Monday 23 November 2009

வெட்டப்பட்ட படச்சுருள் - இளமை விகடனில் எனது இரண்டாவது படைப்பு








வெட்டப்பட்ட படச்சுருள்


நான் வசித்த இடம், கவிஞர் அறிவுமதிக்குப் பிறகு நிறைய உதவி இயக்குனர்கள், நாளைய ஒளி ஓவியர்கள், நாளைய திரைப்பட தயாரிப்பாளர்கள் போன்றோர் தங்கியிருக்கும் இடம். இவர்களைத் தவிர, திரைப்படக் கல்லூரி மாணவர்களும் அவ்வப்போது வலம் வருகின்ற சூழல் நிறைந்த பகுதி. உலக சினிமாக்கள், புத்தகங்கள், சுற்றிக் கொண்டிருக்கிற இடம். எஸ்.ராமகிருஷ்ணன், சாரு போன்றவர்களின் குரல் காற்றில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
நிறைய விவாதங்கள்... "இந்த லைட்டிங் சரியில்லை," என்பார் நாளைய ரத்னவேலு.
"காட்சிகள் ஜம்ப் ஆகிறது," என்பார் நாளைய பாக்யராஜ்.இதை எல்லாம் கேட்டுக் கொண்டே நான்கு ருபாய் டீ குடித்துக் கொண்டிருப்பார், நாளைய தயாரிப்பாளரான இன்றைய தயாரிப்பு நிர்வாகி.

ஆம்... திரையுலகம் கனவுத் தொழிற்சாலை, கனவுலகம்.
நட்பின் துரோகம், பணத்தின் துரோகம் ஒரு பக்கம்... ஜெயித்தால் நீ தான் ராஜா, கட்சி கூட ஆரம்பிக்கலாம், தோற்றால்!? என்னைப் பொருத்தவரை, திரையுலகை அற்புதமாய் பதிவு செய்த படம் 'வெள்ளித்திரை'. என் சினிமா நண்பர்கள் அனைவரும், அதில் வரும் பிரகாஷ்ராஜ் போலவே எனக்குத் தெரிகின்றார்கள்.சினிமாவில் இரு வகை மக்கள். ஒன்று... வெள்ளித்திரையின் பிரகாஷ்ராஜ் வகை, மற்றொன்று அதே படத்தின் பிரித்விராஜ் வகை. இருவரும் திரையுலகின் இரு வேறு குறயீடு.

இங்கே ரஜினிகாந்தாக, அஜித்குமாராக, சசிகுமராக கனவு கண்டு வருகிறவர்கள், திரைக்குப் பின்னாலையே தன் வாழ்க்கையை முடித்துக் கொள்வதுண்டு.
ஆம்... திரையில் இருபது வருடமாக கூட இணை இயக்குனர்களாக இருப்பவர்கள் உண்டு. இதைப் பற்றி நீங்களும் பலச் சூழல்களில் கேள்விப்பட்டிருக்கக் கூடும். எனக்கு ஒரு சில நேரடி அனுபவம் உண்டென்பதால் இங்கே குறிப்பிடுகிறேன்.


அத்தகைய தோல்விகளைக் கண்டு மனது வலிக்கத் தான் செய்கிறது. இந்தக் கனவுத் தொழிற்சாலை பலரின் தூக்கங்களை தின்று, சிலரைக் கனவு காண வைக்கிறது. எனக்குத் தெரிந்த நண்பர், பத்து வருடமாக உழைத்து இப்பொழுது தான் ஒரு நல்ல இயக்குனருடன் சேர்ந்திருக்கிறார், உதவி இயக்குனராக. அதற்கு அவர் கொடுத்த விலை 'காதல்'. அவரது காதலியைக் கரம் பிடிக்க முடியாதச் சூழல். இத்தனைக்கும் அந்தப் பெண், அவருடைய சொந்த அத்தை மகள்.

அப்படியே திரைப்படம் எடுக்க வாய்ப்பு கிடைத்தாலும், வணிகச் சுழல் காரணமாக நினைத்ததை எடுக்க முடியாது. தேவை இல்லாத நகைச்சுவைக் காட்சி சேர்க்கச் சொல்வார் தயாரிப்பாளர். பெரிய நடிகர் என்றால் வேலை வாங்குவது சுலபம் அல்ல. படம் முடிந்தாலும் வெளி வருவது ஒரு குழந்தையின் பிரசவம் போன்றது, தாய் இறந்துகூட போகலாம்!

எனினும், மோதிப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் நாளைய பாலா. தான் வேலை பார்த்த கதாநாயகனிடம், 'உங்களுக்கு ஒரு சப்ஜெக்ட் இருக்கு சார்,' என்கிறான்..! புகைப்படத்துடன் சுற்றுகிறான்... கடன் வாங்கியாவது உடம்பு ஏற்றுகிறான். கதாநாயகன் என்ன தான் பிடிக்கவில்லை என்றாலும், நமக்கு வாழ்க்கை பிடித்து இருக்கிறது இல்லையா?

திரையுலகம் தூக்கங்களை நிறுத்தி விட்டு கனவு காணச் சொல்கிறது. சிலரின் வாழ்க்கை படத்தில் வரும் காட்சி போல ஜெயிக்கின்றன. சிலரின் வாழ்க்கை வெட்டப்பட்ட காட்சிகள் போல திரையில் வராமலே போகின்றன.

திரையிலும் சரி நிஜத்திலும் சரி வெட்டப்பட்ட காட்சிகளே அதிகம்.
வெட்டப்பட்ட படச்சுருள் மண்ணிலே மௌனமாய் அழுது கொண்டிருக்கின்றன!
http://youthful.vikatan.com/youth/Nyouth/venniraira21112009.asp>

14 comments:

புலவன் புலிகேசி said...

வாழ்த்துக்கள்....

vasu balaji said...

வெண் திரையின் மறுபுறம் வலிகளால் ஆனது.நன்றாய் புரியவைத்திருக்கிறீர்கள் கார்த்திக். வாழ்த்துகள் .

ப்ரியமுடன் வசந்த் said...

திரைகலைஞர்கள் பற்றிய திரைமறைவு ரகசியங்கள் மிகுந்த துன்பங்கள் நிறைந்ததாக இருக்கிறது...

க.பாலாசி said...

நேற்றே இளமை விகடனில் படித்தேன். மிக நல்ல திரைமறைவு மனிதர்களை பற்றின கட்டுறை....

Unknown said...

அருமையான பதிவு...திரை மறைவு விஷயங்களை அழகாய் பதிவு செய்து உள்ளீர்கள்...

முனைவர் இரா.குணசீலன் said...

இளமை விகடனில் தங்கள் படைப்பு வெளியானதற்கு வாழ்த்துக்கள் நண்பரே..

செ.சரவணக்குமார் said...

உதவி இயக்குநர்களின் வலியை நான் நன்கு அறிவேன். மிக அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள்.

ஊடகன் said...

இளமை விகடனில் தங்கள் படைப்பு வெளியானதற்கு வாழ்த்துக்கள் நண்பரே..

நீங்கள் திரைப்படத்துறையில் முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்களா.............

rajeshkannan said...

வாழ்த்துக்கள் ...............

கலகலப்ரியா said...

வாழ்த்துகள்...!

ஸ்ரீராம். said...

//"திரையுலகம் தூக்கங்களை நிறுத்தி விட்டு கனவு காணச் சொல்கிறது. சிலரின் வாழ்க்கை படத்தில் வரும் காட்சி போல ஜெயிக்கின்றன. சிலரின் வாழ்க்கை வெட்டப்பட்ட காட்சிகள் போல திரையில் வராமலே போகின்றன"//

அருமை.

இன்றைய கவிதை said...

//திரையிலும் சரி நிஜத்திலும் சரி வெட்டப்பட்ட காட்சிகளே அதிகம்.
வெட்டப்பட்ட படச்சுருள் மண்ணிலே மௌனமாய் அழுது கொண்டிருக்கின்றன!
//


உண்மைதான் தோழா!

-கேயார்

ஈரோடு கதிர் said...

அழுத்தமான பகிர்வு

இனியாள் said...

நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.