Wednesday, 4 January 2012

மனுஷ்யபுத்ரனின் வன்மம்

முன் குறிப்பு

நண்பர் இலக்கிய ஆர்வலர்.தனக்கென்று தளம் இல்லாதவர்,சு வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம் நாவலுக்கு கிடைத்த விருதை பற்றி மனுஷியபுத்திரன் உயிர்மையில் எழுதி இருக்கிறார் , அதற்கு நண்பரின் விமர்சனம்.எனக்கும் அக்கருத்துக்களில் உடன்பாடு என்பதால் இங்கே பதிவிடுகிறேன்.

காவல் கோட்டம் என்ற பிரதியை முன்வைத்து உயிர்மை இன் பொருமல் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகையை ரூ.1 கோடியிலிருந்து 2 கோடியாக உயர்த்தி அறிவித்துள்ளார் ஜெயலலிதா. உயிர்மை இன் 101 வது இதழின் தலையங்கத்தை திறந்தால் சாகித்ய அகாதமிக்கு போட்டியாக அதன் பரிசுத் தொகையான ரூ.1 இலட்சத்தை இரண்டாக உயர்த்தி தமிழ் சாகித்ய அகாதமி விருதை நிறுவ அறைகூவல் விடுக்கிறார் ஹமீது என்று அறியப்படும் மனுஷ்யபுத்திரன். ஒலிம்பிக் போட்டியில் ஓடுவதற்கு தயாராகும் வீரனைப் போல இலக்கியப் பிரதியை படைப்பவனுக்கு ஊக்க மருந்து சோதனைகள் ஏதும் நடத்தப்படாது என்ற காரணத்தால் ஒலிம்பிக் உடனான ஒப்பீடு கூட தராதரமில்லாததுதான். ஆனால் என்ன செய்ய முதன் முதலாக எழுத வந்த வெங்கடேசனுக்கு விருதா ? சீனியரான மனுஷ்யபுத்ரனோ அல்லது சூப்பர் சீனியரான அசோக மித்ரன் அல்லது எஸ்ரா வகையறாவோ விருது பெறவில்லை. இவர்களுக்கெல்லாம் சூப்பர் மேனான சுந்தர ராமசாமிக்கு கேவலம் ஒரு ஞானபீட விருது கூட கிடைக்கவில்லை. நேற்று முளைத்த சின்னப் பயலுக்கெல்லாம் விருதா என அங்கலாய்க்கிறார் மனுஷ்ய புத்திரன். கூடவே விருதின் தராதரத்தை நான்கு வகையாக பிரிக்கிறார். தலைசிறந்த எழுத்தாளரின் மோசமான படைப்புக்கு அல்லது மோசமான எழுத்தாளரின் மோசமான படைப்புக்கு அல்லது பிற்காலத்தில் எழுத வாய்ப்புள்ளவர் என்றெல்லாம் கூட கொடுத்து விடுவார்கள் போலும் என்று குமுறுகிறார். இரண்டு லட்சம் ரூபாயில் விருதை ஆரம்பித்து அதை முதலில் தனக்கே கொடுத்து கூட ஆல்பர்ட் நோபல் போல மனுஷ்யபுத்திரனும் ஆரம்பித்து வைக்கலாம். சுரா விருது அவர் இறந்த பிறகுதான் வழங்கப்படுகிறது என்றால் ஏன் ஒரு புதுமைக்காக உயிருடன் இருப்பவர் பெயராலே விருது வழங்கக் கூடாது.? ஏன் இவர்களுக்கு இந்த வனமம். காவல் கோட்டம் என்ற நாவலின் உள்ளடக்கமும் அதன் தவறுகளையும் படைப்பின் சமூக பாத்திரத்திலிருந்து விமர்சனம் செய்வதற்கும், அவர்களே சொல்வது போல மரித்துப் போன படைப்பாளியின் தராதரத்திலிருந்து விமர்சிப்பதற்கும் பாரிய வேறுபாடு இருக்கிறது. முன்னது விமர்சனம் என்றால் பின்னது வன்மம்தான். காவல் கோட்டம் என்பது நாவலின் வடிவத்தில் இல்லை என்று கூட இவர்கள் விமர்சிக்கவில்லை என்பதையும் இந்த கலை கலைக்காகவே கோஷ்டியிடம் நாம் காண முடிகிறது.  தன் நாவலுக்காக பல தரவுகளைப் படித்து, சிலரை நேர்காணல் செய்து அதன் பிறகு தனக்கு உகந்த அரசியல் வழியில் நின்று படைப்பை நிறுவியுள்ளார் சு.வெங்கடேசன். அவரது பிற நூல்களை வைத்து அளவிடுவதுதான் சரி என்றால், உத்தபுரம் விசயத்தில் அவரது களப்பணியும் முக்கியமானதுதான். போலி கம்யூனிஸ்டு கட்சி யாக இருந்தாலும் அதற்கு முழுநேர ஊழியராக இருந்து வேலை செய்யும் வெங்கடேசன் போன்ற அற்ப மனிதர்கள் விருது வாங்குவது வசிஷ்டர்களின் வாயில் வசம்பைச் தடவி குரைக்கச் சொல்கிறது. உழைப்புக்கேற்ற ஊதியத்தை வாங்கும்படி இவர்களுக்கு மார்க்சு போதிக்கவில்லையா ? என்று கேட்கிறார் ஹமீது. எது உழைப்பு ? வருடாவருடன் நடக்கும் சென்னை புத்தக கண்காட்சியும், அதற்காக டிசம்பர் சீசன் கச்சேரி போல சாரு எடுத்த வாந்தியில் பத்து, எஸ்ரா ஊர் ஊராக பொறுக்கியதில் பத்து, பதிவர்கள் என்ற பெயரில் கல்லெறிந்தால் காணாமல் போகும் காகங்களுக்கு ஆளுக்கு மூன்று என்ற விகிதாச்சாரத்தில் புத்தகம் போட்டு, கனிமொழியை ஆட்சி யில் திமுக இருக்கும் வரை ஆதரித்து அதன்வழி நூலக ஆர்டரை கையில் எடுத்து ஆட்சி போன பிறகு மாத்திரமே விமர்சிக்கும் புத்தக வியாபாரியான ஹமீது காரல் மார்க்சு உழைப்புக்கேற்ப ஊதியம் பெறுவதைப் பற்றி சொன்னதைச் சொல்கிறார். பத்ரி ஆ அல்லது மனுஷ்யபுத்ரனா என்ற சந்தை ஓட்டப்பந்தயத்திலும் வெல்ல வேண்டும். பல ஆதினங்களுடன் போட்டியிட்டு சாகித்ய அகாதமி பரிசோ அல்லது ஞானபீடமோ பெற வேண்டும் என நினைக்கிறார் மனுஷ்யபுத்திரன். போதாத குறைக்கு தன்னை முற்போக்காளனாகவும் காட்ட வேண்டி இருக்கிறது. அதற்கு கிடக்கவே கிடக்கிறது போலிகளின் முகத்திரை. ஆனால் ஹமீது காவல் கோட்டத்தின் முகத்திரையை தொடவே இல்லை. அதற்கு முன் அரும்பியிருந்த நூலாம்படையை தனது சாணை தீட்டிய வாளால் வெட்டி வீழ்த்தியுள்ளார். ஜெய் ஹிந்த்.

No comments: