நான்கு கதைகள் நான்குமே அரசியல் பேச முற்பட்டிருக்கிறது. சமூகத்துக்கு தொடர்பே இல்லாத கதைகளை விட ஏதோ ஒரு விதத்தில் சமூகத்துக்கு தொடர்பான கதைகளை அரசியல் கண்ணோட்டத்துடன் சொல்லியதற்கு முதலில் வாழ்த்துகள். நான்கில் மூன்று கதைகள் சமகால ஆண், பெண் உறவுச் சிக்கல்களையும், ஒரு கதை குழந்தைகள் சார்ந்த கதையாகவும் உள்ளது. இந்த நான்கு கதைகளையும் ஒரு உதவி இயக்குநர் தயாரிப்பாளருக்கு சொல்வதைப்போல, அந்த தயாரிப்பாளரின் வாழ்வுடன் ஒத்துவருவதாகவும் காட்டி இணைத்தது, இயக்குநரின் திரைக்கதை யுக்தியை க் காட்டுகிறது.
"Fame Game " என்ற குழந்தைகளை மையமாக வைத்தெடுக்கப்பட்ட கதை எனக்குப் பிடித்திருந்தது. airtel super singer மாதிரி நிகழ்வுகளில் குழந்தைகள் காதல் பாடல்கள் எல்லாம் பாடும்போது எரிச்சல் வரும். குழந்தைகளை வைத்து இவர்கள் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று கோபம் வரும். குழந்தைகளை வைத்து வேலை வாங்குவது சட்டப்படி குற்றமென்றால், அதை வைத்து பிசினஸ் செய்யும் தொலைக்காட்சிகள் தண்டிக்கவே பட்டதில்லையே. சொல்லப்போனால் அனைத்து சேனல்களிலும் குழந்தைகளை மையப்படுத்தும் நிகழ்ச்சிகள் இருந்துகொண்டு தான் இருக்கிறது. சரி மணிரத்தினம் "கடல்" என்ற படமெடுக்கும் போது அந்த நாயகிக்கு 15 வயதாம், இந்த சினிமாக்காரர்கள் தான் நுட்பமான உணர்வு கொண்டவர்களாம். "Ethics " என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்பார்கள்.
குழந்தைகளை இந்த மாதிரி நிகழ்வுகள் காவு வாங்குகிறது. கலாச்சார ரீதியாக போலியான மீடியாவுக்கு இந்தக் குழந்தைகள் expose ஆகிறார்கள். மீடியாவுக்கு போன குழந்தையுடன் உரையாடினால் அந்தக் குழந்தை எவ்வளவு போலியானதாக மாறியிருக்கிறது என்பதை உணர முடியும். சிறுவயதில் சம்பாதிப்பதைத் தாண்டி போலியாக பிழைப்புவாதியாக எப்படி மாறவேண்டும் என்பதையும் குழந்தை கற்றுக்கொள்கிறது. அந்தப் போலித்தனங்களை இந்த "Fame Game " கதை விமர்சனபூர்வமாக காட்டுகிறது.
பிரச்சினைகளை சுட்டிக்காட்டும் விதத்தில் இது ஆகச்சிறப்பான கதை மாற்றுக்கருத்து இல்லை ஆனால் பிரச்சினையை சரியான முறையில் பேசுகிறதா? நாயகனான கலையரசனுக்கு அவர் பெண் "எம் ஜி ஆர் " ஆக நடிக்கும் போது பிரச்சினை இல்லை "ரகுவரனாக " நடிக்கும்போது பிரச்சினை இல்லை. அந்த மீடியா எல்லாம் ஆரம்பத்தில் அந்த நாயகனுக்கு பிரச்சினை இல்லை தான். எப்போது பாலுணர்ச்சி தூண்டும்படி
ஸ்கிரிப்ட்டில் அந்தச் சிறுமி நடிக்கும்போதே தந்தையாகிய கலையரசனுக்கு பிரச்சினை என்று தோன்றுகிறது.
கடைசியாக அந்தச் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆட்படுத்தப்பட்டு கொல்லப்படுகிறாள். கதையில் அந்தச் சிறுமி பாலியல் ரீதியாக கொல்லப்படவில்லை என்றாலோ, சிறுமி இரட்டை அர்த்த ஸ்கிட்ட்டில் நடிக்கவில்லை என்றாலோ கலையரசனுக்கு கோபமே வந்திருக்காது. வன்புணர்வுப்பட்டால் தான் இரட்டை அர்த்தம் பேசுவது மட்டும் இங்கு பிரச்சினையா? சிறுவயதிலேயே பெரியவர்கள் போல குழந்தைகள் உணர்வு மாற்றப்படுகிறதே, ஒரு நூறு பேர் கை தட்டுவார்கள் என்பதற்க்காக அந்தக் குழந்தைகளின் மனநலன் பாதிக்கப்படுமே அது எல்லாம் பரவாயில்லையா?
சித்தார்த் நடித்த "Escaype Live " என்றொரு தொடர் உண்டு. அதில் இதே மாதிரி ஒரு பிரபலக் குழந்தையின் கதை அதில் அந்த குழந்தையின் குணாதிசயம் சம்பளம் ஏற ஏற மாறிக்கொண்டிருப்பதை காட்டியிருப்பார்கள். அப்படிக் காட்டியிருந்தால் இது பல குழந்தைகளின் கதையாக மாறியிருக்கும். அங்கு ஒரு வன்புணர்வு வந்ததால் தான் பிரச்சினை என்று காட்டும்போது கதை மீடியா குழந்தைகளை abuse செய்வதை நோக்கி போகிறதா? இல்லை குழந்தை abuse உடன் சுருங்கிக்கொள்கிறதா?
இந்தக் கதையை பார்க்கும் பெற்றோர் , child abuse எங்கில்லை ? நாம் good touch bad touch சொல்லிக்கொடுத்தால் போதுமானது, மற்றபடி பிரபலமாக இருப்பது, சிறுவயதிலேயே சம்பாதித்து புகழ் வெளிச்சத்தில் இருக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற குழந்தைகளின் விழுமியங்கள் வீழ்ச்சி அடைவதெல்லாம் முக்கியமில்லை என்றாகிவிடுமல்லவா? இங்கு வன்புணர்வு வலிந்து திணிக்கப்பட்டதாக உள்ளது. ஏன் மீடியாவில் மட்டும் தான் குழந்தைகள் abuse செய்யப்படுகிறார்களா? வீட்டில் சித்தப்பா, பெரியப்பா மாமா ஏன் சொந்த அப்பா என்று abuse கள் அதிகமிருப்பது வீட்டில் தான். அந்த குழந்தையின் மரணம் கதை சொல்ல நினைத்ததை மடை மாற்றுகிறது. அரசியலை இன்னும் கூர்மையாக பேசவில்லை .
இருந்தாலும் ஒரு விவாதத்தைத் தூண்டும் கதை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
காலம்காலமாக திருமணமாகிவிட்டால் பெண்கள் ஆண் வீட்டுக்கு வருகிறார்கள். இது சாதாரண விடயமாக
ஆண்களுக்குத் தோன்றலாம், ஆனால் பெண்ணின் கண்ணோட்டத்தில் ஒரு மரத்தை வேருடன் பிடுங்கி வேறொரு தொடர்பே இல்லாத இடத்தில் ஊன்றுவதைப்போன்றது. அதைப் பற்றி பேசுகிறது "Happy Married Life". ஆண்கள் தாலி கட்டிக்கொள்ள வேண்டும், பெண் வீட்டுல் ஒரு மாதமும் ஆண் வீட்டில் ஒரு மாதமும் இருக்கவேண்டும் என்று தீர்வை இயக்குநர் சொல்கிறார்.
இங்கு ஆண், பெண் உறவில் அவர்கள் வீட்டில் இவர்கள் இருப்பதும், இவர்கள் வீட்டில் அவர் இருப்பதும் மட்டும் பிரச்சினை அல்ல. ஒரு அம்மா மகனைக் கையாள்வதற்கும் மகளைக் கையாள்வதற்குமே நிறைய வித்யாசங்கள் உண்டு தானே. நிலப்பிரபுத்துவ அம்மா தன் மகளை அடிமையாகவும், மருமகனை ராஜகுமாரன் போலவும் நடத்தலாம் அல்லவா? பெண்ணடிமை எங்கிருந்து தொடங்குகிறது, தாய் வழிச் சமூகமாக இருந்தபோது கூட்டமாக இருப்பார்கள், யார் வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் உறவு வைத்துக்கொள்வார்கள். அந்தக் கூட்டத்துக்கு தலைவி ஒரு பெண் தான்.
என்று சொத்துடமை சமூகம் வருகிறதோ, அங்கு இது என் குழந்தை என் விந்துக்களில் பிறந்த குழந்தை என்றாகிறது. எப்படி இது என் சொத்து போல, இது என் மனைவி என்றாகிறது. சொட்டுடமையின் அங்கமாகிறாள் பெண். ஆணாதிக்கத்தின் ஊற்றே சொத்துடமை தான். இங்கு மனைவி மட்டுமே கருத்தரிக்கிறாள், அப்போதே கணவனின் சொத்தாகிறாள், அந்த ஆதிகமான மனநிலை எங்கிருந்து கணவனுக்கு வருகிறதென்றால், சொத்துடமை மூலம் கட்டப்பட்ட குடும்பம் என்ற அமைப்பினுள் தான்.
"குடும்பம்" என்னும் அமைப்பே சொத்துடமை அமைப்பு தான், இறந்த பிறகு வாரிசு வேண்டாமா என்பதே சொத்துக்களை காப்பதற்கு தான். அப்படியென்றால் யாரு வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம் என்பது அர்த்தமல்ல, அந்த காட்டுக்குள் இருந்த சமூகம் மாறி குடும்பம் என்ற அடுத்த கட்டத்துக்கு நகர்வதைப்போல சோசலிசம் கம்யூனிசம் வரும்போது குடும்பம் என்ற அமைப்பு வேறு வடிவமெடுக்கும். அங்கு சொத்துடமை இருக்காது, அதனால் பெண்களை சொத்தாக கௌரவமாக பார்க்கும் பாணி இருக்காது. பெண்கள் காதலிக்கலாம் பிடிக்கவில்லை என்றால் விவாகரத்து செய்துவிட்டு இன்னொரு மனம் புரியலாம் அதற்கு குற்ற உணர்ச்சி தேவையல்ல என்பதைப் போன்ற சமூகம் மாறும்.
"குடும்பம்" எப்போதும் ஒரே போன்று இருந்ததால 1980 களில் இருக்கும் கூட்டுகுடுமபம் இப்போது அல்ல. அண்ணன் வெளிநாட்டில் இருக்கலாம் தம்பி வெளியூரில் இருக்கலாம், கூட்டுக்குடும்பம் அழிந்து தனியான குடும்பமாக வடிவம் மாறுகிறதல்லவா அதுவே அடுத்த கட்டத்துக்கு இன்னும் மாறும், அது அப்படிதான் இருக்க முடியும். அப்படியிருக்க வரலாற்று ரீதியாக அணுக வேண்டிய பிரச்சினையை வெறும் சடங்குகள் வைத்தே தீர்க்க முடியும் என்று இயக்குநர் தீர்வு சொல்கிறார்.
"தக்காளி சட்னி" உனக்கு வந்தால் ரத்தம் எனக்கு வந்தால் தக்காளி சட்னி என்று ஆண் பெண் உறவு உள்ளதென்பதை சொல்கிறது. இந்தக் கதை முழுவதும் விறுவிறுப்பு நிறைய ட்விஸ்ட்கள் உண்டு, கதை எதார்த்தத்தை பிரதிபலிக்கிறதா? என்றால் இல்லை. software இல் வேலை செய்யும் நாயகன், கம்பெனி கழிவறையில் masturbate செய்கிறார், அது CCTV யில் பதிவாகி, கம்பெனி குரூப்பில் போட்டுவிடுவதால் அவர் பணிநீக்கம் செய்யப்படுகிறார்.
கம்பெனியில் எந்த வேலை இருந்தாலும் cctv யை கழிவறையில் வைப்பார்களா? software company எப்படி இயங்குகிறது , அங்கு கழிவறைகள் எப்படி இருக்கும் என்று புரிதலே இல்லாத காட்சியமைப்பு. software company யை விடுங்கள் வேறெங்காவது இப்படி ஒரு கழிவறையில் cctv யை மறந்தும் கூட வைப்பார்களா?
சரி அப்படியே வைத்தாலும், இப்படி ஒரு காட்சி வருகிறதென்றால், அதை பதிவு செய்து whatsapp குழுமத்தில் பகிர்பவரும் குற்றவாளிதானே . இதெல்லாம் தவறென்று தெரியாத தற்குறிகள் தான் software company யில் வேலை செய்கிறார்களா?
இந்த சினிமா இயக்குநர்களுக்கு IT துறை மேல் என்ன காண்டு என்று தெரியவில்லை, ஆபீஸ் வரும் நாயகன் அங்கே கழிவறையில் mastrubrate செய்கிறார், அதை cctv படம் பிடிக்கிறது என்று ஒரு காட்சி. சரி அப்படியே அவர் ஒன்றுக்கு போகிறார் என்று வைத்துக்கொள்வோம், அதை படம் பிடித்தால் கூட தவறு தானே, இவ்வளவு மொக்கையாக எப்படி யோசிக்க முடிகிறது. அதாவது IT துறை elite என்றாலே ஆபீஸ் என்று கூட பார்க்காமல்
மோசமாக இருப்பார்கள், அதை பகிரக்கூடாது என்று கூட தெரியாத நுண்ணுணர்வில்லாதவர்கள் என்பது இயக்குநரின் பார்வை.
திரைக்கதை "அதிர்ச்சி" என்ற விழுமியம் மட்டுமே இருந்தால் சிறந்த கதை என்று யாரோ ஒருவர் சொல்லியிருப்பார்கள் போல , அதிர்ச்சி மேலே அதிர்ச்சி வைத்திருக்கிறார் இயக்குநர் . விதயசமாக இருக்கிறது ஆனால் எதார்த்தமாக இல்லை. இது வெறும் தொடக்ககாட்சி மட்டும் தான், அதைத்தாண்டி
நிறைய அதிரிச்சிகள் இந்தக் கதையிலுண்டு..
நாயகன் lust வேறு love வேறு என்று யோசிக்கும் நாயகனாக காட்டப்படுகிறார். அவர் காதலிப்பது ஒரு பத்திரிகையாளர் பெண் மணியை. காஜு பிடித்த காதலன் என்பதை அந்த பத்திரிகையாளர் கண்டுபிடிக்க மாட்டாரா? காதலன் ஆண் விபச்சாரியாக இருக்கிறார், காதலி ஒரு article எழுதும் போது அதை கண்டுகொள்கிறாள்.
அடுத்த பெண்களிடம் காசுக்காக உறவு கொள்ளும் ஆண் , அந்த இடத்தில customer ஆக அம்மாவே வந்தால் ? ஒரு சின்ன புரிதலின்மையில் அம்மாவை தவறாக நினைக்கும் சூழல் நாயகனுக்கு ஏற்படுகிறது. காதலன் ஆண் விபச்சாரம் செய்யலாம் ஆனால் அம்மாவை அந்த இடத்தில் பார்த்தால் கலாச்சார காவலனாக மாறுகிறார் . ஒரு பெண் love வேறு lust வேறு என்று காதலன் இருக்கும்போதே அவர் தத்துவத்தை அவரிடமே பேசிவிட்டு இன்னொருவருடன் உறவு கொள்வேன் என்று சொன்னால் ஆணுக்குள் இருக்கும் கலாச்சார காவலன் என்ன செய்வார் என்பதை பல ட்விஸ்ட்களுடன் சொல்கிறது இந்தக் கதை.
ஆணுக்கு எந்த நீதியோ பெண்ணுக்கும் அந்த நீதி தான் என்னும் கண்ணோட்டத்தில் இந்தக் கதையை ஏற்றுக்கொள்ளலாம். love வேறு lust வேறென்றாலும் சில விழுமியங்கள், ஒழுக்கவிதிகள் காதலன், காதலிக்கு வேண்டுமென்று சொல்கிறது கதை. பெண்களுக்கு ஆண்கள் வேறொருவருடன் உறவு கொள்வது மட்டுமே பிரச்சினையா? இந்த love, lust என்பதெல்லாம் இயல்பானது, அதை கட்டமைக்கவெல்லாம் முடியாது. அது இருவருக்கான அந்தரங்க விடயமென்பதைத்தாண்டி அதில் பெரிதாக சரி தவறென்று சொல்வதே தவறென்று நினைக்கிறன்.
ஒரு ஆண் நிறைய பேருடன் உடல் ரீதியாக போகிற போக்கில் lust வைத்திருக்கிறார் என்று சொன்னால், கதைப்படியே அந்த பெண் பத்திரிகையாளரை அவர் காதலிக்கவே இல்லை என்று அர்த்தமாகிறது. எப்படி ஒரு பெண்ணைக் காதலித்துக்கொண்டே நிறைய பேருடன் lust ஆக இருக்க முடியும், இதை அந்தக் காதலி காதலனுக்கு விளங்க வைக்கிறாள், அப்படி விளங்க வைக்கலாம் ஆனால் மறுபடியும் காதலில் சேர முடியுமா? அது அந்த இடத்திலேயே உடைந்து விட்டது, சொல்லப்போனால் காதலிக்கும்போதே தான் அவர் வேறு பல உறவுகளில் இருக்கிறார் என்பது தானே நிதர்சனம். அப்படி open relationship என்கிறார்கள் அப்படி இருக்கும் ஒருவனை வம்படியாக காதலி என்று சொல்வது டாக்சிக் ஆகாதா? இருவருக்கும் ஒத்து வராது என்று விலகுவது தானே சரி? அதைத்தாண்டி ஆணாதிக்கமென்றால் என்னவென்று வகுப்பை வேறு அந்தக் காதலி எடுக்க வேண்டியதாக உள்ளது.
"கல்லானாலும் கணவன்" என்று காதலன் என்ன தவறு செய்தாலும் ஏற்றுக்கொண்டு, அவனை திருத்துவது தான் வேலையா? சரி இப்போது திருந்திவிட்டேன் என்று சொல்லிவிட்டு, மறுபடியும் வேறொரு ஆட்களுடன் உறவு கொள்ள மாட்டார் என்று என்ன நிச்சயம்? கலாச்சார ரீதியான விடயங்களை, ஆணாதிக்கத்தை ஒரு சில காட்சிகள் மூலம் ஆணுக்கு உணர்த்திவிட முடியுமா.ஆணுக்கு 25 வயது என்று வைத்துக்கொள்வோம் , 25 வருடங்களில் ஆணாதிக்கவாதியாக வாழ்ந்துவிட்டு ஒரு சில தருணங்களில் மாறிவிடுவாரா? அப்படியிருக்க இந்தக் காதலி என்பவள் தான் ஏமாந்ததாய் உணர்ந்த பின்பு நடுவிரலைக் காட்டி அல்லவா வெளியே வந்திருக்க வேண்டும். அதை விடுத்து அந்த டாக்சிக் உறவுக்குள்ளேயே போய் சிக்கிக்கொள்கிறாள் பெண் பத்திரிகையாளர்.
"Golden rules" என்று இன்னொரு கதை காதலித்த ஆண் தான் பெரியம்மா மகன் என்று உணரும்போது ஏற்படும் கதை தான். காதலிக்கும்போது அண்ணன் தங்கை என்று தெரியாமல் காதலித்தவர்களின் அதிர்ச்சி தான் இந்தக் கதை. சமூகம் சில விழுமியங்களை முன்னே வைத்திருக்கிறது இதெல்லாம் தான் உறவு என்று சமூகத்துக்கு சில விழுமியங்களுண்டு, அது உடைக்கப்படும் போது ஏற்படும் அதிர்ச்சியை இந்தக் கதை சொல்கிறது.
பெரும்பான்மையான ஆண். பெண் பிரச்சினைகளை பேசாமல் எங்கோ ஏதோ ஒரு விதி விளக்காக அங்கொன்றும் இங்கொன்றும் நடக்கும் அதிர்ச்சி கதைகளை படமாக செய்திருக்கிறார்கள். படத்தில் பெரும்பான்மையானவர்களின் பிரச்சினைகள் பேசப்படாமல், elite வாழ்வியல் பிரச்சினைகள் பேசப்படுவதால் படத்தில் ஒரு ஒட்டாத அந்நியத்தன்மை உண்டு. முக்கியமான ஆண், பெண் உறவுச்சிக்கல்களை படம் பேசியதா என்றால் இல்லை என்பேன். ஆண், பெண் உறவுக்குள் இருக்கும் மேலோட்டமான பிரச்சினைகளை அழுத்தமான பிரச்சினைகளை காட்டுவதைப்போல ஒரு பாவனை படத்திலுண்டு.
கலையின் வேலை விவாதத்தை தூண்டுவது, அந்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறது. பொதுபுத்தியிலிருக்கும் மேலோட்டமான முற்போக்கை வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர். இயக்குநரின் நோக்கம் சிறப்பானது தான் ஆனால் மேலோட்டமாக உள்ளது, கொஞ்சம் ஆழ்ந்து எடுத்தால் , நல்ல இயக்குநராகக்கூடிய பார்வை அவரிடம் உள்ளதென்று நினைக்கிறேன்.