Monday, 6 May 2024

குரங்கு பெடல்



ஈரானிய படங்களின் அடையாளமே குழந்தைகள் படங்கள் தான்.  தமிழில் குழந்தைகள் பார்பதற்க்கென்று பிரதியோகமான  படங்கள் வருவதில்லை. குழந்தைகளுக்கு பிடித்த நாயகர்கள் படங்கள் கூட குழந்தைகளுக்காக இருப்பதில்லை. குழந்தைகளுக்கு பிடித்த நாயகன் விஜய் நடித்த கடைசிப்படம் குழந்தைகள் பார்க்கும்படியா இருந்தது.  பாடல்களை திரும்பித்திரும்பி  டிவியில் போட்டால் குழந்தைகளுக்கு பிடிக்கவே செய்யும். டிவியில் எது அதிகம் வருகிறதோ அதுவே குழந்தைகள் மத்தியில் ஸ்டார் ஆக போதுமானது.   விஜய், சிவகார்த்திகேயன் படங்கள் ஏன் குழந்தைகளுக்குப் பிடிக்கின்றன, அவர்கள் நடனம் தொடர்ந்து டிவியில் ஒளிபரப்பப்படுகிறது. அதைத்தாண்டி  அவர்களுக்கான படங்கள், குழந்தை உலகைக்  காட்டக்கூடிய படங்கள் இங்கு வருவதில்லை.

"குரங்கு பெடல்" குழந்தைகள் உலகைக் காட்டக்கூடிய படம் , குழந்தைகளுக்கான படமென்பதால் முக்கியமான படமென்பேன். 80 களில் வாடகை சைக்கிள் வாங்கி சைக்கிள் ஒட்டிப்பழகும் சிறுவர்களின் கதை.. சிறுவர்களுக்குள்  இருக்கும் நட்பு. அன்பெல்லாமே கள்ளம் கபடம் இல்லதாதது,  அதை அழகாக கண்முன் நிறுத்துகிறது இந்தப் படமென்பதில் மாற்றுக்கருத்து இல்லை. 

படம் "Nostolgia " வகையைச் சார்ந்தது. பழைய நினைவுகளைக் கிளறக்கூடிய படமென்கிறார்கள்.  Old is gold  பழையது  என்றாலே சிறப்பானது என்றொரு கருத்தாக்கம் உண்டு. கலை என்ற வடிவில் அந்த Nostolgia வுக்கென்று   தனியான இடமுண்டு.  ஆனால் பழைய நினைவுகலென்பது  அனைவருக்கும் கொண்டாடக்கூடியதாக  இருக்குமா?    

ஊரில்  சாதிய அடுக்கில் மேலே இருக்கும் பார்ப்பனருக்கோ இல்லை அடுத்த படிநிலைகளில் இருக்கும்  ஆதிக்க  சாதி ஆண்ட பரம்பரைக்கோ அந்த Nostolgia சிறப்பாக இருக்கலாம். ஆனால் ஒடுக்கப்படும்   சமூகத்திலிருந்து வந்து இப்போது படித்துமுடித்து நகரத்தில் ஒரு நல்ல சம்பளத்தில் வாழும் மக்களுக்கு ஊரில்  ஒடுக்கப்பட்ட  வாழ்க்கை Nostolgia என்று சொல்வதைவிட அதை நரகம் என்றுதானே சொல்லமுடியும்.

படத்தில் 80 kids என்று பொதுமை படுத்துகிறார்கள்,   ஆனால் 80  கிட்ஸ் எல்லாருக்கும் ஒரே மாதிரி Nostolgia இருக்குமா. வர்க்கத்துக்கு வர்க்கம் , இடத்துக்கு இடம் அது மாறுபடும், பழைய அனைத்தையும் கொண்டாட முடியுமா?  பரபரப்பாக இல்லாமல், விளையாடி, பாலியத்தை  கடந்த ஒரு தலைமுறை என்று காட்டப்படுகிறது. கிணற்றுக்குளியல்,  விளையாட்டு இதெல்லாம் காட்டப்படுகிறது.   இதெல்லாம் ஓரளவு  பணமிருப்பவர்கள்  வீடுகளில் தான். 

நேற்று  எங்கள் ஏரியாவில்  பன்னிரெண்டாம் வகுப்பு   ரிசல்ட் சொல்வதற்காக ஏரியா தம்பி  நம்மைப்  பார்க்க  வந்தார். அண்ணே காலேஜ் ஆகஸ்ட்ல தான் ஆரம்பிப்பாங்களாம், அதுவரை வேலைக்கு சென்று  கல்லூரிக்கு  பணம் கட்ட சேர்க்க வேண்டும் என்று தம்பி சொன்னார். இங்கு கிராமங்களில்   பள்ளி விடுமுறையில்   வேலைக்கு போகும் நிறைய சிறுவர்கள் சிறுமிகள் இப்போதும் உண்டு. அனைவர் வாழ்வும்   கொண்டாடப்படும்படியே  இருக்காது. கொண்டாடும்படி சிலருக்கு இருக்கலாம், அந்தக் கதையைச் சொல்வது  கூட பிரச்சினை அல்ல.  ஆனால் பொதுவாக எண்பதுகளின் சிறுவர்கள் எல்லாருமே இப்படி  இருந்தார்கள் , அந்தக் காலம் என்று ஒன்று இருந்தது அது சுவர்க்கமாய் இருந்தது என்று சொல்வது சரியா?

நம் தமிழ் சினிமா feel good படங்களில் நான் பார்க்கும் பிரச்சினை என்னவென்றால் feelgood என்றாலே பெரும்பாலும்  Nostolgia வுக்குள் நுழைந்துவிடுகிறார்கள். அவர்கள் Nostolgia அவர்களுக்கு சிறப்பாக இருக்குமே தவிர பெரும்பான்மையான ஆட்களுக்கு அப்படியிருக்குமா என்று சொல்லிவிட முடியாது.  அது ஒரு  தனிநபரின் உணர்வு, அதை அப்படியே ஒரு சமூகத்தின் குரலாக சொல்ல முடியாது. சமகாலகட்டத்தில்  மனிதர்களுக்கு  இருக்கும் உறவுகளில் feel good என்ற அம்சமே இல்லையா?

feel good என்றாலே அந்தக் கால friend , அந்தக் கால காதலி, அந்தக் கால டீச்சர், அந்தக் காலத்தில் பக்கத்து வீட்டில்  இருந்தவர்கள் என்று கதை சொல்ல ஆரம்பிக்கிறார்கள். மனசாட்சி தொட்டு சொல்லுங்கள் இருபது வருடம்  கழித்து பார்க்கும் நண்பன் நம்மை அப்படியே ஏற்றுக்கொள்ள மாட்டான், நாமும் அவனை அப்படியே  ஏற்றுக்கொள்ள மாட்டோம். இன்று நம்மறிவு வளர்ந்திருக்கும் அவருக்கும் வளர்ந்திருக்கும். சில நேரம்  நேரெதிர்   கொள்கையாகக் கூட சண்டை போடுபவராக மாறலாம்.

பள்ளி கல்லூரிகளில்  நெருங்கிப்பழகிய பல நண்பர்கள்  கருத்து வேறுபாட்டால் பிரிந்ததுண்டு. மிக நெருங்கிய  நண்பன் ஒருவன் சாதாரண உழைக்கும் மக்களாக இருந்தபோது நன்றாகத்தான் இருந்தான். வெளிநாடு  சென்றவுடன் மோடி பக்தன் ஆகிறான், திடிரென்று ஒரு விவாதத்தில்  மோடிக்கு ஆதரவாக   என்னை பிளாக்  செய்துவிட்டு நகர்ந்தான் நண்பன்.    கல்லூரியில் குறைவாக பேசியவர்கள் அரசியல் ரீதியாக  இன்று நம்மிடம் நெருக்கமாக இருப்பவர்களும் உண்டு.     

பழையதை அப்படியே  கொண்டாட முடியாது, நாமெல்லாம் நிறைய தாண்டி வந்திருப்போம். ஒவ்வொருவருக்கும்  அறிவு மற்றும் பார்வை மாறிக்கொண்டே இருக்கும், வாழ்வில் நிறைய பிரச்சினைகள்  பொருளாதார  நெருக்கடிகள், வாழ்வா சாவா தருணங்கள், நம்பிக்கை துரோகங்கள் , ஏமாற்றம்  அதைத்தாண்டி  சில நட்புகளும் காதலும் நிற்கும் அது மட்டுமே கூட நிற்கக்கூடியது மற்றவை எல்லாம் தலை  தெறித்து   ஓடியிருக்கும், அப்படியிருக்க பழையதை  ஓரளவுக்கு மேலே ரசிக்க முடியாதென்பதே  உண்மை.

சில இடங்களில் nostalgia வேலை  செய்யும், குறிப்பாக காதல் போன்ற உணர்வுகளில், வர்க்கம் அரசியலைத்தாண்டி   அந்தக் காதலி என்ன செய்துகொண்டிருக்கிறாள் என்பதை தெரிந்துகொள்ள  நினைப்போமல்லவா? அப்படி கதைகளும் இருக்கவே செய்யும்.  அந்த மாதிரி கதைகளை சொல்லும்போது  96, ஆட்டோகிராப் போன்ற படங்கள் வெற்றி பெறுகின்றன. ஆனால் அந்தப் பழைய காதலியை வெகுநாட்களுக்கு  பிறகு பார்த்தோமானால், பேசிவிட்டால் அதே ஈர்ப்பு இருக்கவே இருக்காது.  ஏன் என்றால்  காதலைத்தாண்டி  வாழ்வின் எதார்த்த சூழலை இரண்டு பேருமே பார்த்திருப்பார்கள் அதனால்  இதெல்லாம்  பெரிய  விடயமாக  அவர்களுக்குத் தோன்றவே தோன்றாது. 

பழைய  நண்பர்களை நாம் சந்திக்கும் வாய்ப்பு இருந்துகொண்டே இருப்பதைப்போல பழைய காதலியை  சந்திக்கும்  வாய்ப்பு இருப்பதில்லை. அதனால் அந்த ஈர்ப்பு கொஞ்சமிருப்பதால் சந்தையில் காதல் பற்றிய Nostolgia படங்களுக்கு மதிப்பு உண்டு.  சொல்லப்போனால் சமூகமே இறங்கிவந்து நல்ல படமென்று  சொல்லிவிடும். அதுவும் சரி கிடையாது, இப்போது நமக்கொரு அறிவு உள்ளதே அது தான் நிதர்சனம், அது  வளர்ந்துகொண்டே  போகும், சிறு வயதிலிருக்கும் maturity அப்படி இருககாதல்லவா?

மேலும் பொருட்களுக்கான nostalgia கேட்பதற்கு சிறப்பாக இருக்கலாம் ஆனால் நாம் உண்மையில் பழைய பொருட்களை எல்லாம் அப்படியே வைத்திருக்க மாட்டோம். பழையன கழித்தலை போகியாக கொண்டாடக்கூடிய  சமூகம் நம் சமூகம். புதிதாக காலம் மாறும்போது புதிய பொருட்களுக்கு நாம் மாறிக்கொண்டு இருப்போம்  அதுதானே நியாயம். பொருட்களுக்கான செண்டிமெண்ட் குறைந்த நாட்களுக்கு  இருக்கலாம், ஆனால் காலப்போக்கில் அனைத்தையும் நாம் மறந்துவிடுவோம்..

"பண்ணையார் பத்மினியும்  " என்றொரு படமிருந்தது பத்மினி  கார் மற்றும் பண்ணையாருக்கான உறவு. கிராமங்களில்   சொல்வதற்கு எத்தனையோ நுட்பமான விடயங்கள் இருக்கும்போது  பண்ணையாருக்கு கார்  பிரதானமாக  இருந்திருக்கலாம் அது ஒரு குறிப்பிட்ட காலம் மட்டும் தான்.  ஆனால் ஒருவரின் nostalgia என்னும்  பழைய ஊசிப்போன சாப்பாட்டை திரும்பவும் சுடவைத்து சாப்பிடும்போது ரசிகர்கள் thumbs down காட்டுகிறார்கள். அந்த nostalgia மேலே பெரும்பான்மையவர்களுக்கு ஒவ்வாமை இருப்பதைக் காண முடிகிறது.

மனிதருக்கும்  மனிதருக்கும் இருக்கும் கதைகளில் சுவாரசியங்கள் இருக்க, அந்தக் கதையை ஒரு சைக்கிள், ஒரு  பத்மினி கார் என்று வைக்கும்போது  அதே அளவு சுவாரசியம் அந்தக் கதை சொல்பவருக்கு இருப்பதைப்போல   கேட்பவருக்கு இருக்காது . nostalgia என்பது பெரும்பாலும் சொல்பவரின் தனிமனிதக்கதை     

ஓரளவுக்கு மேலே  கேட்பதற்கு சுவாரிஸ்யம் இருக்காது. 

மேலும் "பண்ணையாரும் பத்மினியும்", "குரங்கு பெடல்" இந்தப் படங்கள் பெரும்பாலும் ஒரு குறும்படமாகவோ  இல்லை ஒரு montage பாடலாகவோ வர வேண்டிய content. அந்தக் கதையை இரண்டு மணிநேரம்  சினிமாவாக சொல்லும்பட்சம் ஓரளவுக்கு மேலே கேட்க முடியாது.  

படத்தில் நான் ரசித்த காட்சி ராமாராஜன் ரசிகர் மன்ற போர்டு, பொதுவாக 80 களில் ரஜினி, கமல் மன்றங்கள் மட்டுமே இருந்தது என்பதைப் போன்ற காட்சிகள் வைப்பார்கள். ஆனால்  மன்றங்கள் என்றால் தமிழ்நாட்டில் ரஜினிகாந்த், விஜயகாந்த் மன்றங்கள் தான். அதைத்தாண்டி 87 88 போல் ராமரராஜன் ஒரு பெரிய  ஹீரோ. படத்தில் இந்தியா 1987 இல் உலககோப்பைக்கு தயாராவது ஒரு காட்சியில் 87 என்ற காலகட்டத்தை  உணர்த்துகிறது.  

படத்தில் வரும் கொங்கு மொழி பேசும் சிறுவரக்ள் ரசிக்கும்படி  நடித்துள்ளார்கள். அவர்கள் வாயில் சிறுவாணியின்  மொழி வழிந்தோடுகிறது. பிரசன்னா பாலச்சந்திரன் தோழர், ஜென்சன் திவாகர் தோழர்  சிறப்பாக நடித்துள்ளார்கள்.  கொஞ்சம் இந்த combo சிறப்பாக காமெடி செய்யும் என்று நினைத்திருந்தேன், நன்றாக  நடித்துள்ளார்கள் ஆனால் காமெடி குறைவுதான் என்பது என் கருத்து. 

ஒரு புதுமையான  சினிமா, எளிய மனிதர்களின் வாழ்வை காட்டிய சினிமா என்னும் வகையில் "குரங்கு  பெடல்" நல்ல முயற்சிதான். இன்னும் எளிய மனிதர்கள் பற்றிய கதைகள் நிறைய வரவேண்டும் ஆனால் வெறும்  nostalgia என்று சுருங்கிவிடக்கூடாது. 

குறிப்பு: முதலில் சிறிய படங்களை பார்க்க யாரும் வருவதில்லையே அதனால் படத்தின் மீது விமர்சனம் தேவையா என்று யோசித்தேன்? ஆனால் பத்து பேர், இருபது பேர் வருவதே பெரும் பிரச்சினையாக இருக்கிறதே, படத்தை ஒரு பேசுபொருளாக ஆககுவதற்கு கூட இந்த விமர்சனம் தேவையென்று நினைக்கிறேன்.



No comments: