Sunday, 8 January 2012

பிரிவோம் சந்திப்போம் -சிறுகதை

வசந்தி நடக்க ஆரம்பித்தாள். எப்போதுமே இல்லாத அளவுக்கு மனதில் பாரம் அதிகரித்தது. கண்ணாடி அறைக்குள்ளிருந்து கல்லெறிந்து விட்டோமோ என்ற அச்சமும் மனதில் நிழலாடியது. சிவாவிடம் பேசியதில் தான்தான் பேசினோமா ? என்றே தெரியாத அளவுக்கு வேறுபட்ட தொனி தென்பட்டதாக கருதியபடியே நடந்த அவளது சிந்தனையை ஒரு நாயின் குரைப்பு கலைத்தது.
சிவாதான் குழம்பிப் போயிருந்தான். இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இன்றைக்கு ஏன் இவள் முகத்தில் விழித்தோம் என்று கூட நினைக்க ஆரம்பித்தாள். எத்தனையோ முறை சரியாக படிக்க முடியாத முகமாயிற்றே என வியந்த வசந்தியின் முகத்தில் இப்போது விழித்ததற்காக வருந்துவது அவனுக்கே அதிர்ச்சியாகத்தான் இருந்தது.
கால ஓட்டத்தின் சக்கரங்களில் மனிதர்களும் மதிப்பீடுகளும் மாறி அமைவதை இருவரும் அவதானித்தார்களா எனத் தெரியவில்லை. ஒரு ஞாயிற்றுக் கிழமையின் மாலை நேரம் சென்னை புத்தக கண்காட்சியில் இப்படித்தான் துவங்கியது.
எல்லா முன்னாள் காதலர்களைப் போலவும்தான் இவர்களையும் சாதியும் மதமும் பிரித்தது. கொஞ்சம் அந்தஸ்தும் என்பான் சிவா. சிவாவின் பிடிவாதம் என்பாள் வசந்தி. வசந்த காலத்தின் துவக்கத்தில் அரும்பும் காதலில் எத்தனை பேருக்கு காரண காரியங்களைப் பற்றி விவாதிக்க நேரமிருந்தது. சிறுநகரத்தின் காதலர்களுக்கே இருக்க கூடிய கட்டுப்பாடுகளுடன்தான் இருந்தாலும் அவர்களது கல்லூரி காதலும் வளாகத்தின் பேசு பொருளாயிற்று. பிணக்குகளுக்கு பின் ஏற்படும் நெருக்கங்களில்தான் காதலியோ காதலனோ மற்றவர்களுக்கு அழகாக தெரிய வருவார்கள். அப்படித்தான் அவர்களும் அடிக்கடி சச்சரவிட்டார்கள். அவ்வப்போது கூடிக் கொண்டார்கள்.
கல்லூரிக் காலத்தில் ஒருவேளை சேர முடியாவிட்டால் என்றெல்லாம் யோசிக்காமல் முடிவுகளை எடுத்தார்கள். பிள்ளைகளில் ஆணுக்கு என்ன பெயர் பெண்ணுக்கு என்ன பெயர் என்பது வரை வைத்து கேக் வெட்டாத குறைதான். இதில் கூட கேக் வெட்டி கிறிஸ்தவ முறைக்கு மாற்றி உன் வீட்டுப் பக்கம் பிள்ளையை கொண்டு போகிறாயா ? சர்க்கரைப் பொங்கல்தான் வைக்க வேண்டும் என்று வசந்தியிடம் சண்டை பிடிப்பான் சிவா. சிவா பொதுவாகவே கல்லூரியில் அடாவடிப் பேர்வழி என்பதால் சிரித்தே மழுப்பி விட்டு கண்ணால் பேசத் துவங்குவாள் வசந்தி. பிறகென்ன அடாவடித்தனம்.?! எல்லாம் அம்புட்டுத்தான் என்றபடி மகுடிக்கு ஆடும் பாம்பாகி மடிவான் சிவா.
கல்லூரி முடித்த இரண்டாண்டுகளில் வசந்திக்கு வசதியான இடத்தில் திருமணமானது. எப்போதுமே இளந்தாடியுடன் வலம்வரும் சிவா எப்போது ஷேவ் பண்ணிய முகத்துடன் தன் துக்கத்தை கொண்டாட துவங்கினான். திருமணத்திற்கு போன இடத்தில் சிவா திருமணங்கள் சொர்க்கத்தில் அல்ல வர்க்கத்தில்தான் தீர்மானிக்கப்படுகின்றன என்றெல்லாம் எழதிதான் வயிறெரிய வாழ்த்தினான். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சர்ச்சுக்கு போகின்ற வழியொன்றில் இருவரும் சந்திப்பார்கள் என அந்த மனுஷகுமாரனுக்காவது தெரிந்திருக்குமா எனத் தெரியாது. இருவரது முகம், பழக்கவழக்கம், பண்பாடு என எல்லாமுமே மாறினாலும் தெரிந்தவர்களை கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமானதா என்ன ? அதுவும் காதலர்களாகிப் போன பின்னர்.
---
..நீங்க சிவா தானே..
..நீங்க ..
..வசந்தி..
..ஏய்.. ஹய்யோ.. எப்படிமா இருக்க ?..
கேட்டிருக்க கூடாதோ எனத் தோன்றுமளவுக்கு வசந்தியிடம் நீண்ட மவுனமும், கடைசியில் கொஞ்சம் கண்ணீரும்.
..ஏய் இதெல்லாம் உள்ள பாவமன்னிப்பு கேக்கும்போது பண்ணனும் புரிதா.. என வழக்கமான பாணியில் சிவா கலாய்க்கவே தேம்பல் அதிகமானது.
..சிவா .. உனக்கு திருமணம் ஆயிட்டதா..
சிவா மவுனமானான். இப்போது தனது முதிர்ந்த கண்களால் வசந்தி பேசத் துவங்கினாள். ஆனால் சிவா மடியவில்லை. கண்ணீர் எட்டிப் பார்த்த கண்களுடன் மடை திறந்தான்.
..சர்ச்சுக்குள்ள போலாமா.. என்றான் சிவா.
..ம். ஆனா சொல்லு ஏன் பண்ணிக்கல.. என்றபடியே அவனுடன் சர்ச்சுக்குள் நுழைந்தாள் வசந்தி. ஆராதனை முடிந்துவிட்டதால் வீடுதிரும்பும் சிலர் இப்போது உள்ளே நுழையும் இவர்களை அதிசயமாகப் பார்த்தபடி கடந்து போயினர்.
ஓரமாகப் போய் அமர்ந்தவுடன் சிவா ஆரம்பித்தான்.
..அப்போ நான் பக்குவமடையல. இப்பவுந்தான். ஆனா அந்த புராசஸ் முடியாத காரணத்தால னு நெனைக்கேன்..
..பக்குவந்தான் நம்ம படிக்கும்போதேயிருந்து இருந்திட்டுதானே இருக்கு..
..அப்படினு நெனச்சிட்டதாலதான் என்னால பத்து வருசம் கழிச்சும் சுயமா முடிவெடுக்க முடியல..
..கல்யாணம் பண்ணான சாமியாரா ஆயிடலாம் னு பாக்குறயா..
..என்ன வசந்தி.. கிண்டல் பண்ணாத..
..பின்ன என்ன.. தப்பிக்கிறதுக்காக என்ன நெனைக்கிறதா கத சொல்லிட்டு திரியிறியா?..
சிவாவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. உண்மைதானே அது. கதை என்று வேறு சொல்கிறாளே!
சிவா கண்களைத் துடைத்தபடியே
..சரி. அத விடு .. உன் வீட்டுக்கார்ரு உன்ன எப்படி பாத்துக்கிர்றாரு?..
..அவரு எங்க பாக்குறது. வீடாம் வீடு. வருசத்துல ரெண்டு மாசம்தான் சந்திச்சுக்குறோம். கடல் வாழ்க்க அவருக்கு போரடிக்கல போல..
..உனக்கென்னப்பா வசதியான ஆளு..
சிவா சொன்னதுதான் தாமதம்.. வசந்தியின் கண்களில் ஆறு பெருக்கெடுக்கத் துவங்கியது. வெள்ளை அங்கியணிந்த பாதிரியார் ஒருவர் இருவரது அழுகையையும் பார்த்தபடியே வந்து தலையில் கைவைத்து பாவமன்னிப்பு வழங்கத் துவங்கினார். அவர் போகும் வரை காத்திருந்த வசந்தி
..இக்கரைக்கு அக்கரை பச்சை சிவா.. அவரு உன்ன விட ஜாஸ்தி குடிக்காரு. இதில என் மேல சந்தேகம் வேற.. என்றாள்.
சிவாவுக்கு தன்னைப் போலவே அவளும் துன்பப்படுவதை சகிக்கவில்லை. அதே நேரத்தில் தனது துன்பத்தை வெளிக்காட்டவும் கூடாது என்ற வீராப்பும் வேறு அப்போது சேர்ந்து கொண்டது.
..என் கல்யாணத்த கேட்ட.. உன் கல்யாணமே சோகமா இருக்கு. இந்த லச்சணத்துல என்ன வேற கல்யாணம் பண்ண சொல்ற..
..எல்லாருக்கும் ஒரே மாதிரி ஆகாது .. சிலரோட தலையெழுத்து.. என்றபடியே நாக்கை கடித்தாள் வசந்தி. உள்ளுக்குள் சிரித்தபடி சிவா பேச ஆரம்பித்தான்.
..நான் கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லல. ஆனா நான் ஏத்துக்கொண்ட சமூக கடமைகள் முன்னாடியே நாம பேசினத விட நெறைய இருக்கு. அதுக்கு கூட ஒண்ணா வச்சுதான் இத நான் பரிசீலிப்பேன்..
..ஏன் உன் சமூக கடமய கலியாணம் பாதிச்சிருமா ? அதாவது நாங்கதான் ஆண்கள சமூக கடமல இருந்து திச திருப்புறோம். அதத்தானே சொல்ல வர்றே..
வசந்தி இயல்பாக திருப்பினாள். சிவாவுக்கு சுருக்கென்றது. கல்லூரிக் காலத்தில் தான் பேசிய எல்லாவற்றையுமே அரசியல் என்று புரிந்து கொண்ட பேதையல்ல இப்பெண். சொந்த அனுபவத்தில் வளர்ந்திருக்கிறாள் என்பதையும் அப்போதுதான் அவதானிக்கத் துவங்கியிருந்தான் அந்த சமூக கடமையாளன்.
..அம்மாவிடம்.. அதாம்பா என் அத்தைட்ட பேசினாயா ? ..எனக் கிண்டலாக கேட்டாள் வசந்தி.
..இல்ல..
..ஏன் ? அம்மாவோட பாசம் கூட காதல் மாதிரி சமூக கடமய தடுத்திடும்னு பயப்பிடுறியா ?.. என சரமாரியாக கேள்விகளை அடுக்கத் துவங்கினாள்.
..பயம் உன்ன சுத்தி இருக்குது சிவா. நானும் பயப்படத்தான் செய்றேன். எங்கே உன்னப் பாத்தவுடன கடந்த காலத்துக்குள்ள போயி விழுந்திருவேனோனு பட்டுச்சு. அது ஒரு கண நேரந்தான். ஆனா அதையே பத்து வருசமா மூளைல சொமந்து திரியல. அப்பா போன அப்புறம் அம்மா அக்கா வீட்டோட போன அப்புறம் அவரும் கடலுக்கு போயிட்டாரு. எனக்குன்னு வீடு இல்ல. மனுஷ குமாரனுக்கு தலை சாய்க்க இடமில்ல ங்குறப்ப நான் என்ன பெரிசா கிழிச்சிட்டேன்னு சொல்லி சொந்த இடம் கேக்குறது ? எதார்த்தம் எதுவோ அத ஏத்துக்கிட்டு அத எதிர்த்து நீச்சல் போட ஆரம்பிச்சிட்டேன். எனக்கு நீஞ்ச கத்துத் தந்த நீ கரைலயே நின்னுட்ட.. என்றாள்.
..இல்ல வசந்தி .. நானும் எதார்த்தத்த மீறி இல்லியே. அம்மாட்ட அவளோட பிற்போக்கான விசயம் பிடிக்காமத்தான் பேசாம இருக்கேன்..
..ஓ.. இப்போ இது வேறயா ? சரி தெரியாமத்தான் கேக்குறேன். எத்தனவாட்டி நீ ஒன்னோட சமூக வேலையோட அவசியம் பத்தி அத்தைட்ட பேசின. அவங்க அதுக்கு மொகம் சுளிச்சாங்க. ? பின்னாடி பொறந்த ஒவ்வொருத்தருக்கும் சரின்னு படுறத அவங்க சொல்லாமலே முன்னாடி பொறந்தவங்க புரிஞ்சு நடக்க வாழ்க்க ஒன்னும் ஜோசியம் இல்லியே சிவா..
சிவாவுக்கு பொறாமையாக இருந்தது. தனது அரசியலறிவிலோ அறிவியலறிவிலோ பத்து சதவீதம் கூட தேறாதவள்தான் தனது முன்னாள் காதலி என்ற அவனது நினைப்பில் மண் விழத் துவங்கியிருந்தது. இல்லை காற்றேதான் மாறி அடிக்கத் துவங்கியிருந்தது.
விரைவில் திருமணம் செய்ய வேண்டும் சிவா என்றும், அதற்கு தானே முன்னின்று பெண் பார்ப்பதாகவும், அதில் எந்த வர்க்கம் வேண்டும் என்று கிண்டலாகவும் கேட்டு வைத்தாள் வசந்தி.
வசந்தியின் கண்கள் அவ்வப்போது குளமாகியது. அது தனக்காகத்தான் என்று நெக்குருகிப் போனான் சிவா. பாலைவனச் சோலையாக மெரினாவின் சாந்தோம் சர்ச் அன்று சிவாவுக்கு தோன்றியது. மதிய நேரம் நெருங்கியதால் சர்ச் ஐ மூட சாவியுடன் பணியாள் ஒருவர் வந்து இவர்களுக்காக காத்திருந்தார். வெளியே வந்த இருவரும் அருகிலுள்ள ஜூஸ் கடைக்கு சென்றதோ அல்லது வசந்தியை அருகிலுள்ள மயிலை மின்ரயில் நிலையத்தில் வீட்டுக்கு சிவா ஏற்றி விட்டதோ கதை வரம்புக்கு அவசியமில்லாததால் எதுவும் சொல்லாமல் நாமும் கடந்து போகலாம்.
ரயிலின் எதிர்காற்றில் உலரும் கண்ணீரை மீறி வசந்தியின் கண்ணீர் பீறிட்டெழுகிறது. கடைசிவரை சிவாவிடம் மறைத்த தனது டிவோர்ஸ் கதையை மனதில் அழுத்த முடியாமல் அழுத்தியபடியே அழுது தொலைத்தபடி பயணிக்கிறாள். சில ஆயிரம் மைல்களுக்கப்பால் பலான பெண்களுடன் பவனி வரும் அவளது சட்டப்பூர்வ கணவன் வசந்தியின் நடத்தையை சந்தேகப்பட்டுதான் மணவிலக்கு கோரியிருந்தான். அடுத்த வாரம் திங்கள் கிழமை சென்னை நீதிமன்றமொன்றால் அவர்கள் பிரிக்கப்பட இருக்கிறாள். இன்னுமொரு ஞாயிறு இடையில் இருக்கிறது. சிவாவிடம் இதை மறைத்த பாவத்திற்காக அடுத்த ஞாயிறன்று முக்காடிட்ட வசந்தி பாவமன்னிப்பு கோருவாள். பாதிரியும் தண்ணீர் தெளித்து அனைத்தையும் சுத்தமாக்குவார்.
சிவா அடுத்த ஞாயிறும் அங்கு வருவான் என்பதை இப்போதாவது மனுஷகுமாரன் வசந்திக்கு சூசகமாகவாவது தெரிவிக்கலாம் இல்லையா?

பின்குறிப்பு:
இது நண்பர் எழுதிய கதை அவருக்கு வலைப்பூ இல்லாததால் பதிவு செய்கிறேன்

No comments: