு இருக்கிறது என்ற குற்றசாட்டு . நானும் கூட குற்றம் சாட்டினேன் . கிகுஜிரோவை தழுவி எடுத்ததை தவிர மற்ற விடயங்கள் எனக்கு பிடித்து தான் இருந்தது . திரைஅரங்கில் கிகுஜிரோ பற்றி தெரியாத பாமர ரசிகன் ஒவ்வொரு காட்சியையும் ரசிதுக்கொண்டே கைதட்டுகிறான் . இதனிடையில் நேற்று மகள்நேயா என்னும் வலைப்பதிவர் தளத்தில் நந்தலாலா விமர்சனம் படித்தது நந்தலாலா படத்தை விட என்னை பெரிதும் பாதித்தது . எனக்குள் இருக்கும் ரசிகனை கூர்ந்து வாசிக்க தொடங்கினேன் .

ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவரும் , ஒரு சிறுவனும் தன் தாயை தேடி செல்கிறார்கள் என்பதே கதையின் அடிநாதம் . சிறுவன் தன் அப்பா ஓடிவிட்டார் என்று நகைச்சுவையாய் சொல்கிறான் , பாஸ்கர் மணி என்ற மனநல பாதிக்கப்பட்டவன் சிரிக்கிறான் அரங்கமே கைதட்டுகிறது . ஆனால் முரணாய் பாஸ்கர் மணி சிறுவனின் அம்மாவை பார்க்கிறான் , அவள் அவள் சூழலை விளக்குகிறாள் , கன்னத்தில் அறைந்துவிட்டு செல்கிறான் , திரை அரங்கம் கைதட்டுகிறது பாஸ்கர் மணியின் வீரத்தையும் பாசத்தையும் மெச்சுகிறது . குழந்தையை தவிக்கவிடும் தந்தையானாலும் , தாயானாலும் தண்டிக்கபடவேண்டியவர்களே , ஆனால் தாயை
அடிக்கும் பாஸ்கர் மணி , தந்தையை குற்றம்சாட்டவில்லை . ஆணாதிக்க சமூகத்தில் வளர்ந்த நம் அனைவரின் மன எழுச்சிக்கு காரணம் இதுவே .

"அம்மா நல்லவ இல்ல " என்று பாஸ்கர் மணி குழந்தையிடம் சொல்கிறான் . "ஆட்டோகிராப் " ரசிதவர்களால் ஒரு பெண் இருவரை மனம்முடிப்பதை போன்ற ஒரு ஸ்டில் வந்த படத்தின் போஸ்டர் கூட ரசிக்க முடியாது . இப்படி பெண்ணிற்கே குடும்ப பொறுப்பு இருக்கிறது , ஆணிற்கு இல்லை என்று படம் சொல்கிறது . அதுவே மன எழுச்சியாக இருக்கிறது படித்த அறிவாளிகளுக்கு . சரி இந்த படம் எப்படி ஜப்பான் நாட்டு சூழலுடன் ஒத்து இருந்தது . ஜப்பானும் இந்தியா போலவே , பெண் அடிமைத்தனம் இருக்கும் நாடு . ஏன் உலக திரைப்படவிழாவில் பல விருதுகள் வாங்கியது என்று யோசிக்கும் பொழுது தமிழில் "தே மகன் " கெட்ட வார்த்தையை போல ஆங்கிலத்தில் "பாஸ்டர்ட் " என்ற வார்த்தை மிக பிரசித்தம் . ஒருவனை திட்டவேண்டும் என்றால் அவன் அம்மாவை திட்டும் பழக்கம் மட்டுமே உள்ளது . இங்கு எந்த ரசிகனிடமும் , சிறுவனிடமும் , பாஸ்கர் மணியிடனும் தந்தையை பற்றி கேள்விகளே இல்லை .

இப்படத்தை உண்மையில் ரசிக்கிறோம் என்றால் நமக்குள் ஆணாதிக்கவாதி உறங்கிக்கிடக்கிறான் . அனைவரும் படிக்கவேண்டிய பதிவு
தாய்மைச் சுமை

Friday, 26 November 2010

அலசல்

ராஜாவுக்கு பதில் யார் ?

ராஜாவின் மீதான ஊழல் நிரூபிக்கப்படவில்லை அதனால் இது ஊழல் இல்லை என்கிறார்கள்.
BSNL தொழிலாளர்கள் தங்கள் உழைப்பால் உருவான தகவல் தொடர்புதுறையை நட்டப்படுத்தியது எப்படி ஊழலாகும் என்கிறார்கள் . அரபிக் கடல் ஓரத்தில் இருக்கும் பண்ணா , முக்தா என்ற எண்ணை வயல்களின் மதிப்பு 2000 கோடி , அப்பொதுத்துறையை கட்டியாமைத்தவர்கள் தொழிலாளர்கள் .அதை அரசு வெறும் பனிரெண்டு கோடிக்கு அம்பானியிடம் விற்றது அது ஊழல் , அதை போன்ற ஊழலே ராஜாவின் ஊழல் . இவ்வரசு தனியார் பன்னாட்டு முதலாளிகளுக்கும் , தரகு முதலாளிகளுக்கும் உண்டான அரசு . இந்த நட்டம் எல்லாம் எப்படி சரிகட்டப்படும் நம் வரிப்பணத்தில் இருந்து தான் .

BSNL அலைவருசையை ரிலையன்ஸ் கலவாடியத்தில் 1500 கோடி நட்டம் , அதற்க்கு
நட்ட ஈடு வெறும் 90 லட்சம் . ஊழல் செய்த ராஜா பதவி விலகிவிட்டாராம் , அப்பா பெரிய தண்டனை . உலக வங்கியும் பன்னாட்டு நிறுவனங்களும் ஆளும் வரை ராஜா என்பவரை தூக்கிவிட்டு வேறு யார் இருந்தாலும் இந்த ஊழல் தொடரும்.


கிகுஜிரோ அட்டை டு அட்டை

நந்தலாலா படம் கிகுஜிரோவின் அப்பட்டமான காப்பி . காட்சிக்கு காட்சி திருடிவிட்டு அவரே
அனுபவித்தமாறு பேசுகிறார் . ஏன் தமிழகத்தில் சொல்லப்படவேண்டிய கதைகளே இல்லையா ??? காப்பி அடிக்கவேண்டியது தான் அதற்காக அங்கு காட்டப்படும் குறியீடு பாம்பு , ஒரு புழு , பனையோலை சொருகி கொள்ளும் மிஸ்கின் சிறுவன் என்று காட்சிக்கு காட்சியா பிட் அடிப்பது .கோணங்கள் முதல்கொண்டு காப்பி செய்யப்பட்டுள்ளது , உதாரணமாய் மிஸ்கின் பையனின் அம்மாவிடம் பேசும் காட்சி .

இதில் லட்சியத்துடன் ஊரில் இருந்து வரும் உதவி இயக்குனர்களை காயப்படுத்துவதை போல பேசுவது . இரண்டரை லட்சத்திற்கு புக் வாங்கி உள்ளாராம் ??? வாழ்க்கையை உலக சினிமாவிலும் , புத்தகங்களிலும் தேடாதீர்கள் மிஸ்கின். கண் திறந்து பாருங்கள் காட்சிகள் கொட்டிக்கிடக்கிறது .

Thursday, 25 November 2010

நீதித் துறை பேசும் காவி மொழியை அம்பலமாக்கும் கூட்டம்

அயோத்தி தீர்ப்பு வெறும் இந்து மதத்தின் நம்பிக்கையை வைத்து கொடுக்கப்பட்டுள்ளது .
மனுதர்மம், இந்த சாதி இந்த வேலையை தான் செய்யவேண்டும் என்று சொல்கிறது , அதுவும்
இந்து மத நம்பிக்கையே . இந்து மதம் அனைவரையும் ஒன்றாய் பாவிக்கிறதா என்ன ?
பார்பனன் அல்லாதவன் கருவறைக்குள் நுழையமுடியுமா . சொந்த மதத்திலேயே தீண்டாமை
இருக்கும் மதம் இந்து மதம் . தீர்ப்பு இந்து மதத்தின் நம்பிக்கையில் இருக்கிறது என்றால் இதையும் நீதிமன்றம் ஏற்றுகொள்கிறதா ? இதை எல்லாம் அம்பலப்படுத்தும் வகையில் ஒரு கூட்டம் நடக்கிறது

நிகழ்ச்சி நிரல்:

அரங்கக்கூட்டம்

தலைமை : திரு.க.சுரேஷ், வழக்குரைஞர், செயலாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை.

கருத்துரை :

”நீதித்துறை பேசும் காவி மொழி” திரு.எஸ்.பாலன், வழக்குரைஞர், பெங்களூரு உயர் நீதிமன்றம்.

“அயோத்தி முதல் ராமன் பாலம் வரை” திரு.ஆர்.சகாதேவன், வழக்குரைஞர், சென்னை உயர் நீதிமன்றம்.

“அயோத்தி தீர்ப்புக்கு எதிராக தீ பரவட்டும்” திரு.எஸ்.ராஜு, வழக்குரைஞர், மாநில ஒருங்கினைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

விவாத அரங்கம் :

வாக்குரைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் பங்கேற்ப்பு! அனைவரும் வாரீர்!

நாள் : 28.11.2010, ஞாயிறு மாலை 4.30 மணி

இடம் : செ.தெ.நாயகம் மேல்நிலைப்பள்ளி, வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை -17.

தோழமையுடன் அழைக்கும்,

மனித உரிமை பாதுகாப்பு மையம்

தொடர்புக்கு :
க.சுரேஷ் – 98844 55494
வினவு – 97100 82506

Thursday, 18 November 2010

புதினம் முடிகிறது நினைவுகள் தொடங்குகிறது

1940களில் நடந்த கையூர் விவசாயிகளின் போராட்டத்தை பற்றி எழுதப்பட்ட புதினம் "நினைவுகள் அழிவதில்லை ". வரலாற்று பின்னணியில் அக்காலத்தை வைத்து பார்க்கும் பொழுது அது உலக யுத்தம் நடந்த கால கட்டம் ,நிலபிரபுக்களின் ஆதிக்கம் நிறைந்த காலம் . உழைப்பவனுக்கு விவசாயிக்கு நிலம் இல்லாத கால கட்டம் . இதற்க்கு முன் "மலபார் மாப்பிள்ளைக் கிளர்ச்சி" போன்ற போராட்டங்கள் நடந்த காலகட்டம் . விவசாயிகள் படிப்பு அறிவில்லாமலோ,இல்லை கையெழுத்து மட்டுமே போடத்தெரிந்தவர்களாக இருந்த காலகட்டம் . அரசியல் அறிவு கூர்மை இல்லாத காலகட்டம் .இப்படிப்பட்ட காலகட்டத்தில் விவசாயிகளை அணிதிரட்டி , உங்களால் போராடமுடியும் என்று வலு சேர்த்து போராடிய இருபத்து ஐந்து வயது கூட ஆகாத நான்கு தோழர்கள் கையூர்த் தோழர்கள் . அத்தோழர்களின் வாழ்க்கையை உண்மை சம்பவத்தை பதிவு செய்த புதினம் "நினைவுகள் அழிவதில்லை ".

ஒரு திருவிழாவுடன் புதினம் தொடங்கபடுகின்றது , திருவிழாவில் கையூர் போராட்டத்தில் மரணம் அடைந்த தியாகிகள் நினைவுகூற படுகிறார்கள் ,அதனூடாக புதினம் விரிகிறது .கையூரில் மரணம் அடைந்த தோழர்கள் மடத்தில் அப்பு , சிருகண்டன் , அபு பக்கர் ,குஞ்ஞம்பு. அப்பு சிருகண்டன் இளமை காலங்கள் , அவர்களை வழி காட்டிய மாஸ்டர் அங்கு ஆதிக்கம் செய்த நிலப்பிரபுக்கள் அவர்களை எதிர்த்து விவசாயிகளை அணிதிரட்டியது , அவர்களின் அடக்குமுறையால் போராட்டத்தில் வீர மரணம் அடைந்தது என்று செல்கிறது புதினம் .

அப்பு நடுத்தர விவசாயி வீட்டில் இருந்து வருகிறான் , சிருகண்டன் கூலி விவசாயி குடும்பத்தில் இருந்து வருகிறான் . புதினத்தின் ஊடாகவே அவர்கள் நண்பர்களாக இருந்தாலும் , அந்த வர்க்கம் எப்படி நடந்துகொள்ளும் என்பதை இயல்பாய் படம்பிடித்து காட்டுகிறார் ஆசிரியர் .அப்புவின் குடும்பம் நடுத்தர விவசாய குடும்பம் என்பதால் சிருகண்டன் சந்திக்கும் பிரச்சனைகள் ஆப்பு சந்தித்ததில்லை . சிருகண்டணிற்கு போராட்டமே வாழ்கை , அவன் அப்பா நிலபிரபுவிற்கு அடிமையாய் உள்ளார் , ஆனால் அப்புவிற்கு போராட்டம் என்பது அவன் விருப்பத்தில் இருந்து வருகிறது . அதனால் மாஸ்டர் சொல்லித்தரும் அரசியலை அப்புவை விட சிர்கண்டணிற்கு கூர்மையாய் புரிகிறது . ஆனாலும் அப்பு சிருகண்டனிடமிருந்து அரசியல் கூர்மையை படிப்பால் வந்தடைகிறான் . இரு தோழர்களின் உழைப்பும் முக்கியம் ஆனாலும் ஒரு வர்க்கம் என்ற முறையில் எப்படி வருகிறார்கள் , அப்பு எப்படி மாற்றிக்கொள்கிறான் என்பதை அழகாய் படம்பிடித்து காட்டுகிறது புதினம்.

அப்புவையும் சிருகண்டனையும் மாஸ்டர் வழிகாட்டுகிறார் . மாஸ்டர் இருவரையும் ஒரு இடத்திற்கு வர சொல்கிறார் . தேஜஸ்வினி நதிகடந்து படகில் வருகிறார்கள் சிறுவர்கள் . அங்கே மாஸ்டர், அமைப்பு தலைவர், பயில்வான் முதலியவர்களை சந்திக்கிறார்கள் சிறுவர்கள் . அமைப்பு தலைவர் தலைமறைவு வாழ்கை வாழ்பவர் , அரசியல் நுணுக்கங்களை தலைவர் சிறுவர்களுக்கு விளக்குகிறார் .ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உழைக்கும் மக்களை எப்படி ஒன்று சேர்ப்பது என்ற வர்க்க பார்வையில் தலைவர் சிறுவர்களுக்கு விவரிக்கிறார் . இது புதினத்தின் முக்கியமான இடம் , சிருகண்டனும் அப்புவும்
அரசியல் பார்வை பெறுவது இந்த இடத்தில் தான் .தினமும் அப்புவும் , சிருகண்டனும் அரசியல் விவாதம் செய்கிறார்கள் . தலைவர் மாணவர்களை பத்திரிகை படிக்கசொல்கிறார் , சரி என்கிறார்கள் . எதாவது ஒரு விடயத்தில் சந்தேகம் வந்தால் மாஸ்டரை கேட்கிறார்கள். அவர்கள் அரசியல் மேலும் மேலும் கூர்மை அடைகிறது .


அரசியலை தங்கள் கிராமத்துடன் பொருத்தி பார்க்கிறார்கள் . கையூரில் இரு நிலபிரபுக்கள் அவர்களின் கோர பிடியில் கையூர் இருந்தது . உழைக்கும் விவசாயிகளுக்கு நிலம் இல்லை , என்ற நிலைமை . அப்படி இருக்கும் பொழுது மக்களை அணிதிரட்டுவதால் மட்டுமே விடுதலை அடையமுடியும் என்று அப்பு சிருகண்டனிடம் சொல்கிறான் .மாஸ்டர் அனைத்து விவசாயிகளையும் பத்திரிகை படிப்பதை அறிமுகம் செய்கிறார் , இதை அறிந்த நிலப்பிரபு மாஸ்டரை கூப்பிட்டு இதை மறைமுகமாய் கண்டிக்கிறார் . கையெழுத்து மட்டும் போடத்தெரிந்தால் போதாதா என்கிறார் .இப்படி படித்தால் யாரும் வேலைக்கு போகமாட்டார்கள் என்று மாஸ்டரிடம் சொல்கிறார் . தன் மகனிற்கு பள்ளி முடிந்தவுடன் மாஸ்டர் டியூஷன் சொல்லித்தரவேண்டும் என்கிறார் .இங்கு டியூஷன் பிரதானம் அல்ல , ஆளும் வர்க்கம் வேலையை எப்படி நரித்தனமாய் கெடுக்கும் என்பது சுட்டிக்க்காட்டபடுகிறது . மாஸ்டர் டியூஷன் எடுக்க வந்தால் , விவசாயிகளுக்கு யார் அரசியல் அறிவு
தருவார்கள் ,இதை கெடுப்பதற்கான வேலையை நிலபிரபு செய்கிறார் .

ஆளும் வர்க்கம் அடிமைப்பட்ட வர்க்கத்தை ஒடுக்க எவ்வாறெல்லாம் செயல்படும் , வர்க்கப்போராட்டம் எப்படி கூர்மை பெறுகிறது என்பதை புதினம் பதிவு செய்கிறது . கிருஷ்ணன் நாயர் என்ற சிறுவிவசாயி நிலபிரபுவால் பாதிக்கப்பட்ட ஒரு விதவையை கல்யாணம் செய்வது போன்ற பெண்ணியத்திற்கு உண்டான கூறுகள் இப்புதினத்தில் நிறைந்து காணப்படுகிறது . அப்புரட்சிகர திருமணத்தை மாஸ்டரின் வழிகாட்டுதலுடன் செய்கிறார் கிருஷ்ணன் நாயர் .


விவசாயிகள் அனைவரும் ஒரு வீட்டில் பத்திரிகை படிக்கிறார்கள் . புரட்சிகர அரசியலை கற்று தேர்கிறார்கள் . அப்பொழுது பக்கத்து ஊரில் விவசாயிகள் மாநாடு நடக்கிறது . அப்பு சிருகண்டன் அனைவரும் செல்கிறார்கள் . அதே சமயம் ஊரில் கிருஷ்ணன் நாயரிடம் வரி கேட்க நிலப்பிரபு வருகிறார் , கிர்ஷ்ணன் நாயர் கொடுக்க மறுக்கிறார் , அதை பார்த்த மற்ற சிறுவிவசாயிகளுக்கும் ஒரு நம்பிக்கை பிறக்கிறது . மாஸ்டர் உள்ளூரில் கிர்ஷ்ணன் நாயரை வழிகாடுவதற்க்காய் மாநாடு செல்லாமல் இருக்கிறார் . நிலப்பிரபு பெரும் திரளான ஊர் மக்களும் விவசாயிகளும் மாநாட்டிற்கு சென்றதற்க்காய் கோபம் கொள்கிறார் . மறுநாள் கிருஷ்ணன் நாயரிடன் வரிகளை அடித்து பிடுங்குகிறார் . மாஸ்டரை கூப்பிட்டு கண்டித்து வேலையைவிட்டு நீக்குகிறார். பள்ளியை இழுத்துமூடுகிறார் .அந்த ஒருநாள் மட்டும் வரிகட்டாமல் இருந்தது அதில் தோல்வி அடைந்தது எல்லாம் பின்னால் நடக்கும்
போரட்டத்திற்கு எல்லாம் விதையாய் இருந்தது .



மாஸ்டர் ஊரை விட்டுசெல்கிறார் . புதினத்தின் இரண்டாம்பாகம் தொடங்குகிறது . அப்பு , சிருகண்டன் இருவரும் வாலிபர்கள் ஆகி விட்டார்கள் . விவசாய சங்கம் கட்டிவிட்டார்கள் , அப்பு விவசாய சங்க தலைவர் ஆகிவிட்டான் , அவன் வீட்டின் மாடியில் சிகப்புக்கொடி கம்பீரமாய் பறந்தது . அவ்விவசாய சங்கத்தில் அப்புவின் அப்பா சிருகண்டனின் அப்பா அனைவரும் இருந்தனர் . அபூபக்கர் என்ற தோழன் நிறையபோரட்டங்களை வழிநடதியவன் . ஒரு தலைவன் போல தோழர்களை வழிநடத்தும் ஆற்றல் உள்ளவன் . அவன் கூடவே இருந்தது அப்புவிற்க்கும் சிருகண்டனுக்கும் பக்கபலமாய் இருந்தது . அப்புவின் தம்பி பாலர் சங்கத்தலைவன் , சிறுவன் . விவசாய சங்கம் தீவிரமாய் இருந்தது , அவர்கள் வளர்ச்சி நிலப்பிரபுக்களை உறுத்தியது .

அக்காலத்தில் நிலப்பிரபுக்கள் பல் பிடுங்கப்பட்ட பாம்பு போல இருந்தனர் . தக்க சந்தர்ப்பம் பார்த்து காத்துக்கிடந்தனர் . விவசாயிகள் போராடி பள்ளியை திறந்தனர் . மேலும் உழுபவர்களுக்கே நிலம் என்ற கோரிக்கையில் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர் தோழர்கள் . அப்பொழுது நிலப்பிரபு இவர்கள் ஆதிக்கத்தை ஒடுக்க ஒரு காவலனை வரவழைத்தார் . நிலப்பிரபுவின் வீடு முன்பு கூட்டம் நடந்து சென்றது கோஷங்கள் விண்ணை முட்டின "உழுபவர்களுக்கே நிலம் சொந்தம் " என்ற கோஷம் விண்ணை முட்டியது .காவலனை
பார்த்தவுடன் காவலனுக்கு எதிரானா கோஷங்கள் விண்ணை முட்டின . கோபம் கொண்ட காவலன் அடிக்க ஓடி வர , கூட்டம் சேர்ந்து அவனை அடிக்க , அங்கேயே இறக்கிறான் . தோழர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் , அப்பு , அபூபக்கர் தப்பி செல்கிறார்கள் .

நிலபிரபுக்களின் ஆதிக்கம் கோரமாய் இருக்கிறது , பெண்கள் வன்புணர்ச்சி செய்யபடுகிறார்கள் இதை அறிந்த அப்பு அபூபக்கர் சரணடைகிறார்கள் . வழக்கு நடக்கிறது , பொறுப்பில் இருக்கும் நால்வருக்கு தூக்கு தண்டனை கொடுக்கபடுகிறது , மாஸ்டருக்கு ஆயுள் தண்டனை , தலைவர் தேடப்படும் கைதி , அப்புவின் தம்பி பாலர் சங்க தலைவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படுகிறார் .அதாவது சிறுவயிதிலேயே போராட்டத்தை ஏற்றுக்கொண்டு ,ிலபிரபுவிற்கு எதிரான போராட்டத்தை செய்த சிறுவன் சீர்திருத்த பள்ளியில் .
மக்களிடம் எதிர்ப்பு பலமாய் கிளம்பியது . தோழர்களை விடுதலை செய்யவேண்டும் என்ற முழக்கம் நாடெங்கும் பரவியது .

வெறும் கொலைக்காக கொடுக்கப்பட்ட தீர்ப்பு அல்ல இது , நிலபிரபுவிற்கு எதிராய் ஒரு வர்க்கம் எழக்கூடாது என்பதற்காய் கொடுக்கப்பட்ட தீர்ப்பு .தூக்கு மேடைக்கு போகும் முன்பு அணைத்து குடும்பத்தினரும் அனைவரையும் பார்க்க வரும் இடம் உருக்கமானது . சிறுவயதில் அப்பு வெட்டியாய் போய் விடுவான் என்று அவன் தந்தை நினைக்கிறார் . சிறையில் அப்பு அவரை பார்த்தவுடன் " நான் வெட்டியா எல்லாம் போய்விடல அப்பா " என்று சொல்லும் காட்சியும் . அபுபக்கர் அம்மாவும் தம்பியும் வருகிறார்கள் , அம்மா சொல்வதை தம்பி கேட்க மாட்டேன் என்கிறான் என்கிறாள் அம்மா . அபு அவனிடன் ஏன் கேட்க மாட்டேன் என்க்கிறாய் என்று கேட்க . தம்பி " அம்மா படிக்க வேண்டாம் என்கிறார்கள் " என்று தம்பி சொல்ல . ஏன் அப்படி சொன்னீர்கள் என்று அபு கேட்க அம்மா " அவன் உன்னமாதிரியே எல்லாத்தையும் படிக்கிறான் டா " என்று சொல்ல " ஏதோ கோவத்துல சொலிட்டேன் என்று சொல்ல " ஒரு தாயின் உள்மன போராட்டமும் , வர்க்க போராட்டமும் துயரம் வலி போன்றவைகளை மனதில் பதிய செய்து ஆழ்ந்த துக்கத்தை ஏற்ப்படுத்துகின்றன.

தூக்கு மேடைக்கு போகும் முன் நால்வரும் மக்களுக்கு கடிதம் எழுதுகிறார்கள் , அது புரட்சிகரமானது . தூக்கிற்கு முன் உங்கள் கடைசி ஆசை என்ன என்று கேட்க "மாஸ்டரை காண வேண்டும் " என்று சொல்கிறார்கள் . மாஸ்டர் ஆழ்ந்த சோகத்தில் வருகிறார் . மாஸ்டருக்கு அவர்கள் சிறுவயது அப்பு சிருகண்டனாகவே தெரிகிறார்கள் . மாஸ்டர் நால்வரையும் பார்த்து ஒன்றாய் இருக்க வேண்டும் என்று சொகிறார் . அதவாது மதம் , ஜாதி , என்ற விடயங்களை எல்லாம் தவிர்த்து மக்கள் ஒன்றாய் வர்க்க போராட்டம் செய்ய வேண்டும் என்று பொருளில் அமைக்கப்பட்ட வாக்கியம் . கவிதையாய் முடிகிறது .

இது தான் என் தோழர்களின் வரலாறு என்று புதினத்தின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட கதை முடிகிறது . இதை கையூர் மக்கள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள் . நுகர்வுக்கலாச்சரத்தில் கொண்டாடப்படும் திருவிழாவை விட , இப்புரட்சிகரமான வீரர்களை நினைவு கூறும் பொழுது , திருவிழா அர்த்தம் பெறுகிறது .அப்படி அவர்களை நினைவு கூறுவதோடு முடிகிறது புதினம் தொடங்குகிறது நம் நினைவுகள் .


பின்குறிப்பு :
நிரஞ்சனா என்னும் கன்னட எழுத்தாளர் எழுதிய புதினம் "சிரஸ்மரணா ". அப்போராட்டம் நடந்த பொழுது ஆசிரியர் வயது ஏழு .பின்பு மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டது . மலையாளத்தில் இருந்து திரு பி.ஆர். பரமேஸ்வரன் தமிழில் மொழிபெயர்த்து தமிழில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்து தாக்கத்தை ஏற்படுத்தியது .மேலும், லெனின் ராஜேந்திரன் இயக்கத்தில் மீனம் மாசத்தில் சூரியன் என்ற படம் வெளிவந்துள்ளது .



நினைவுகள் அழிவதில்லை - நிரஞ்சனா (தமிழில் பி.ஆர். பரமேஸ்வரன்),
சவுத் விஷன் வெளியீடு , ரூ..60.00

Wednesday, 3 November 2010

நோக்கியா என்னும் எமனும் ஒரு பின்னூட்டமும்

அம்பிகா என்னும் தொழிலாளிக்கு நடந்த கொடுமையை வினவு தளத்தில் படித்தேன்
அங்கே மணி என்னும் தோழரின் பின்னூட்டம் ஆயிரம் கதை சொன்னது , மனது பதைபதைத்து. அனைவருக்கும் அவ்விடயம் போக வேண்டும் என்று எண்ணுகிறேன் ,குழந்தைகளை கொலை செய்ததை ஊடகங்கள் காட்டுகிறது , ஏன் இதை பற்றிய செய்தியை மறைக்கிறது . நமக்கெல்லாம் அரசியல் இல்லாத மனிதாபிமானமே இருக்கிறது . பிச்சைக்காரனுக்கு ஐந்து ரூபாய் போடும் மனது , தண்டகரன்யாவில் நடக்கும்
பிரச்சனைக்களுக்கு காஷ்மீரில் நடக்கும் பிரச்சனைகளுக்கும் குரல் கொடுக்க மறுக்கிறது நம் நடுத்தரவர்க்க குணாதிசியம் , அதையே ஊடகங்களும் பிரதிபலிக்கின்றன . இன்னும் ஏகாதிபத்தியதிற்கு யாரெல்லாம் இரையாக போகிறார்களோ ???? ஏன் நாளை அந்த இரை நாமாக கூட இருக்கலாம் . அந்த பதிவின் சுட்டி கீழே உள்ளது நண்பர்களே படிக்கவும் .இப்பதிவு மணி அவர்களின் பின்னூட்டம்


நீங்கள் படிக்க வேண்டிய பின்னூட்டம் என்றே நினைக்கிறேன் .

மணியின் பின்னூட்டம்




நான் அம்பிகா பேசுகிறேன். போன தலைமுறையின் கனவுக்கன்னி என்று படிக்க வந்திருந்தால் தயவுசெய்து திரும்பிப் போங்கள். கையில் அழுக்கும் முகத்தில் கருப்புமாக கையில் தூக்குப் பாத்திரத்துடன் அதிகாலையில் பயர் ஒர்க்ஸ் கம்பெனிக்கும் ஜின்னிங் பேக்டரிக்கும் ஓடிக் கொண்டிருக்கும் உங்கள் வீட்டுப் பிள்ளை அம்பிகா நான்.

நான் நேற்றைக்கு மரணமடைந்தேன். அது விபத்துதான் என்று எனக்கு ஆதரவாக பேசுபவர்களும் சொல்கிறார்கள். நான் பூமியில் பிறந்த சம்பவம் விபத்தாக இருந்திருந்தால் இதுவும் விபத்துதான். துரதிர்ஷர்டவசமாக நான் அப்படி பிறக்கவில்லை. சாவுக்கு என் பிணம் ஒதுங்கிய அப்பல்லோ மருத்துவமனையில்தான் அந்த கட்டப்பஞ்சாயத்து நடந்த்தாக கேள்விப்பட்டேன்.

கேள்விப்பட்டேன் என்ற சொல் உங்களுக்கு கிண்டலாக தோன்றலாம். நான் உயிரற்ற சவம், எனக்கு எப்படி தகவல் பரிமாற்றப்பட்டிருக்கும் என நினைக்கலாம். ஆனால் உயிருடன் இருக்கும பலருக்கும்தானே நோக்கியா கம்பெனிக்குள் தகவலை பரிமாறிக் கொள்ள முடியவில்லை. உங்களது தலைக்கு மேல் பெரியண்ணன் போல ஒட்டிக் கொண்டிருந்த காமரா வில் எத்தனை பெண்களின் அந்தரங்க பகுதிகளை சில வெறிநாய்கள் ரசித்திருக்கும். திருடர்களும் பொறுக்கிகளும் உள்ள சிறையின் சில பகுதிகளில் கூட இல்லாத அந்த காமராவை வறுமை என்ற சொல்லுக்கு எதிராக முதலாளிகள் நிறுத்தியபோது நாம் வாயடைத்து போய் அடிமைச் சமூகத்தின் அடிமைகள் போலத்தானே நடந்து கொண்டோம். சம்பளத்தை குறைப்பதற்காக இவர்கள் எத்தனை முறை போட்டுக் காண்பித்தார்கள் அந்த காமராவை. என் கழுத்து அறுபட்டதை அந்த காமிரா படம் பிடிக்க மறந்திருக்குமா. தர்க்கரீதியான அறிவு அக்கேமிராவுக்கு இருந்திருக்குமா எச்ஆர் மேனேஜர் போல என எனக்கு தெரியவில்லை.

எதிர்பாராத ஆயிரத்தில் ஒரு சம்பவம் என வழக்கு பதிவு செய்திருக்கிறார்களாம். நடந்த்து ஒரு சூதாட்டம் என்றால் அதில் நான் பங்கு பற்றியிருந்தால் ஒத்துக்கொள்வேன் இக்கூற்றை. ஆனால் இது நான் வாழ நினைத்த வாழ்க்கை. நடந்த்து ஒரு சூதாட்டம் என்பது என் தலைக்கும் உடலுக்கும் நடுவில் அந்த கில்லட்டின் இருந்தபோது எனக்கு புரிந்த்து. ஆனால் முரண்நகையாக தொழிலாளி வர்க்கமே தனக்குத்தானே சூட்டிக்கொண்ட அடிமைத்தனத்தையும் யூனியன்வாதம் மாத்திரமே பேசும் சின்ன சின்ன குண்டூசிகளையெல்லாம் எதிர்கொள்ள இயலாத போது பூக்களை மாத்திரமே அணிந்த என் கழுத்துப்பகுதிக்கு கில்லட்டின் சுமையாக தெரியவில்லை.

நான் அம்பிகா பேசுகிறேன். நேற்றும் அதற்கு முந்தைய நாளுக்கும் முந்தைய நாளெல்லாம் உங்களுக்கு மத்தியில் நடந்து பேசி சிரித்து சண்டையிட்டு விளையாடிய தோழி பேசுகிறேன். காது இருப்பவர்கள் கேட்க கடவர்கள். சிலருக்கு இச்சொற்கள் அயற்சியாக இருக்க கூடும். இன்னும் சிலரோ 500 ரூபா சம்பளத்தில் குறைந்தால் என்ன இதுக்காக ஏன் தலய கொடுத்தாள் என்றும் கேட்க கூடும். என் அப்பாவை என் தாயை நீங்கள் பார்த்திருப்பீர்கள். உங்கள் தந்தையும் தாயும் இவர்களை விட கொஞ்சம் குண்டாக இருந்திருக்க கூடும். ஆனால் உன் அப்பனும் என் அப்பனும் 2500 கோடியில் மும்பையில் வீடுகட்டும் அளவுக்கு வசதியாக இருந்தால் நம்முடைய பாதங்கள் சுங்குவார் சத்திரத்துக்கு பதிலாக பைவ் ஸ்டார் ஓட்டலில் நடக்கும் டிஸ்கோத்தேக்களுக்கு போயிருக்கும். சிக்கிய தலை நமது மேனேஜரின் தலையாக இருந்திருந்தால் அல்லது முதலாளியாகவோ இருந்திருந்தால் என்னை மீட்டெடுத்த கதையை இன்று எந்திரன் ரோபோ போல கதை எழுதும் பத்திரிகைகள் என்னிடம் பேட்டி கேட்டு ப்ப்ளிஷ் பண்ணி இருக்கும்.

அந்த புகைப்படத்தை பார்த்தீர்களா அதுதான் என் அம்மா. களை பிடிங்கியும் நாற்று நட்டும் என்னை படிக்க வைத்த தாய். ஆக்கத் தெரிந்த அந்தக் கைகளுக்கு அழிக்கவும் தெரியும். ஆனால் நான் மூத்த மகள். என்னை பிரசவித்த பொழுதை அவள் சபித்துக் கொண்டிருப்பாள். அவளது துயரத்தை யாரால் புரிய முடியும். எனக்கோ திருமணம் முடியவில்லை. தாய்மையின் துயரத்தை என்னால் எப்படி விளக்க முடியும். நேற்று தன் மகளை இண்டர்வியூவுக்கு கூட்டிவந்த தாய் எனக்கு நேர்ந்த்தை கேட்டு அழுதாளாம். ஏழைகளுக்கு மாத்திரம் துயரத்தில் வேறுபாடு இல்லை என்பது அத்தாய்க்கு புரிந்திருக்கிறது.

எட்டாயிரம் ரூபாய் சம்பளத்திற்காக நான் பட்டபாடு நேற்றோடு முடிவுக்கு வந்திருக்கிறது. நோக்கியா கம்பெனியில் வாயிலில் இருந்து இன்னும் நிறைய ஆம்புலன்சில் அம்பிகாக்கள் இனி வெற்றிகரமாக வெளியேறுவார்கள். ஆம் நேற்று உங்களால் அப்பல்லோவில் இருந்து என்னுடைய பிணத்தை தொழிலாளி வர்க்கத்தின் ஆயுதமாக மாற்றிட முடியாமல் போனதே.. ஏன் என புரிந்து கொண்டீர்களா.. அரசியல் இன்மைதான் நம்மை தோற்க வைத்த சக்தி என்பதை புரிந்து கொண்டீர்களா. என்ன புரிந்து என்ன பயன் என்கிறீர்களா அல்லது மாண்டவர் மீள்வரோ என கவிதை படிக்கிறீர்களா.. அல்லது என் தம்பிக்கு வேலை தருவார்களா என்பதை நோக்கி உங்களை கவனப்படுத்துகிறீர்களா.. என்னுடைய திருமண பத்திரிகையை என்னுடைய அப்பா உங்களிடம் காண்பித்தாரா… எது எப்படியோ நான் உங்களிடம் இருந்து விடை பெற்று விட்டேன். ஒருவேளை என்னிடம் கடைசியாக சண்டை போட்ட தோழிகளிடம் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்க அவகாசம் இல்லாமல் போயிருக்கும். அது என்னை வருத்தவில்லை. நடந்த்து விபத்துதான் என்று பேசும் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இருக்கும் மண்ணில் சொல்லாமல் போவது ஒன்றும் தப்பில்லை என எனக்கு இப்போது புரிகிறது.

நான் அம்பிகா பேசுகிறேன். இனிமேல் என்னை நோக்கியா அம்பிகா என்றுதான் அழைப்பார்கள். எங்க குலசாமிக்கு நேர்ந்துவிட்ட செம்மறியாட்டுக்கு தலையில தண்ணிய விட்டவுடன மாலய பாத்துட்டு அதுல உள்ள தழைகள திங்கதுக்கு வாயை சந்தோசமா நீட்டும். அந்த மாலதான் தனக்கு போட்ட சவ ஊர்வலத்துக்கான துவக்கம்னு அதுக்கு தெரியாது. நமக்கு மாலைக்கு பதிலா வேலய கொடுத்தாங்க• வேலக்கு ஒரு டார்கெட் வச்சாங்க• இந்த டார்கெட்தான் திருப்பூரின் பஞ்சாலைக்கு சுமங்கலி திட்டம் என்ற பெயரில் தென்மாவட்ட இளம்பெண்களை 25000 ரூபாய்க்கு கொத்தடிமையாக விற்றது. இலவசமாக ஆஸ்துமா கொடுத்த்து. அப்புறம் நடைபிணமாக்கிய திட்டமான அந்த சுமங்கலித் திட்டத்திற்கு தப்பித்து நான் சிக்கிய இடம் இந்த கில்லட்டின் (நான் வேலைபார்த்த இடத்தில் வரும் போர்டுக்கு பெயர் மதர் ஆம். சிரிப்பாகத்தான் வந்த்து.) சுமங்கலி திட்டத்திற்காக திருப்பூர் போன பக்கத்து வீட்டு தனலட்சுமியும் நானும் வேறு வேறு அல்ல• இருவரும் ஒரே கொள்கையால்தான் அரசின் ஏதோ தவறான கொள்கையால்தான் நன்றாக படித்தும் இப்படி வாடுகிறோம் என தெரிந்த்து. ஆனால் என்ன என்றுதான் தெரியாமல் இருந்த்து. அதனை நம்மை அடிக்கடி பார்க்க வந்த சிஐடியூ காரணும் சொல்லவில்லை என்பதற்காக வருந்தாதீர்கள். அவர்கள் வைத்திருக்கும் பெயர் கட்சிகொடியை வைத்து எதனையும் அளவிட்டு விடாதீர்கள் நோக்கியாவை போல•

நான் நோக்கியா அம்பிகா பேசுகிறேன். ஓ. இந்திய நோக்கியா என்றுதானே சொல்ல வேண்டும். நல்ல வேளை இந்த கம்பெனி தமிழகத்தில் இருந்த்து. இது மேற்குவங்கத்தில் இருந்திருந்தால் என்னை நக்சலைட்டு என்றும் ஆண்துணைக்காக ஏங்குபவள் என்றும் இந்தச் செங்கொடிகளே பேசியும் இருப்பார்கள். ஆனால் தொழிலாளி வர்க்கத்தின் தன்னையறிதலில் மாத்திரம் வெற்றி இல்லை என்பதை உலகம் முழுவதும் பற்றி எறியும் போராட்டங்கள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன• பின்லாந்தின் காலாவதியான இயந்திரங்களை இறக்கியதுதான் என் கழுத்தை நசுக்கியதற்கு காரணம் என்றுதான் முதல் சில நொடிகளில் எனக்கு புரிந்த்து. ஆனால் செத்த பிறகுதான் தெரிந்த்து. இது உலகப்பிரச்சினை என• நான் மட்டும் பின்லாந்தின் தொழிலாளியாக இருந்திருந்தால், அந்த இயந்திரங்களை உடைத்து அப்பல்லோவுக்கும் அப்பனான சீயஸிடம் போயாவது என்னை காப்பாற்றி இருப்பார்கள். என் தாயும் கைகழுவும் இடத்தில் ஒரு சரவணா ஸ்டோர் பையுடனும் காலி தண்ணீர் பாட்டிலுடனும் சாய்ந்து கிடந்திருக்க மாட்டாள்.

செத்துப் போன அம்பிகாவாகிய நான் பேசுகிறேன். எனக்கு நட்ட ஈடு தருவது பற்றி பேசிக் கலைந்தீர்களா நேற்று. போலீசாருடன் நமது பக்கம் பேசிய அனைவரும் கை கொடுத்தார்களாமே. இன்னும் யாரை நம்ப போகிறீர்கள். சில லட்சம் வரும் என்பதற்காக தொகையை குறைப்பது பற்றிய பேரங்கள் அங்கே நடந்தபோது நீங்கள் தனித்தனியாக நின்று கொண்டிருந்தீர்களாமே. ஒன்றாக நிற்பதை கூட இன்றுவரை சொல்லித் தராத உதவாத சிஐடியு வை நம்பி இன்னும் என்ன செய்ய முடியும். நட்டாற்றில் விட நிறைய என்ஜிஓ க்கள் அங்கே குவிந்திருந்தார்களாம். பத்திரமாக இருங்கள். அரசியல் புரிதல் இல்லாவிட்டால் வெறும் நமது பிரச்சினையை மாத்திரமே பேசி சக விவசாயியின் பிரச்சினைக்கும் நெசவாளியின் பிரச்சினைக்கும் காரணமான ஒரே எதிரியான அன்னிய நாடுகளின் முதலாளிகளை ஓரணியில் நிறுத்தி எதிர்க்காதவரை அவர்களது செக்யூரிட்டிகளான போலிசார் நம்மை எளிதில் அப்புறப்படுத்தி விடுவார்கள்.

தொழிலாளிகள் சங்கமாக சேருவது அவசியம் என புரியவைக்க உலக தொழிலாளிகளை பற்றி பேசினேன் இதுவரை. ஆனால் நானாவுத 22 வயது பெண். உங்கள் வீட்டுக் குழந்தைகள் விளையாட வாங்கும் சீனத்தின் பொம்மைகளை உருவாக்கிய சீன குழந்தை தொழிலாளிகள், நைக் சூவின் வேலைப்பாட்டிற்காக கைகளை ரணமாக்கி சிறு தவறு நேர்ந்தாலும் நிர்ணயிக்கப்பட்ட கூலியான ஒரு டாலரை பெற முடியாமல் அழுதுகொண்டே வீடு திரும்பும் தாய்லாந்தின் பிஞ்சுக்கைகள் இவையெல்லாம் எனது முறிக்கப்பட்ட மென்னியை விட இளகியவை. சுமங்கலித் திட்டத்திற்காக திருப்பூருக்கு போன தனலட்சுமி யின் பஞ்சடைந்து காசமாக சீரழியப்போகும் அவளது நுரையீரல் அதனை விட இளகியதுதான். தனக்கு என்ன நேர்கிறது என தெரிவதற்கு முன் பூச்சிமருந்தை குடித்து கீழே சாகிறானே விதர்பாவின் பருத்தி விவசாயி அவன் மனம் கூட இப்படி இளகியதுதான். இளகியது ஏமாற வேண்டும் என்பது அறிவியலின் விதி அல்ல•பீலி பெய் சாகாடும்.. என்று சின்ன வயதில் படித்த குறளும் மறக்கவில்லை.

கவந்தகனுக்கு பசி அடங்கவில்லை. அந்த கவந்தகனான சுங்குவார்சத்திரத்தின் நோக்கியா, தாய்லாந்தின் கைவினைஞர்கள், தென்னமரிக்க மற்றும் ஆப்ரிக்க சுரங்க தொழிலாளிகள், தண்ணீரை விற்பனை பொருளாக்கி தாகத்திற்கும் விலை நிர்ணயித்த உலக தண்ணீர் மாபியாக்கள், பன்னாட்டு ஹூண்டாய் கார் கம்பெனிகள், அண்ணாச்சிகளை மீண்டும் ஊருக்கே விரட்டும் ரிலையன்சு பிரஷ், விவசாயிகளை உலகத்தை விட்டே அனுப்பும் அரசின் புதிய பொருளாதார கொள்கை அதுதான் அம்பிகாவையும் சவமாக்கியது என புரிய வரும்போது நோக்கியாவில் வேலை செய்யும் தொழிலாளிகள் அந்த மிஷின் மீது கோப்ப்பட மாட்டார்கள். அரசு மிஷின் மீது கோப்ப்பட துவங்குவார்கள். அது வீதிக்கு அவர்களை விரட்டும். அவரவர் பிரச்சினையை அவரவர் பார்ப்போம் என பல வண்ணங்களில் மனிதர்கள் வருவார்கள். கவந்தக முதலாளி சாப்பிடுவதற்கு பிள்ளைக்கறி வேண்டும். உங்கள் நாட்டில் குறைந்த விலையில் பிள்ளைக்கறி கிடைக்குமாமே. வரும் எட்டாம் தேதி சுங்குவார்சத்திரம் நோக்கியா கம்பெனியில் இதற்கு பேரம் நடத்த போகிறார்கள். வாய்ப்புள்ளவர்கள் அணுக வேண்டிய முகவரி அரசுதான்

வினவின் பதிவு