Thursday 12 January 2012

ட்ரெயின் டூ பாகிஸ்தான்

1956 இல் நாவலாக வெளியாகி 1998 இல் திரைப்படமாகவும் வந்த இப்படைப்பு பிரிவினைக் கால இந்தியாவின் துயரங்களுக்கு மத்தியில் கடந்து போகிறது. குஷ்வந்த் சிங் இன் இந்த நாவல் 66 ஆண்டுகளுக்குப் பிறகும் தனது தனித்தன்மையால் படிப்பவர்களின் இதயத்திற்கு அருகில் நின்று கேள்விக் கணைகளை தொடுத்துக் கொண்டே இருக்கிறது. நாட்டின் மாபெரும் துயரமும் பல பத்து லட்சம் மக்களை அகதிகளாகவும் மாற்றி, பல்லாயிரக்கணக்கில் மக்களை கொலைக்களனுக்கும் அனுப்பிய மாபெரும் துயரம்தான் பிரிவினை. பிரிவினை என்ற சொல் முன்னுக்கு வந்தவுடனே கலவரம் யாரும் எதிர்பாராத வங்காளத்தின் நவகாளியில் 1946 மத்தியில் துவங்கியது. ஆனால் எல்லைப்புறத்தில் லாகூருக்கும் டெல்லிக்கும் மத்தியில் சட்லெஜ் ஆற்றுக்கு அருகில் அமைந்திருந்த மனோ மஜ்ரா என்ற சிறு கிராமமோ அமைதியின் வாயிலில் தூங்கிக் கொண்டிருக்கிறது. சீக்கிய, முசுலீம் மக்களுக்கு மத்தியில் ஒரே இந்துவாகவும், 80 குடும்பம் உள்ள அக்கிராமத்தின் பணக்காரருமான ராம்லால் சேட் என்ற லேவாதேவிக்காரரும் வசிக்கிறார்கள்.
ஹூகும் சந்த் என்ற உயர் காவல் துறை அதிகாரி அந்த ஊருக்கு அருகில் உள்ள அரசு விருந்தினர் இல்லத்தில் தனது போக்கை மதுவுடனும், தன் மகளது வயதையொத்த பெண்ணுடனும் கழிக்கிறார். ஜமீன்தாரிய உயர் சாதியினைச் சேர்ந்த அவரது பதவி உயர்வுகள் எப்படி நடந்த்து என்பதை பற்றியும், பிரிட்டிஷ் இந்தியாவில் அதற்குள் இருந்த சாதிய, வர்க்க பாசங்களையும் நாவல் பல இடங்களில் சுட்டிக் கடந்து செல்கிறது. மாவட்டத்தின் மற்ற இடங்களில் நடக்கும் கலவரங்களை அடக்க பொறுப்பெடுக்கும் அவர்கள் எல்லா முசுலீம்களையும் இங்கிருந்து பாகிஸ்தானுக்கு பத்திரமாக அனுப்பி விட்டால் தமது கடமை தீர்ந்து விடும் என்ற முடிவுக்கு வந்தடைகின்றனர். அதற்காக எல்லா ஊர்களிலுமுள்ள முசுலீம்களை திரட்டி ஒரு முகாமில் இருக்க வைத்து, பகுதி பகுதியாக ரயிலில் அனுப்ப முடிவு செய்கின்றனர்.
மனொ மஜ்ராவில் ஒரு நள்ளிரவு கேட்கும் துப்பாக்கிச் சூடும் அதற்கு அடுத்த நாள் அங்கு அனுப்ப படும் ராணுவ வீரர்களாலும் மனொ மஜ்ராவின் ஒற்றுமை குலைகிறது. ராம்லால் சேட்டை கொள்ளையிட்ட பின் கொலை செய்த மல்லி என்ற அடுத்த ஊர் கொள்ளையனின் துப்பாக்கிச் சத்தம்தான் அது. உள்ளூர் கொள்ளையன் ஜக்கா சிங் அந்நள்ளிரவில் சட்லெஜ் ஆற்றங்கரையில் தனது முசுலீம் காதலி நூரன் உடன் தனித்து இருக்கிறான். திருந்தி வாழும் அவனை கோழை என்று கேலி செய்யும் பொருட்டு அவனது வீட்டுக்குள் வளையல்களை வீசிச் செல்கிறான் மல்லி. இதனை பார்த்த பிறகும் காதலின் வெற்றிக்காக பொறுமை காக்கும் ஜக்கா மீதுதான் ஊரின் கவனம் திரும்புகிறது. அவனது தந்தையும் திருடி தூக்கிலிடப்பட்டவர் என்பதால் காவல்துறையும் அவனைக் கைது செய்கிறது. அதற்கு உத்தரவிடும் ஹூகும் சிங் கூடவே அந்த ஊருக்கு வரும் காங்கிரசு சோசலிஸ்டான இக்பால் சிங் ஐயும் கைது செய்யுமாறு உத்தரவிட்டு மதக்கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறார். ஊர் இரண்டுபடுகிறது. மல்லி கோஷ்டியினர் கிடைத்த இடங்களில் எல்லாம் வெளியேறும் முசுலீம்களின் சொத்துக்களை சூறையாடுகின்றனர்.
சிறைப்படும் இக்பால் சிங் ஐ ஒரு நடுத்தர வர்க்கத்தினன் என்பதற்காக மரியாதையுடன் நடத்தும் காவல்துறையினர் ஜக்காவை அடித்து துவைக்கின்றனர். ஊரை இரண்டாக்க மல்லி கோஷ்டியை விடுதலை செய்ய உத்தரவிடும் காவல்துறை கடைசியில் இக்பால் சிங் முசுலீமா அல்லது சீக்கியனா என்ற பெயர்க் குழப்பத்தில் இருக்கவே விடுதலை செய்கின்றனர்.
இதற்கிடையில் ஊரிலிருந்த நூரன் தனது கண் தெரியாத வாப்பாவுடன் ஊரை விட்டு வெளியேறுகிறாள். பிரிய மனமில்லாத மனோ மஜ்ராவும் அவளது காதலன் ஜக்காவும் அவளை துயருர செய்கிறார்கள். வெளியேறும் முன்னர் ஜக்காவின் தாயை சந்தித்து தனது மூன்று மாத கர்ப்பத்தையும், ஜக்காவுடனான காதலையும் சொல்லி தன்னை தேடி வரும்படி ஜக்காவிடம் சொல்லச் சொல்கிறாள். விடுதலையாகி வரும் ஜக்கா அவளைத் தேடிச் செல்கிறான். சமூகத்தில் அமைதியை நிலைநாட்ட கட்சியால் பணிக்கப்பட்ட இக்பாலும் மனோ மஜ்ராவுக்கு வருகிறான்.
மல்லி மற்றும் சில தூண்டிவிடப்பட்ட சீக்கியர்கள் அன்று இரவு பாகிஸ்தானுக்கு போக இருக்கும் ரயிலை கவிழ்க்க சதி செய்கின்றனர். இதனை தெரிந்து கொண்டும் ஏதும் செய்ய இயலாதாவனாக இக்பால் தூங்கிப் போகிறான். அதிகாலையில் நடக்க இருக்கும் அச்சதிசெயலை அறிந்த ஜக்கா சிங் இரு மத தலைவர்களிடமும் பாவமன்னிப்பை அவனது மொழியில் கேட்டுவிட்டு தனது உயிரை ஈந்து பாகிஸ்தானை நோக்கி ரயிலை தடையில்லாமல் செல்ல வைக்கிறான். அந்த ரயிலில்தான் மனொ மஜ்ராவின் அகதிகளோடு அவனது காதலி நூரனும் அவனை எதிர்பார்த்து லாகூரை நோக்கி பயணிக்கிறாள். நடுத்தர வர்க்கத்தின் தியரிக்கும் பிராக்டிகலுக்குமான வேறுபாட்டையும் இக்பாலின் இரட்டைத் தன்மையின் வழி குஷ்வந்த் சிங் துகிலுரிக்கும் அதே வேளையில் சோசலிசம் போன்ற சொற்களை கூட கேட்டறியாத ஜக்கா ஏழைத் திருடன் அந்த ஜனங்களை நேசிப்பதன் வாயிலாக தனது உயிரை மாய்க்கிறான். \(தமிழில் தற்போதுதான் மொழிபெயர்க்கப்பட்டு கிழக்கு பதிப்பகத்தின் சார்பில் நாவலாக வெளிவந்துள்ளது. நடுத்தர வர்க்கத்தினரின் செவுளில் அறையும் நாவலின் கருவிற்காக அனைத்து மிடில் கிளாசும் படிக்க வேண்டிய நாவல் இது.)

பின் குறிப்பு :
இது நண்பர் எழுதிய புத்தக விமர்சனம்

No comments: