சவுக்கு சங்கரை கைது செய்து "கருத்து சுதந்திரம்" ஒடுக்கப்படுவதாக சொல்கிறார்கள். சவுக்கு சங்கர் பேசுவதெல்லாம் "கருத்தா ", கருதுக்குத்தான் சுதந்திரம் இருக்க முடியும். எதெல்லாம் கருத்தின் கீழே வரும்.
உதாரணம்
1. திமுக அரசு சிறப்பாக ஆட்சி செய்கிறது, பெண்களுக்கு 1000 ரூபாய் ஊக்கத்தொகை உரிமைத்தொகையாக கொடுத்திருக்கிறார்கள், பெண்களுக்கு பேருந்து வசதி, இல்லம் தேடி வரும் மருத்துவம், எளிய வணிகர்களுக்கு service tax நிலுவையில் இருப்பதை தள்ளுபடி செய்தது மக்கள் கொண்டாடும் நூலகங்கள், குழந்தைகளை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் பள்ளிக்கல்வித்துறை, ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் இலக்கிய விழாக்கள், புத்தக கண்காட்சிகள், எழுத்தாளர்களுக்கு விருது, எழுவர் விடுதலை, மோடியிடம் GST பற்றி கேள்வி எழுப்பியது,
பாஜகவை அம்பலப்படுத்தும் அரசியல் இதெல்லாம் பாசிட்டிவ் கருத்து.
2.இப்போது நெகடிவ் கருத்துக்கு வருவோம் நீட் தேர்வு இன்னும் ரத்து செய்யப்படாமல் இருப்பது, ஊர் பகுதிகளில் இருக்கும் மின்வெட்டு. தனியார் பேருந்துகளில் கட்டணக்கொள்ளை. தனியார் கடைகளில் chair போடும் உட்காரும் உரிமை சட்டம் போட்டும் அதை கவனிக்காமல் இருப்பது. இப்படி நெகடிவ் கருத்துக்களும் உண்டு.
இப்படித்தான் இரண்டு விதமான கருத்துக்கள் இருக்க முடியும், மாற்றுக்கருத்து என்பது கூட இப்படி இருந்துவிட்டால் மட்டுமே மாற்றுக்கருத்து. சவுக்கு சங்கர் கருத்துக்கள் எப்படி உள்ளது என்று பார்ப்போம்.
முதலில் நீதிபதி வீடுகளில் இருக்கும் பெண்களைப் பற்றி ஆபாசமாக பேசினார். குறிப்பாக விதவைகள் வேலை செய்யாமலேயே சம்பாதிக்கலாம் , நீதிபதிகளை adjust செய்தால் அனைத்தும் நடக்கும் என்னும் கண்ணோட்டத்தில் கருத்தை தெரிவிக்கிறார்.
அப்படி அங்கு வேலை செய்பவர்கள் சுரண்டப்படுகிறார்கள் என்ற அர்த்தத்தில் கூட இல்லை, காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று கருத்தை முன்வைக்கிறார். உண்மையில் அங்கு யாரோ ஒருவர் இன்னொருவரை சுரண்டலாம், ஆனால் அதை பொதுபடுத்த முடியுமா? இல்லையென்றால் அந்தத்துறையில் இருப்பவர்கள் எல்லாருமே accused ஆகிவிட மாட்டார்களா? குறிப்பு என்னவென்றால்
கிசுகிசு பாணியைத்தாண்டி இவர் கருத்து செல்லவே செல்லாது, இவர் கருத்து எல்லாமே below the belt என்பார்களே அந்த வகையைச் சார்ந்தது. இதன் பெயர் கருத்து அல்ல, அவதூறு.
அவதூறாக பேசும்போது சம்பந்தப்பட்ட நபர் இவர் மேலே வழக்குகளை போடவே செய்யவார்கள் அல்லவா?
அப்போது நீதிபதிகள் இப்போது காவல்துறை பெண்களைச் சொல்கிறார். எனக்குத்தெரிந்து நிறைய அக்காக்கள் காவத்துறையில் வேலை செய்கிறார்கள் பெரும்பாலும் அவர்களுக்கு குடும்பக் கஷ்டங்கள் நிறையவே உண்டு. காவல்துறையில் வேலை பளுவும் இருக்கவே செய்யுமல்லவா? மொத்தமாக அந்தத் துறை பெண்களை அவதூறு பரப்பும் போது அதையெல்லாம் கருத்து என்று எடுத்துக்கொள்ள முடியுமா?
ஸ்வாதி, ராம்குமார் வழக்கை எடுத்துக்கொள்வோம், ராம்குமார் ஜாமினில் வெளிவருவதாய் இருந்தார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக்கூட படவில்லை. ஆனால் சிறைச்சாலையில் wire கடித்து இறந்து போனார் என்று வெளியில் செய்தி வந்தது. அதை நியாயப்படுத்தினார் சவுக்கு, இவரே வீடியோவில் பார்த்ததாகவும் அது ராம் குமார் தான் என்றும் அழுத்தமாக பேசினார். அந்தப் பையன் பட்டியலின பையன். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கவிடாமல் வேறொரு கருத்துருவாக்கம் செய்வது சவுக்கின் வாடிக்கை.
அப்படியே இந்தப்பக்கம் ஒரு பள்ளி மாணவி பிரச்சினையில், அந்தப் பெண் காதலித்திருக்கிறாள் அதுதான் காரணம் என்று கூச்சப்படாமல் பேசினார். அந்தப் பள்ளி நிர்வாகிகள் rss பின்புலத்தில் இருப்பவர்கள். அதெப்படி உலகில் உள்ள அனைத்து விடயங்களும் சவுக்குக்கு தெரிந்துவிடுமா? ஒரு மாணவி கொலை வழக்கில் கூட இவர் கருத்துருவாக்கம் செய்யவேண்டிய தேவை என்ன? போலீஸ் விசாரணை செய்யும் முன் youtube இல் பக்கத்திலிருந்து பார்த்த படியே ஒரு கருத்தை உருவாக்குவதன் நோக்கமென்ன? பள்ளி சவுக்குக்கு நெருக்கம் அதனால் இப்படி ஒரு கருத்தை உருவாக்குகிறார்.
சவுக்கின் "கருத்துக்கள்" எல்லாவற்றையும் ஒற்றைப்புள்ளியில் "அவதூறுகள்" என்று சொல்லலலாம். ராம்குமார் அல்லது அந்த பள்ளி மாணவிகள் அல்லது நீதிபதிகள் அல்லது காவல்துறை இதில் எந்த விடயத்தில் ஆதாரத்துடன் பேசியிருக்கிறார். ஒருவர் மீது குற்றச்சாட்டு வைக்கும் போது ஆதாரம் தேவை இல்லை குற்றத்தை மறுப்பதற்கும் ஆதாரம் தேவை. ஆதாரம் இல்லாமல் வெறும் அவதூறுகள் வதந்திகள் இதைப்பரப்புவது தான் சவுக்கின் வேலை. வதந்திகள் பரப்புவதும் சட்டப்படி தவறு தான் அல்லவா?
அவருடைய வரலாற்று பேட்டியான sterlite விவகாரம், முழுப்பூசணிகாயை சோற்றில் மறைக்கும் வேலையை செய்தார் சவுக்கு. ஊருக்கே தெரியும் அனைவரும் குறிவைத்தே கொல்லப்பட்டார்கள் என்று, ஆனால் சவுக்கு சுடும்போது நடுவில் வந்தார்கள் என்பதைப்போல ஒரு திரைக்கதையை உருவாக்குகிறார்.
அதெப்படி போராட்ட களத்தில் முன்னணியில் இருப்பவர்களை எல்லாம் தேடித்தேடி சுட்டிருக்கிறார்கள்.
அருணா ஜெகதீசன் அறிக்கையில் இதைப்பற்றி எல்லாம் விரிவாக அம்பலப்படுத்தியிருக்கும் போது.
என்னமோ சவுக்கு சங்கரை கேட்டுத்தான் தமிழ்நாடே இயங்கிக்கொண்டிருப்பதைப்போல , அனைத்தையும் பக்கத்திலிருந்து பார்த்ததை போல வாயைத்திறந்தாலே பொய் ,அவதூறு, வதந்தி.
வதந்திகள் மோசமானது இல்லையா? சில வதந்திகள் கலவரங்களுக்குக் கூட காரணமாக இருந்தால், அந்தக் கலவரம் நடந்தபின்பு ஒரு சில உயிர்கள் பறிபோனால் பரவாயில்லையா? வதந்திகள் எப்போதுமே ஆபத்தானது, இவர் habitual offender போலவே தோன்றுகிறார்.
அதைத்தாண்டி அவருக்கு சிறப்பு ஒளிவட்டம் கொடுக்கப்படுகிறது. அரசியல் புரிதல் இல்லாமல் இருக்கும் 15 முதல் 20 வயதிருக்கும் சிறுவர்கள் இவரை role model என்று நினைத்துக்கொண்டு, அதே உடல்மொழியோடு பேசவதைப் பார்த்திருக்கிறேன். ஆதாரமே இல்லையென்றாலும் சப்தமாக "அப்படித்தாங்க பேசுவோம்" என்பதைப்போன்ற உடல் மொழிகள் விடலை இளைஞர்களுக்கு ஆபத்து. விடலைகளுக்கு இயல்பாக சீமான், அண்ணாமலை, சவுக்கு போன்றவர்களை பிடிக்கும் ஒரு லாஜிக் இல்லாத பன்ச் வசனங்கள் அவர்களை ஈர்க்கவே செய்யும் எப்படி விஜய், அஜித்துக்கு இவ்வளவு கூட்டம் கூடுகிறது லாஜிக்கோடு அவர்கள் படம் வந்தால் இளைஞர்களே பார்க்க மாட்டார்கள் அல்லவா? அந்த விடலைகள் தான் இவர்கள் டார்கெட்.
சவுக்கு போன்ற்வர்கள் வதந்திகளை தில்லாக பேச முடியும் , அவர் இளைஞர் ரோல் மாடல் ஆகிவிட்டால் இன்னும் பல சவுக்கு சங்கர்கள் உருவாவார்கள், அதாவது ஆதாரமில்லாமல் வதந்தியை பரப்பும் ஆட்கள் அதிகாமாகிவிடுவார்கள். இவர் ஹீரோ எல்லாம் இல்லை ஊருக்குள் பொய்ச்சொல்லிக்கொண்டு, அமைதியை குலைக்கும் habitual offender, இந்த முறை தவறு என்று இளைஞர் சமூகத்துக்கு தெரியவேண்டும் அதற்காகவாவது தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும்.
கருத்து வேறு, அவதூறு வேறு, திமுகவுக்கு எதிராக அரசியல் களத்தில் பேசும் அதிமுககாரர்களை பாஜக காரர்களை அனைவரையும் இப்படியா கேஸ் போட்டு உள்ளே வைக்கிறார்கள். சவுக்கு சங்கருக்கு மக்கள் செல்வாக்கு கூட கிடையாது அங்கொன்றும் இங்கொன்றும் சில விடலை சிறுவர்கள் அவர் பக்கம் உண்டு அவ்வளவே.
மனித உரிமைகள் மீறி சவுக்கு தாக்கப்பட்டார் என்று செய்திகளை காவல்துறை மறுத்துள்ளது. high profile வழக்கு அதிமுக, பாஜக என்று influence இருக்கும்போது அப்படி எல்லாம் கைவைக்க மாட்டார்கள். அப்படி அவர் காவல்துறையால் தாக்கப்பட்டால் அது தவறு தான் கண்டிக்கத்தக்கது தான். ஆனால் விடயம் தெரியாமல் ஒருபக்கம் கிடைக்கும் செய்திகளை மட்டும் வைத்துவிட்டு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது.
கறுப்பர் கூட்டம் விடயம் நடந்தபோது கைது செய்யவேண்டும் என்று போட்ட மூத்த பத்திரிகையாளர் rk சவுக்குக்காக பேசுகிறார். கருத்து சுதந்திரம் பற்றி பேசுபவர் கரிகாலன் அதை விமர்சித்து ட்வீட் போட்டபோது அவரை பிளாக் செய்கிறார். இவர்கள் கருத்து சுதந்திரத்தின் லட்சணம் இதுதான்.
tribes சேனலே முடக்கப்பட்டபோது சவுக்குக்கு வரிந்து கட்டிக்கொண்டு வரும் மூத்த பத்திரிகையாளர்கள் கருத்து சுதந்திரத்துக்கு ஆதரவாக பேசினார்களா?
பெலிக்ஸ் கிருத்துவராம் தலித்துகளுக்கு மட்டுமே விரோதியிலல்லாமல் ஒட்டுமொத்த சிறுபான்மையனரின் எதிரியாம் திமுக அரசு என்று சொல்கிறார் ஷாலின் மரியா , அவர் டிவீட்க்கு பதில் போட்ட இன்னொரு தோழர் இந்த அடையாளத்துக்குள் ஒளிந்துகொள்ள வேண்டாம் என்று சொல்லிவிட்டு கேள்வி எழுப்பும் கரிகாலன் தோழரே பட்டியலின தோழர் தானே என்கிறார், அதற்கு ஷாலின் கரிகாலன் திமுக ஆள் என்பதுபோல பதில் சொல்கிறார்.
சேலத்தில் விவாசாயிகள் நிலம் கையகப்படுத்தும்போது அங்கு களத்தில் வேலை செய்தவர் தோழர் கரிகாலன். ஆளும் வர்க்கத்துக்கு எதிரான அழுத்தமான குரல் என்பதாலேயே அவர் சேனல் முடக்கப்பட்டது. வெறும் மேடையில் மட்டுமே பேசிவிட்டு ஆளும்வர்க்க குரலாக இருப்பவரல்ல கரிகாலன். ஒரு youtube தனியார் youtube என்றாலும் நேர்மையாக நடத்தி உழைக்கும் மக்கள் பக்கம் நிற்கும் தோழர்.
இவர்களுக்கு தலித், கிருத்துவம் எல்லாம் பிரச்சினை அல்ல, வலதுசாரி கருத்துக்கள் இருப்பவர்கள் என்றால் ஷாலின் மரியா போன்றவர்கள் அவர்கள் பக்கமே நிற்பார்கள். உதாரணம் இளையராஜா மோடியும் அம்பேத்கரும் ஒன்று என்பார். ஆனால் அம்பேத்கர் பக்கம் நிற்க மாட்டார்கள் தலித் அரசியலென்ற போர்வையில் இளையராஜா என்ற ஆளும் வர்க்க மோடியின் பக்கம் நிற்பார்கள். இதை விமர்சித்து கேள்வி கேட்டுவிட்டால் மற்றவர்கள் எல்லாம் தலித் அல்ல, எங்கள் வலி எங்களுக்கே புரியும் என்று உருட்டி அந்த மக்களையும் குழப்பிவிடுவார்கள். சொல்லப்போனால் அம்பேத்கரியர்களுக்கே எதிரியாக இருப்பவர்கள் இவர்கள் தான்.
ஸ்வாதி ராம்குமார் வழக்கில் , ராம்குமார் கொலை செய்தார் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை, ஆனால் படுகொலை செய்யப்பட்டார், அவர் பட்டியலினத்தை சேர்ந்தவர். ஆனால் ஷாலின் போன்றவர்கள் என்ன செய்வார்கள் அவர்களுக்கு எதிராக கருத்துருவாக்கம் வைக்கும் சவுக்கு மற்றும் பெலிக்ஸ் பக்கம் நிற்பார்கள். ஆளும் வர்க்க கருத்துக்களை அம்பேத்கரியம் என்னும் பெயரில் பேசிக்கொண்டிருப்பார்கள்.
சவுக்கு மேலே போலியாக கஞ்சா வழக்கு போடப்பட்டதாக சொல்கிறார்கள். அது இப்போது காவல்துறை கைது செய்யும்போது பிடித்திருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். அதற்கு முன்பே மதன் போன்றவர்கள் அந்தச் சேனலில் எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்தே இந்தக் குற்றசாட்டை வைத்தார்களே, அதற்கு சவுக்கு போன்றவர்கள் பதிலேதும் சொல்லவில்லையே? இத்தனைக்கும் அவர்கள் சேனலிலிருந்தே footage எடுக்கப்பட்டிருக்கிறது, மதன் அவதூறு பரப்புகிறார் இதற்க்கெல்லாம் ஆதாரமில்லை என்று ஒரு மானநஷ்ட வழக்கு போட்டிருக்கலாமே. ஏனென்றால் இது மிகப்பெரிய அவதூறு அல்லவா? அதை ஏன் சவுக்கு செய்யவில்லை. அவர்கள் விடீயோக்களை திருடி எடுத்துவிட்டார்கள் என்றாவது ஒரு வழக்கு போட்டிருக்கலாமே? இவரே ஒரு புலனாய்வு புலி தானே. அதனால் அந்த கஞ்சா வழக்கை எல்லாம் முற்றிலும் புறம் தள்ளிவிட முடியாதென்று நினைக்கிறேன். இருந்தாலும் விசாரணையில் உள்ளது கஞ்சா உண்மையில் வைக்கவில்லை என்றால் நாம் சவுக்கு மீது வைத்திருக்கும் கருத்தை மாற்றிக்கொள்வதில் பிரச்சினை இல்லை ஆனால் அவர் செய்த அவதூறுகளுக்கு அவர் மேலே வழக்கு பதிவு செய்யப்படவே வேண்டும், உப்பை தின்றவர்கள் தண்ணிக்குடிக்க வேண்டுமல்லவா?
No comments:
Post a Comment