Thursday, 17 February 2011

ஏழு தலைமுறைகள் -உழைக்கும் மக்களின் வரலாற்று ஆவணம்


"வெள்ளை என்றால் கௌரவம் கறுப்பர் என்றால் இழிவு " என்ற சிந்தனை முறையில் இருப்பவர்கள் நாம் . தொலைக்காட்சி ஊடகங்கள் முதல் சினிமாவில் நடிக்கும் கதாநாயகிகள் வரை இந்த வெள்ளை என்ற நிறவெறி நம்மை அறியாமலேயே நம்முள் குடிகொண்டு இருக்கின்றது . ஒரு குழந்தை பிறந்தால் கூட " நல்ல சிகப்புல " அல்லது " கருப்பா இருக்கே " என்று நம் நிறவெறியை காட்டிவிட்டு எளிதாய் கடந்து போகிறோம் .பெண் பார்க்க போகும் சிலர் "பொண்ணு கருப்பா இருந்துச்சு கலையா தான் இருந்துச்சு ஆனா வேணாம்னு சொல்லிட்டேன் கருப்பா இருக்குல்ல எப்படி கட்ட " என்று சொல்வதை கேட்டு இருக்கிறோம் . இது வெறும் நிறவெறி சார்ந்த பிரச்சனை மட்டுமா ? ஒடுக்கப்பட்ட தரம் தாழ்த்தப்பட்ட வரலாறு . வரலாறுகள் எப்பொழுதுமே வாழ்வில் வெற்றிபெற்றவனையே மையமாய் எடுத்துக்கொள்ளும் . அதற்க்கெல்லாம் சாட்டை அடி கொடுப்பது போல் எழுதப்பட்ட புதினமே "ஏழு தலைமுறைகள் ".

கறுப்பர் என்றால் இழிவல்ல , உலகில் சாலைகள் கட்டியவர்கள் , கட்டிடங்கள் கட்டியவர்கள் ஏன் உலகையே கட்டியவர்கள் அவர்கள் எப்படி ஒடுக்கப்பட்டார்கள் எப்படி அடிமையாய் இருந்தார்கள் , உலகின் வளர்ச்சிக்காய் அவர்கள் சுக துக்கத்தை மட்டும் இழக்கவில்லை , தன் இனத்தையே எப்படி இழந்தார்கள் என்ற வரலாற்று பின்புலத்தில் எழுதப்பட்ட புதினம் அலெக்ஸ் ஹேலி எழுதிய ஏழு தலைமுறைகள் புதினம் ஆங்கிலத்தில் "ரூட்ஸ்" என்று வெளிவந்துள்ளது .


"குண்ட்டா கிண்டே " அவன் பிறப்பில் இருந்து புதினம் தொடங்குகிறது . காம்பியா என்னும் தேசத்தில் ஜப்பூர்
என்னும் ஊரில் குண்ட்டா பிறந்தான் . அவனை எப்படி வளர்த்தார்கள் , அந்த ஊரில் வளர்ப்பு முறை என்ன , சிறுவர்கள் எப்படி பள்ளிக்கு சென்றார்கள் , எப்படி ஆடு மேய்த்தார்கள் , வாலிபர்களுக்கு ஆன பயிற்சி என்ன என்று ஆப்ரிக்காவில் இருக்கும் ஒரு கிராமத்தை கண் முன் நிறுத்துகிறார் ஆசிரியர் . குண்ட்டா வெள்ளை அமெரிக்கர்களால் கடத்தப்பட்டு அமெரிக்கா கொண்டு செல்லப்படுகிறார் .குண்ட்டா போன்ற பல ஆப்ரிக்கர்கள் கடத்தப்படுகிறார்கள் . கப்பலிலே பலர் இறக்கிறார்கள் அங்கு வெள்ளையர்கள் செய்யும் கொடுமை தாங்காமல் . வலியும் ரணமும் பொருந்திய நாட்கள் . கப்பலிலே அறையிலே கட்டிப்போடப்பட்ட குண்ட்டா தன் இனத்தையே
பார்க்கமுடியாது என்று புரிந்து கொண்டு கதறுகிறார் , மனதில் வலி அதிகமாய் உளைச்சலுக்கு உள்ளாகிறார் . கண்களை மூடினால் தன் கிராமம் , தன் தாய் தந்தை தம்பி அனைவரும் கண்ணுக்குள் நீர்களாக வழிகிறார்கள் .அவனை போன்று ஆப்ரிக்காவில் இருந்து பல அடிமைகள் அந்த கப்பலிலே இருந்தார்கள் தன் இனம் அழிக்கப்பட்டு .

அமெரிக்கா வந்தவுடன் ஒரு முதலாளியிடம் விற்கப்படுகிறார் குண்ட்டா , அதற்க்கு பின் அவர் பரம்பரை எப்படி
வாழ்ந்தார்கள் . குண்ட்டா எத்தனை முறை தப்பினார் , எத்தனை முறை மாட்டிக்கொண்டார் , உள் இருந்து கொண்டே
எப்படி போராடினார் .அவருடைய காதல் , வாழ்வு முறை , மகள் , பேரன் என்று தலைமுறை தலைமுறையாக அடிமையாக இருந்தவர்கள் எப்படி விடுதலை ஆனார்கள் என்பதை ஆழ்ந்த வலி மற்றும் மௌனத்துடன் பதிவு செய்கிறது புதினம்.

தன் இனம் வரலாறு தெரியவேண்டும் என்பதற்காய் குண்ட்டா தன் பாட்டன் முப்பாட்டனின் கதைகளை
மகளுக்கு சொல்கிறார் . மகள் தன் மகனுக்கு சொல்ல , இப்படி பரம்பரை பரம்பரையாய் அவர்கள் தன் முன்னோர்களின் வாழ்க்கையை தனது அடுத்த தலைமுறையுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

புதினத்தின் சிறப்பியல்பு என்றால் கடைசி தலைமுறையில் ஆசிரியர் தோன்றுகிறார் , அவரின் மூதாதையரே
குண்ட்டா ? அவரின் கதை கேட்டு குண்ட்டா பிறந்த இடத்திற்கு செல்கிறார் ஆசிரியர் . இடத்தை தேடி கண்டுபிடித்து , அம்மக்களை தன் சொந்த மக்களை பார்க்கும் பொழுது ஏற்ப்படும் சிலிர்ப்பு கண்களை நீர் வரவழைக்கும் காட்சியை கண் முன் கொண்டு வருகிறார் ஆசிரியர் .

புதினம் உண்மையிலேயே எழுத்தாளருக்கு ஏற்ப்பட்ட அனுபவம் என்பதால் அது நெகிழ்ச்சியை வரவழைக்கிறது .
தன் ஏழு தலைமுறைக்கு முன்னாள் வாழ்ந்த உறவுகளை அவர்களின் தற்பொழுதைய தலைமுறையை பார்த்த அனுபவம் மிகவும் உணர்சிகரமானது . இதை வெறும் நெகிழ்ச்சி என்று மட்டும் சிறுமை படுத்த முடியாது , ஒரு சமூகத்தின் எழுச்சி விடுதலை உணர்ச்சி என்று நம் சிந்தனைக்கு அப்பால் உணர்ச்சியின் வீரியம் எங்கோ உயரத்தில் செல்கிறது.

அமெரிக்க என்ற வெள்ளைக்கார டாலர் தேசத்தின் ரோட்கள் என் கறுப்பின மக்களால் போடப்பட்டது .
பொருளாதாரத்தில் அதை வல்லரசாய் மாற்றியது என் கறுப்பின மக்கள் . என்று புதினத்தில் இயல்பாய் அம்மக்கள்
நம் மக்கள் நம் உழைக்கும் மக்கள் என்ற மன எழுச்சி நம் மனதிற்குள் வருகிறது .

கண்டிப்பாய் படிக்க வேண்டிய புத்தகம் என்று சொல்வேன் . படித்து முடித்தவுடன் கழிவுகள் அல்லும் மக்கள் ,
ரோடுகள் போடும் மக்கள் என்று உழைக்கும் மக்களை கவனிக்கும் பொழுது மனது கனக்கத்தான் செய்கிறது.
இப்புதினம் உழைக்கும் மக்களின் வரலாற்று ஆவணம் .

ஆங்கில மூலம் : அலெக்ஸ் ஹேலி


தெலுங்கில் இருந்து தமிழில் : ஏ.ஜி.எத்திராஜீலு

வெளியீடு : சவுத் ஏசியன் புக்ஸ்

விலை : ரூ 50


கிடைக்குமிடம்
****************
கீழைக்காற்று

10,அவுலியா சாகிபு தெரு,

எல்லீசு சாலை,

சென்னை 2.

தொலைபேசி எண் : 044-28412367

No comments: