Thursday 18 November 2010

புதினம் முடிகிறது நினைவுகள் தொடங்குகிறது

1940களில் நடந்த கையூர் விவசாயிகளின் போராட்டத்தை பற்றி எழுதப்பட்ட புதினம் "நினைவுகள் அழிவதில்லை ". வரலாற்று பின்னணியில் அக்காலத்தை வைத்து பார்க்கும் பொழுது அது உலக யுத்தம் நடந்த கால கட்டம் ,நிலபிரபுக்களின் ஆதிக்கம் நிறைந்த காலம் . உழைப்பவனுக்கு விவசாயிக்கு நிலம் இல்லாத கால கட்டம் . இதற்க்கு முன் "மலபார் மாப்பிள்ளைக் கிளர்ச்சி" போன்ற போராட்டங்கள் நடந்த காலகட்டம் . விவசாயிகள் படிப்பு அறிவில்லாமலோ,இல்லை கையெழுத்து மட்டுமே போடத்தெரிந்தவர்களாக இருந்த காலகட்டம் . அரசியல் அறிவு கூர்மை இல்லாத காலகட்டம் .இப்படிப்பட்ட காலகட்டத்தில் விவசாயிகளை அணிதிரட்டி , உங்களால் போராடமுடியும் என்று வலு சேர்த்து போராடிய இருபத்து ஐந்து வயது கூட ஆகாத நான்கு தோழர்கள் கையூர்த் தோழர்கள் . அத்தோழர்களின் வாழ்க்கையை உண்மை சம்பவத்தை பதிவு செய்த புதினம் "நினைவுகள் அழிவதில்லை ".

ஒரு திருவிழாவுடன் புதினம் தொடங்கபடுகின்றது , திருவிழாவில் கையூர் போராட்டத்தில் மரணம் அடைந்த தியாகிகள் நினைவுகூற படுகிறார்கள் ,அதனூடாக புதினம் விரிகிறது .கையூரில் மரணம் அடைந்த தோழர்கள் மடத்தில் அப்பு , சிருகண்டன் , அபு பக்கர் ,குஞ்ஞம்பு. அப்பு சிருகண்டன் இளமை காலங்கள் , அவர்களை வழி காட்டிய மாஸ்டர் அங்கு ஆதிக்கம் செய்த நிலப்பிரபுக்கள் அவர்களை எதிர்த்து விவசாயிகளை அணிதிரட்டியது , அவர்களின் அடக்குமுறையால் போராட்டத்தில் வீர மரணம் அடைந்தது என்று செல்கிறது புதினம் .

அப்பு நடுத்தர விவசாயி வீட்டில் இருந்து வருகிறான் , சிருகண்டன் கூலி விவசாயி குடும்பத்தில் இருந்து வருகிறான் . புதினத்தின் ஊடாகவே அவர்கள் நண்பர்களாக இருந்தாலும் , அந்த வர்க்கம் எப்படி நடந்துகொள்ளும் என்பதை இயல்பாய் படம்பிடித்து காட்டுகிறார் ஆசிரியர் .அப்புவின் குடும்பம் நடுத்தர விவசாய குடும்பம் என்பதால் சிருகண்டன் சந்திக்கும் பிரச்சனைகள் ஆப்பு சந்தித்ததில்லை . சிருகண்டணிற்கு போராட்டமே வாழ்கை , அவன் அப்பா நிலபிரபுவிற்கு அடிமையாய் உள்ளார் , ஆனால் அப்புவிற்கு போராட்டம் என்பது அவன் விருப்பத்தில் இருந்து வருகிறது . அதனால் மாஸ்டர் சொல்லித்தரும் அரசியலை அப்புவை விட சிர்கண்டணிற்கு கூர்மையாய் புரிகிறது . ஆனாலும் அப்பு சிருகண்டனிடமிருந்து அரசியல் கூர்மையை படிப்பால் வந்தடைகிறான் . இரு தோழர்களின் உழைப்பும் முக்கியம் ஆனாலும் ஒரு வர்க்கம் என்ற முறையில் எப்படி வருகிறார்கள் , அப்பு எப்படி மாற்றிக்கொள்கிறான் என்பதை அழகாய் படம்பிடித்து காட்டுகிறது புதினம்.

அப்புவையும் சிருகண்டனையும் மாஸ்டர் வழிகாட்டுகிறார் . மாஸ்டர் இருவரையும் ஒரு இடத்திற்கு வர சொல்கிறார் . தேஜஸ்வினி நதிகடந்து படகில் வருகிறார்கள் சிறுவர்கள் . அங்கே மாஸ்டர், அமைப்பு தலைவர், பயில்வான் முதலியவர்களை சந்திக்கிறார்கள் சிறுவர்கள் . அமைப்பு தலைவர் தலைமறைவு வாழ்கை வாழ்பவர் , அரசியல் நுணுக்கங்களை தலைவர் சிறுவர்களுக்கு விளக்குகிறார் .ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உழைக்கும் மக்களை எப்படி ஒன்று சேர்ப்பது என்ற வர்க்க பார்வையில் தலைவர் சிறுவர்களுக்கு விவரிக்கிறார் . இது புதினத்தின் முக்கியமான இடம் , சிருகண்டனும் அப்புவும்
அரசியல் பார்வை பெறுவது இந்த இடத்தில் தான் .தினமும் அப்புவும் , சிருகண்டனும் அரசியல் விவாதம் செய்கிறார்கள் . தலைவர் மாணவர்களை பத்திரிகை படிக்கசொல்கிறார் , சரி என்கிறார்கள் . எதாவது ஒரு விடயத்தில் சந்தேகம் வந்தால் மாஸ்டரை கேட்கிறார்கள். அவர்கள் அரசியல் மேலும் மேலும் கூர்மை அடைகிறது .


அரசியலை தங்கள் கிராமத்துடன் பொருத்தி பார்க்கிறார்கள் . கையூரில் இரு நிலபிரபுக்கள் அவர்களின் கோர பிடியில் கையூர் இருந்தது . உழைக்கும் விவசாயிகளுக்கு நிலம் இல்லை , என்ற நிலைமை . அப்படி இருக்கும் பொழுது மக்களை அணிதிரட்டுவதால் மட்டுமே விடுதலை அடையமுடியும் என்று அப்பு சிருகண்டனிடம் சொல்கிறான் .மாஸ்டர் அனைத்து விவசாயிகளையும் பத்திரிகை படிப்பதை அறிமுகம் செய்கிறார் , இதை அறிந்த நிலப்பிரபு மாஸ்டரை கூப்பிட்டு இதை மறைமுகமாய் கண்டிக்கிறார் . கையெழுத்து மட்டும் போடத்தெரிந்தால் போதாதா என்கிறார் .இப்படி படித்தால் யாரும் வேலைக்கு போகமாட்டார்கள் என்று மாஸ்டரிடம் சொல்கிறார் . தன் மகனிற்கு பள்ளி முடிந்தவுடன் மாஸ்டர் டியூஷன் சொல்லித்தரவேண்டும் என்கிறார் .இங்கு டியூஷன் பிரதானம் அல்ல , ஆளும் வர்க்கம் வேலையை எப்படி நரித்தனமாய் கெடுக்கும் என்பது சுட்டிக்க்காட்டபடுகிறது . மாஸ்டர் டியூஷன் எடுக்க வந்தால் , விவசாயிகளுக்கு யார் அரசியல் அறிவு
தருவார்கள் ,இதை கெடுப்பதற்கான வேலையை நிலபிரபு செய்கிறார் .

ஆளும் வர்க்கம் அடிமைப்பட்ட வர்க்கத்தை ஒடுக்க எவ்வாறெல்லாம் செயல்படும் , வர்க்கப்போராட்டம் எப்படி கூர்மை பெறுகிறது என்பதை புதினம் பதிவு செய்கிறது . கிருஷ்ணன் நாயர் என்ற சிறுவிவசாயி நிலபிரபுவால் பாதிக்கப்பட்ட ஒரு விதவையை கல்யாணம் செய்வது போன்ற பெண்ணியத்திற்கு உண்டான கூறுகள் இப்புதினத்தில் நிறைந்து காணப்படுகிறது . அப்புரட்சிகர திருமணத்தை மாஸ்டரின் வழிகாட்டுதலுடன் செய்கிறார் கிருஷ்ணன் நாயர் .


விவசாயிகள் அனைவரும் ஒரு வீட்டில் பத்திரிகை படிக்கிறார்கள் . புரட்சிகர அரசியலை கற்று தேர்கிறார்கள் . அப்பொழுது பக்கத்து ஊரில் விவசாயிகள் மாநாடு நடக்கிறது . அப்பு சிருகண்டன் அனைவரும் செல்கிறார்கள் . அதே சமயம் ஊரில் கிருஷ்ணன் நாயரிடம் வரி கேட்க நிலப்பிரபு வருகிறார் , கிர்ஷ்ணன் நாயர் கொடுக்க மறுக்கிறார் , அதை பார்த்த மற்ற சிறுவிவசாயிகளுக்கும் ஒரு நம்பிக்கை பிறக்கிறது . மாஸ்டர் உள்ளூரில் கிர்ஷ்ணன் நாயரை வழிகாடுவதற்க்காய் மாநாடு செல்லாமல் இருக்கிறார் . நிலப்பிரபு பெரும் திரளான ஊர் மக்களும் விவசாயிகளும் மாநாட்டிற்கு சென்றதற்க்காய் கோபம் கொள்கிறார் . மறுநாள் கிருஷ்ணன் நாயரிடன் வரிகளை அடித்து பிடுங்குகிறார் . மாஸ்டரை கூப்பிட்டு கண்டித்து வேலையைவிட்டு நீக்குகிறார். பள்ளியை இழுத்துமூடுகிறார் .அந்த ஒருநாள் மட்டும் வரிகட்டாமல் இருந்தது அதில் தோல்வி அடைந்தது எல்லாம் பின்னால் நடக்கும்
போரட்டத்திற்கு எல்லாம் விதையாய் இருந்தது .



மாஸ்டர் ஊரை விட்டுசெல்கிறார் . புதினத்தின் இரண்டாம்பாகம் தொடங்குகிறது . அப்பு , சிருகண்டன் இருவரும் வாலிபர்கள் ஆகி விட்டார்கள் . விவசாய சங்கம் கட்டிவிட்டார்கள் , அப்பு விவசாய சங்க தலைவர் ஆகிவிட்டான் , அவன் வீட்டின் மாடியில் சிகப்புக்கொடி கம்பீரமாய் பறந்தது . அவ்விவசாய சங்கத்தில் அப்புவின் அப்பா சிருகண்டனின் அப்பா அனைவரும் இருந்தனர் . அபூபக்கர் என்ற தோழன் நிறையபோரட்டங்களை வழிநடதியவன் . ஒரு தலைவன் போல தோழர்களை வழிநடத்தும் ஆற்றல் உள்ளவன் . அவன் கூடவே இருந்தது அப்புவிற்க்கும் சிருகண்டனுக்கும் பக்கபலமாய் இருந்தது . அப்புவின் தம்பி பாலர் சங்கத்தலைவன் , சிறுவன் . விவசாய சங்கம் தீவிரமாய் இருந்தது , அவர்கள் வளர்ச்சி நிலப்பிரபுக்களை உறுத்தியது .

அக்காலத்தில் நிலப்பிரபுக்கள் பல் பிடுங்கப்பட்ட பாம்பு போல இருந்தனர் . தக்க சந்தர்ப்பம் பார்த்து காத்துக்கிடந்தனர் . விவசாயிகள் போராடி பள்ளியை திறந்தனர் . மேலும் உழுபவர்களுக்கே நிலம் என்ற கோரிக்கையில் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர் தோழர்கள் . அப்பொழுது நிலப்பிரபு இவர்கள் ஆதிக்கத்தை ஒடுக்க ஒரு காவலனை வரவழைத்தார் . நிலப்பிரபுவின் வீடு முன்பு கூட்டம் நடந்து சென்றது கோஷங்கள் விண்ணை முட்டின "உழுபவர்களுக்கே நிலம் சொந்தம் " என்ற கோஷம் விண்ணை முட்டியது .காவலனை
பார்த்தவுடன் காவலனுக்கு எதிரானா கோஷங்கள் விண்ணை முட்டின . கோபம் கொண்ட காவலன் அடிக்க ஓடி வர , கூட்டம் சேர்ந்து அவனை அடிக்க , அங்கேயே இறக்கிறான் . தோழர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் , அப்பு , அபூபக்கர் தப்பி செல்கிறார்கள் .

நிலபிரபுக்களின் ஆதிக்கம் கோரமாய் இருக்கிறது , பெண்கள் வன்புணர்ச்சி செய்யபடுகிறார்கள் இதை அறிந்த அப்பு அபூபக்கர் சரணடைகிறார்கள் . வழக்கு நடக்கிறது , பொறுப்பில் இருக்கும் நால்வருக்கு தூக்கு தண்டனை கொடுக்கபடுகிறது , மாஸ்டருக்கு ஆயுள் தண்டனை , தலைவர் தேடப்படும் கைதி , அப்புவின் தம்பி பாலர் சங்க தலைவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படுகிறார் .அதாவது சிறுவயிதிலேயே போராட்டத்தை ஏற்றுக்கொண்டு ,ிலபிரபுவிற்கு எதிரான போராட்டத்தை செய்த சிறுவன் சீர்திருத்த பள்ளியில் .
மக்களிடம் எதிர்ப்பு பலமாய் கிளம்பியது . தோழர்களை விடுதலை செய்யவேண்டும் என்ற முழக்கம் நாடெங்கும் பரவியது .

வெறும் கொலைக்காக கொடுக்கப்பட்ட தீர்ப்பு அல்ல இது , நிலபிரபுவிற்கு எதிராய் ஒரு வர்க்கம் எழக்கூடாது என்பதற்காய் கொடுக்கப்பட்ட தீர்ப்பு .தூக்கு மேடைக்கு போகும் முன்பு அணைத்து குடும்பத்தினரும் அனைவரையும் பார்க்க வரும் இடம் உருக்கமானது . சிறுவயதில் அப்பு வெட்டியாய் போய் விடுவான் என்று அவன் தந்தை நினைக்கிறார் . சிறையில் அப்பு அவரை பார்த்தவுடன் " நான் வெட்டியா எல்லாம் போய்விடல அப்பா " என்று சொல்லும் காட்சியும் . அபுபக்கர் அம்மாவும் தம்பியும் வருகிறார்கள் , அம்மா சொல்வதை தம்பி கேட்க மாட்டேன் என்கிறான் என்கிறாள் அம்மா . அபு அவனிடன் ஏன் கேட்க மாட்டேன் என்க்கிறாய் என்று கேட்க . தம்பி " அம்மா படிக்க வேண்டாம் என்கிறார்கள் " என்று தம்பி சொல்ல . ஏன் அப்படி சொன்னீர்கள் என்று அபு கேட்க அம்மா " அவன் உன்னமாதிரியே எல்லாத்தையும் படிக்கிறான் டா " என்று சொல்ல " ஏதோ கோவத்துல சொலிட்டேன் என்று சொல்ல " ஒரு தாயின் உள்மன போராட்டமும் , வர்க்க போராட்டமும் துயரம் வலி போன்றவைகளை மனதில் பதிய செய்து ஆழ்ந்த துக்கத்தை ஏற்ப்படுத்துகின்றன.

தூக்கு மேடைக்கு போகும் முன் நால்வரும் மக்களுக்கு கடிதம் எழுதுகிறார்கள் , அது புரட்சிகரமானது . தூக்கிற்கு முன் உங்கள் கடைசி ஆசை என்ன என்று கேட்க "மாஸ்டரை காண வேண்டும் " என்று சொல்கிறார்கள் . மாஸ்டர் ஆழ்ந்த சோகத்தில் வருகிறார் . மாஸ்டருக்கு அவர்கள் சிறுவயது அப்பு சிருகண்டனாகவே தெரிகிறார்கள் . மாஸ்டர் நால்வரையும் பார்த்து ஒன்றாய் இருக்க வேண்டும் என்று சொகிறார் . அதவாது மதம் , ஜாதி , என்ற விடயங்களை எல்லாம் தவிர்த்து மக்கள் ஒன்றாய் வர்க்க போராட்டம் செய்ய வேண்டும் என்று பொருளில் அமைக்கப்பட்ட வாக்கியம் . கவிதையாய் முடிகிறது .

இது தான் என் தோழர்களின் வரலாறு என்று புதினத்தின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட கதை முடிகிறது . இதை கையூர் மக்கள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள் . நுகர்வுக்கலாச்சரத்தில் கொண்டாடப்படும் திருவிழாவை விட , இப்புரட்சிகரமான வீரர்களை நினைவு கூறும் பொழுது , திருவிழா அர்த்தம் பெறுகிறது .அப்படி அவர்களை நினைவு கூறுவதோடு முடிகிறது புதினம் தொடங்குகிறது நம் நினைவுகள் .


பின்குறிப்பு :
நிரஞ்சனா என்னும் கன்னட எழுத்தாளர் எழுதிய புதினம் "சிரஸ்மரணா ". அப்போராட்டம் நடந்த பொழுது ஆசிரியர் வயது ஏழு .பின்பு மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டது . மலையாளத்தில் இருந்து திரு பி.ஆர். பரமேஸ்வரன் தமிழில் மொழிபெயர்த்து தமிழில் 1977 ஆம் ஆண்டு வெளிவந்து தாக்கத்தை ஏற்படுத்தியது .மேலும், லெனின் ராஜேந்திரன் இயக்கத்தில் மீனம் மாசத்தில் சூரியன் என்ற படம் வெளிவந்துள்ளது .



நினைவுகள் அழிவதில்லை - நிரஞ்சனா (தமிழில் பி.ஆர். பரமேஸ்வரன்),
சவுத் விஷன் வெளியீடு , ரூ..60.00

8 comments:

வினவு said...

இணைய வாசகர்களுக்கு ஒரு நல்ல அறிமுகம்! தொடர்ந்து நல்ல நூல்களை எழுதுங்கள், நன்றி.

மணிபாரதி said...

Hi bloggers/webmasters submit your blog/websites into www.ellameytamil.com and to get more traffic and share this site to your friends....


www.ellameytamil.com

புலவன் புலிகேசி said...

நல்ல நூல் அறிமுகம். படிக்க வேண்டும்.

Unknown said...

அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்...

vinthaimanithan said...

தோழரே! இந்தப் புத்தகம் என்னோட 19 வயசுல படிச்சது. இப்பவும் நெஞ்சிலிருந்து மறக்காத புத்தகம். எனக்கு கம்யூனிசம்னா என்னன்னு தெளிவா அறிமுகம் பண்ணினதுக்கு நன்றி!

குறையொன்றுமில்லை. said...

நல்ல புத்தக அறிமுகம். கண்டிப்ப படிச்சுபாக்கனும்.

தமிழ்போராளி said...

நான் அறிந்ததில்லை இந்த நூலை பற்றி. படிக்கனும் என்ற ஆர்வத்துடன் இருக்கிறேன்.நூல் கிடைக்குமிடம். அல்லது தொலைபேசி,முகவரி இருந்தால் தெரியப்படுத்துங்கள். அனைவருக்கும் உபயோகமாக இருக்கும். நன்றி

Harichchandran said...

தமிழில் புதிய மொட்டுக்கள் என்ற புதினம் இதை தழுவி எழுதி இருக்கலாம் என்று நினைக்கின்றேன்...