ரஞ்சித், வெற்றிமாறன், மாரி செல்வராஜ் மூன்று பேரும் சேர்ந்துதான் தமிழ் சினிமாவை கெடுத்துவிட்டார்கள் என்று பழைய பூமர் இயக்குநர்கள் பிரவீன் காந்தி, பேரரசு முதல் இன்றைய பூமர் மோகன்ஜி வரை சொல்கிறார்கள். இந்த அரசியலை ஒட்டியே "வள்ளிக்கும்மி " ரஞ்சித், கனல் கண்ணன் போன்றவர்களும் பேசுகிறார்கள். இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை இவரர்கள் எல்லாருமே சாதியவாதிகளாக இருக்கிறார்கள், சனாதனத்தை தூக்கிப்பிடிப்பவர்களாக இருக்கிறார்கள். அதே நேரம் இந்தப் பட்டியலில் இருப்பவர்களில் பலர் பாஜக ஆதரவாளராகவும் இருப்பதும் தற்செயலாக நடந்ததல்ல. இப்போது கடைசியாக வந்த "ரத்னம்" படத்தின் நாயகன் விஷால் பாஜக ஆதரவாளர் மற்றும் சாதியை தூக்கிப்பிடிக்கும் மீசையை முறுக்கும் படங்களில் நடிப்பவர் தான்
1983 இல் வந்த "சந்திப்பு " என்ற படம் சிவாஜியும், பிரபுவும் அண்ணன் தம்பியாக இருப்பார்க;ள். சிவாஜியின் ஜோடி ஸ்ரீதேவி, பிரபுவின் ஜோடி ராதா. சிவாஜி படத்தில் வடசென்னையை சேர்ந்த பாக்ஸர் , மனோரமா சிவாஜிக்கு சமைத்து போடுபவராக வருவார். மனோரமாவிடம் சிவாஜி இப்படிக் கேட்பார் "கறியில் பெரிச சேர்த்துவிடவில்லையே" என்றொரு வசனம் வைத்திருப்பார். அதாவது மாட்டுக்கறியை சேர்க்கவில்லையே
என்பாதைதான் சிவாஜி அப்படி பேசியிருப்பார்.
சரி அப்படியே பாலாவின் "அவன் இவன் " படத்துக்கு வருவோம், மாடுகளை கேரளாவுக்கு அனுப்புவதே
வில்லத்தனமான காட்டப்பட்டிருக்கும். பாலாவின் சேது படம் கூட ஒரு பார்ப்பன பெண்ணை காதலித்தால்
பைத்தியம் ஆவார்கள் என்று காட்டப்பட்டிருக்கும், மனுதர்மத்தின் இன்னொரு version தான் பாலா எடுப்பது
அதாவது "பிரதிலோமா" என்று மனுதர்மத்தில் ஒரு concept உண்டு. பெரிய சாதி பெண்ணை திருமணம் செய்வது பெரிய குற்றம் என்பது தான் பிரதிலோமா. "அனுலோமா" என்று இன்னொரு concept அதாவது உயர்ந்த சாதி ஆண், தாழ்த்தப்பட்ட பெண் என்று இவர்கள் கூடுவதன் பெயர் அனுலோமா பிரதிலோமா அளவு அனுலோமா தவறல்ல, ஒரு பெண்ணே சாதியை தூக்கிப்பிடிக்கிறாள் என்று மனு சொல்வதன் திரைக்கதை வடிவம் தான் பாலாவின் சேது. பாலாவின் பெரும்பாலான படங்களில் இந்துத்துவத்தின் சாயலை காண முடியும்.
அப்படியே இந்தப் பக்கம் அடுத்த இயக்குநர் ஷங்கருக்கு வருவோம், இவர் படங்கள் reservation இடஒதுக்கீட்டுக்கு எதிராக இருக்கும். பெரும்பாலும் பார்ப்பனீய கருத்துக்கள் உள்ளே ஊறிக்கிடக்கும். சாதி சான்றிதழ் கிழித்துவிட்டால் சாதி ஒழிந்துவிடும் என்ற கருத்து "முதல்வன்" படத்தில் வரும். சேரி என்றாலே மோசமானவர்கள், குடிப்பவர்கள், பெண்களை கேலி செய்பவர்கள் என்ற படிமம் வந்துகொண்டே இருக்கும்.
எந்திரன் படத்தில் கூட சேரியில் இருக்கும் அம்மன் கோவில் விழாக்களை கூட சகிக்க முடியாத பாத்திரமாக நாயகி இருப்பார்..
அடுத்து முருகதாஸ் படங்கள் அதே இடஒதுக்கீடு எதிர்ப்பு , மக்கள் நல விடயங்களை இலவசமென்று கொச்சைப்படுத்துவது , இசுலாமிய வெறுப்பு என்று இவர் படத்திலும் கொட்டிக்கிடக்கும் காட்சிகள்.
இத்தனைக்கும் ஷங்கரும், பாலாவும், முருகதாஸ் இடைநிலை சாதி இயக்குநர்கள். அவர்களை வைத்தே reservation தவறென்று பேச வைப்பார்கள். ஷங்கர் படத்தில் மக்கள் விரோத காட்சிகள் இருந்தால் ரஜினிகாந்த் நடிக்கும் வரை கொண்டாடிய பொதுபுத்தியும், மீடியாவும். கபாலி வந்தபோது ரஜினிகாந்தை
பொது மக்களிடமிருந்து பிரித்துவிட்டார்கள் என்று அலறியது. மீடியாவில் மேலே இப்படி ஒரு கருத்து வருகிறதென்றால் அது அப்படியே பொதுப்புத்தியில் சிக்குகிறது.
அப்படியே இந்தப் பக்கம் வருவோம் விசுவின் "சம்சாரம் அது மின்சாரம்" படத்தில் விசுவின் மகள் கிறுத்துவரை காதலிப்பார். வேறொருவருக்கு நிச்சயம் செய்யும்போது அந்தப்பெண் உண்மையைச்சொல்வவார். அடுத்த காட்சியிலியேயே விசுவின் மகனுக்கு பெண் பார்க்க வந்த வீட்டில் அந்தப் பெண்ணை விசு தன் மகனுக்கு நிச்சயம் செய்வார். விசு " என் பெண்ணை தான் தப்பா வளர்த்துட்டேன், பையனை நல்லாத்தான் வளர்த்துருக்கேன் " என்று சொந்த சாதியில் திருமணம் செய்வதை நல்ல வளர்ப்பு என்று காட்டியிருப்பார். "67 க்கு பிறகு நான் pant போடல கண்ணா" என்னும் வசனம் திராவிடம் மேலே இருக்கும் வெறுப்பை காட்டி இருக்கும்.
எத்தனையோ கமல் படங்களில் பார்ப்பனர்கள் வாழ்க்கை காட்டப்பட்டுள்ளது, அதைத்தாண்டி ஆச்சாரமான
குடும்பமென்றே அறிமுகப்படுத்தப்படும். அதைத்தாண்டி கமலின் வைணவ பாசத்தை தசாவதாரம், விஸ்வரூபம் படமுழுவதும் இருக்கும். குறியீடாக நிறைய விடயங்கள் பெருமாளை முன்னிறுத்துவதை போலவே இருக்கும் இதைப்பற்றி தோழர் யமுனா ராஜேந்திரன் ஒரு புத்தகம் எழுதியுள்ளார், அதை படித்ததில்லை கேள்விப்பட்டிருக்கிறேன். கமல், மணிரத்தினம் படங்களில் கூடுதலாக இந்துத்துவா agenda இசுலாமிய வெறுப்புகள் வந்துகொண்டே இருக்கும். விஜயகாந்த் படங்களில் தத்துவ தளத்தில் எல்லாம் இசுலாமிய வெறுப்பு இருக்காது, ஹீரோ வில்லன், பாகிஸ்தான் என்று வரும். ஆனால் இசுலாமிய வெறுப்பு படமென்றால் ஒரு சில படங்களில் காட்சிகள் வாய்த்த விஜயகாந்த் படங்கள் உதாரணமாக சொல்லப்படும் ஆனால் மணி, கமல் போன்றவர்களை விட்டுவிடுவார்கள்.
ரோஜா படம் 1992 ஆகஸ்ட் 15 இல் வருகிறது இசுலாமியர்களை மோசமாக சித்தரித்தப்படம். கொடி எரிக்கப்படும் போது நமாஸ் செய்துகொண்டிருப்பார்கள் இசுலாமியர்கள். சிறுவயதில் அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு இசுலாமியர் என்றாலே குண்டு வைப்பார்கள் என்று நினைத்ததுண்டு. என் வாழ்வில் பெரும்பாலும் இசுலாமிய நண்பர்கள் நெருக்கமான நண்பர்களாக இருப்பார்கள் என்பது வேறுவிடயம்.
1992 ரோஜா வந்த போது நான் ஐந்தவாது படித்துக்கொண்டிருந்தேன் என் நண்பன் பெயர் ஆஷிக், நம்பர் ஒன மாணவன், பனிரெண்டாம் வகுப்பில் நாலு சப்ஜெக்ட்டிலும் 200, அப்போது entrance இருந்தது அதிலும் 99.11
தமிழக அளவில் state first cutoff ஒரு முறை நான் ஆண்டுப்பரிட்சையின் போது புத்தகத்தை தொலைத்துவிட்டேன், ஆஷிக் வீட்டிற்கு சென்றபோது அவன் எனக்கு புத்தகத்தைக் கொடுத்துவிட்டான், அவன் படிக்காமலேயே 100 மார்க் வாங்கும் இயல்புடையவன். அப்படி நெருக்கமான இருந்த நண்பர்களைக் கூட வில்லன் என்று இந்தப் படங்கள் தப்பாக கட்டமைக்கும். நாமும் நம் நண்பர்களுடன் சேர்ந்து டேய் இவன் குண்டு வைப்பாண்டா என்று கிண்டல் அடிப்போம், நான் அப்படி அடித்ததில்லை என்பது வேறு விடயம் ,எனக்கு அப்படித்தோன்றியதில்லை ஆனாலும் சிறு வயதில் அப்படித்தோன்ற வாய்ப்புகள் உள்ளதல்லவா?
எவ்வளவு பெரிய பிளவை ஏற்படுத்தும் இயக்குநர்கள் இங்கு லெஜெண்டு என்ற போர்வையில் இருக்கிறார்கள் என்று சொல்லவருகிறேன். ரோஜா 1992 ஆகஸ்டில் ரிலீஸ் அதே வருடம் டிசம்பர் 6 இல் பாபர் மசூதி இடிக்கப்படுகிறது. படம் வந்ததால் தான் அந்த சம்பவம் நடந்தது என்று சொல்ல மாட்டேன். ஆனால் இசுலாமியர்கள் மோசமானவர்கள் என்ற படிமத்தை ஆழமாக ஒரு பக்கம் கலையில் வைத்துவிட்டு, அந்தப் படத்தை கொண்டாடும் போது. இந்துக்களில் இருக்கும் உழைக்கும் மக்களுக்கு இவங்க மசூதியை உடைத்தால் பரவாயில்லை இவர்கள் தீவிரவாதி தானே என்று தோன்றாதா? இங்கு நட்பாய் இருக்கும் உழைக்கும் மக்கள் கூட இசுலாமியர்களிடம் பிரிந்திருப்பார்கள் தானே அப்போது இசுலாமியர்கள் தனியாக விடப்பட்டதை போல உணர்ந்திருப்பார்கள் தானே. மணி, கமல் இதை பிளான் செய்து செய்தார்கள் என்று சொல்லவில்லை , அவர்கள் கலையின் தாக்கம் எந்த வேலையை செய்ததென்பதை சொல்கிறேன்.
இங்கு தென் மாவட்டங்கள் சாதிக் கலவரத்துக்கு குறிப்பாய் மதுரை, திருநெல்வேலி போன்ற ஊர்களை சொல்கிறார்கள். கலவரமென்பதே சாதிய ஒடுக்குமுறை இருக்கும்போது சாதியின் கீழடுக்கில் உள்ளவன் கேள்வி கேட்பதன் விளைவு தானே. இங்கு "சாதி" தவறென்று பேசுவதை விட "சாதிக் கலவரம்" தவறென்று சொல்லப்படுகிறது. கலவரம் உயிரிழப்பு என்பதெல்லாம் நமக்கும் உடன்பாடில்லை தான். ஆனால் கலவரத்தை விட சாதி என்பது பிரச்சினை தானே. மேற்கு மாவட்டங்கள் சாதிய பிடி அதிகமிருக்கும் கோவை போன்ற பகுதிகளில் சாதியை ஏற்றுக்கொள்வதால் முரண்பாடுகள் இல்லை அதனால் கலவரமில்லை
அந்த சாதி கேள்வி கேட்கப்படாத அமைதி மோசமான அமைதி. "சாதி " என்னும் கொடுமையை அங்கீகரிப்பது. பார்ப்பனர்கள் கூட நேரடியாக சாதிய ஒடுக்குமுறைகளில் வருவதில்லை, white color வேலைகள் செய்துவிட்டு ஒதுங்கிவிடுகிறார்கள் ஆனால் பார்ப்பனீயம் தானே இதை எல்லாம் செய்கிறது.
ஆணவக்கொலைகளை செய்யச்சொல்கிறது. ஆதிக்க சாதிக்கும்,பட்டியலின மக்களுக்கும் இருக்கும் முரணில் பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனீயத்துக்கும் பங்கில்லையா?
சமூகத்திலும் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களிடமிருந்து குரல் வந்தால் கலவரம் வருகிறதல்லவா? அதே குரல் சினிமாவில் வரும்போதும் ஒரு boomer கூட்டம் கொந்தளிக்கிறது. தமிழ் சினிமா முற்போக்கு வரலாறு கலைஞர் பராசக்தி காலத்திலேயே தொடங்கிவிட்டது, கலைஞர், என் எஸ் கிருஷ்ணன், ராதா, அண்ணா படங்களில் தலித் என்ற அடையாளத்துடன் இல்லாமல் இருக்கலாம் சமூக நீதி என்ற அடையாளத்தில் முற்போக்காகவே இருந்திருக்கிறது .
அதைத்தாண்டி பாரதிராஜா போன்றவர்களின் படங்கள் தேவர் சாதி வாழ்வியல் காட்டக்கூடிய படங்களாக இருந்தாலும் கூட சாதி மறுத்த முற்போக்கு அம்ச படங்களாக இருக்கும் அவர் வாழ்வியலை காட்டுவது தவறல்ல அதை பெருமித்ததுடன் காட்டினால் தவறு பாரதிராஜா படங்களை வெகுஜனங்கள் தேவர் படமாக [பார்க்கவில்லை உலக சினிமாவாக ஒரு லெஜெண்ட் எடுத்த படமாகவே பொது சமூகம் பார்த்தது.
அதைத்தாண்டி விஜயகாந்த் "அலை ஓசை " போன்ற படங்களில் தலித் அடையாளத்துடன் தான் வருவார்.
இன்றும் " போராடடா " பாடல் கேட்கும்போதும் "நந்தன் இனமே " என்ற வரிகள் வரும்போதும் விஜயகாந்த் ஒருவரால் தான் அதை நடிக்க முடிந்திருக்கும் என்றளவில் நடித்திருப்பார். தமிழ் சினிமா ஒரு பக்கம் பிற்போக்காக இருக்கும் இன்னொரு பக்கம் முற்போக்கும் இருக்கும். ஒரு சமூகம் எப்படி இயங்குகிறது முற்போக்கு vs பிற்போக்கு என்று இயங்குகிறதோ அதே இயக்கம் சினிமாவிலும் உண்டு அது அப்படிதான் இருக்க முடியும்.
திருப்பூர் சுப்பிரமணியன் சாதி எல்லாம் கிராமத்தில் தான் உண்டு என்று பேசியிருந்தார், ரேடியோ மிர்ச்சி சுச்சி பேச்சைப்பார்த்தாலே சினிமாவுக்குள் இருக்கும் பார்ப்பனீய லாபியை புரிந்துகொள்ள முடியும். கலையின் வேலையே கேள்வி கேட்பது, சமூகத்தில் ஒரு உரையாடலைத்தூண்டுவது அந்த வேலையை ரஞ்சித், வெற்றி , மாரி செல்வராஜ் சிறப்பாகவே செய்கிறார்கள். சமூகத்துக்கு சாதி பொருந்தவில்லை என்றால் சமூகத்தில் எப்படி சாதி தூக்கி எறியப்படுமோ அதைப்போல boomer இயக்குனர்கள் சமூகத்திலிருந்து தூக்கி எறியப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.
No comments:
Post a Comment