Sunday, 25 July 2010

நாடு கடத்தப்பட்டவனின் தன் வரலாறு - உபேந்திரநாத்பந்த்யோபபாத்தியாய்

சற்றேக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இளைஞர்களாக வாழ்ந்த உண்மை மனிதர்களின் சுயசரிதை இது. அரவிந்தர் போன்ற தம்முடைய சக தோழர்கள் ஆன்மீகத்திற்கு திரும்பிய பிறகும் பத்திரிகைகளில் எழுதியதன் பயனாகவும் அந்தமான் சிறையின் 12 ஆண்டுகளோடு கூடுதலாக மூன்றாண்டுகள் தண்டனை கிடைக்கப் பெற்றது அவருக்கு.

சிறுவயதில் துறவு, பிறகு ஆசிரியப் பணி, கர்சன் பிரபு வளர்த்தெடுத்த வங்கத்தின் மெய்யான மறுமலர்ச்சியின்பால் ஈர்க்கப்பட்டு ஜூகந்தர் இயக்கத்துடன் இணைந்து கொண்டது, பத்திரிக்கையில் பொறுப்பு எடுத்துக் கொண்டது.. என இந்த கடந்த நூற்றாண்டின் காரியவாதமற்ற இம்மாந்தர்களின் விழுமியங்களை அசைபோட்டால் மனம் கூனிக் குறுகுகிறது.

கதையின் நாயகர்களது மனதில் ரோபோஸ்பியர்களும், ஆனந்தமடத்தின் ஜீவானந்தமும் குடி கொண்டிருந்தார்கள். அதுதான் மேற்தட்டு வகுப்பை சேர்ந்த பாரீந்திரன் போன்றவர்களை பத்திரிகை ஆரம்பிக்கவும், தீவாந்திரம் செல்லவும் பணித்த இக்கனவு அவர்களை பழைய பார்ப்பனீய விழுமியங்களில் இருந்து விடுவித்து இருக்கவில்லை. அதனால்தான் தமது தலைமைக்கு கூட ஜான்சி ராணியின் படையில் 1857 சிப்பாய் கலகத்தில் போரிட்டு துறவியானவரை தேட வைத்தது. அன்று பிரிட்டிஷாரின் அவதூறுப் பிரச்சாரமான அராஜகவாதிகளுக்கு பதிலளிக்கும் முகமாகத்தான் இந்நாவலும் பிறந்தது.
பத்திரிகை மீது அடக்குமுறை வந்தவுடன் வரலாற்று சிறப்பு மிக்க மாணிக்தாலா தோட்டத்திற்கு சில வாழ்க்கையை தேசவிடுதலைக்கு ஒப்புக்கொடுத்த இளைஞர்களுடன் குடியேறி மத பயிற்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்ய முயற்சிக்கிறார்கள். அம்முயற்சியின் ஒரு அங்கம்தான் துறவி தேடி ஆசிரியர் தேவவிரதனோடு ஊர் ஊராக சுற்றிய கதை.

பிறகு வைசிராயை கொல்லும் நோக்கத்தில் நடத்திய குண்டுவெடிப்பு, அரசின் ரசிய நிகிலிஸ்டுகள் பூச்சாண்டி, நேபாள உதாஸி மதப்பிரிவினரின் மத ஏற்பு நடவடிக்கைகளின் எளிமை, 1907 சூரத் காங்கிரசில் காங்கிரசு நடத்திய மிதவாத தீவிரவாத நாடகத்தின் மூலம் செயலுக்கு தயாராக இருந்த இளைஞர்களை செயலின்மைக்கு தள்ளிய அட்டைக்கத்தி தலைவர்கள் பற்றிய பாரீனின் ஆதங்கம், அதற்குள் ஒளிந்திருந்த மராத்திய சித்பவன் பார்ப்பன கும்பலின் அண்டிப்பிழைத்தலை அம்பலப்படுத்தியது, அப்போது உல்லாஸ்கர் தத்தா தலைமையில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டுகள்... என நாவல் இந்தியாவின் 1906 க்குப் பின்னான காலத்தில் விரிகிறது.

பிரிட்டிஷ் நேவிகேசன் கம்பெனிக்க எதிராக வங்கத்தில் இவ்வியக்கம் வளரத் துவங்கிய இக்கால கட்டத்தில்தான் பாரிசார் என்ற இடத்திலிருந்த வியாபாரிகள் அனைவரும் பிரிட்டிஷாருக்கு எதிராக கடல் வணிகத்தை சொந்தமாக துவங்கினர். இதே காலகட்டத்தில்தான் தனது தலைப்பிள்ளையை மரணப்படுக்கையில் விட்டுவிட்டு பம்பாயில் கப்பல் வாங்க அலைந்து கொண்டிருந்தார் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. நாவலின் நாயகர்கள் அறியாத அவரை ஒரு துரோகியை குழப்பமடைய செய்வதற்காக தங்களுடன் இணைத்தும் அவர்கள் கதைப்பார்கள்.

பிறகு முஸபர்பூர் குண்டுவெடிப்பிற்கு பிறகு மாணிக்தலா தோட்டத்தை போலீசு சுற்றிவளைத்து அனைவரையும் கைது செய்கிறது. அரவிந்தரும் கைது செய்யப்படுகிறார். விசாரிக்கும் மாஜிஸ்டிரேட் இளைஞர்களிடம் ’’உங்களால் இந்தியாவை ஆள முடியுமா ? ’’ என்று வினவுவார். ’’நூற்றியைம்பது ஆண்டுகளுக்கு முன் நீங்கள்தான் ஆண்டீர்களா ? அல்லது உங்களை ஆள வரச் சொல்லி நாங்கள் அழைத்தோமா ?’’ என்று அந்த வெள்ளை நீதிபதியிடம் வங்கத்து வேங்கைகள் சீறுவார்கள். இன்று இன்னும் இருநூறு ஆண்டுகளுக்கு எங்களை ஆள வாருங்கள் என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் குழைகிறார் மன்மோகன் சிங்.

உயர்நடுத்தர வர்க்க பிரிவை சேர்ந்த இவர்களுக்கு சிறையில் திருட்டுத்தனமாக தின்பண்டங்களை வீட்டார் வழங்கும்போது, பிற்காலத்தில் பகத்சிங்கின் உற்ற தோழனாக இருந்த ஆசாத் ம், அவரது தோழர்களான அசுவமில்லா கானும் இருந்த அனுசீலன் சமிதி அமைப்பின் தோழர்கள் பழம், பிஸ்கெட் என அத்தோழர்களுக்கு அனுப்பி வைப்பர். சிறையின் எளிய லாப்ஸி உணவு கூட அவ்வர்க்க பின்னணியில் வந்த தோழர்களுக்கு சிறப்பான உணவாக படுகிறது.

விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது நரேன் என்பவன் அப்ரூவர் ஆகிறான். அவனை பாதுகாப்பாக வைப்பதற்கு அரசு மருத்துவமனையை தேர்வு செய்கிறது. இடையில் சத்யேன் என்ற தோழருக்கு சிறை உணவின் போதாமையால் காச நோய் கண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சாவு நிச்சயம் என்று தெரிந்த பிறகும் அந்த வாழ்க்கையை உருப்படியாக செலவழிக்க விரும்பும் சத்யேன் துரோகி நரேனை கொல்வதற்கு கானாயி யின் உதவியை கோருகிறார். வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்கள், தன்னம்பிக்கை இல்லாதவர்கள்தான் போராளி ஆகிறார்கள் எனக் கருதிக் கொண்டிருப்போர் அவசியமாக சத்யேனின் தன் நம்பிக்கையையும், சூழல் நம்பிக்கையற்ற நிலையிலும் பயன்பாடாக மாற்ற முனையும் நம்பிக்கையையும், அதன்வழி போராளிகளின் பாத்திரத்தையும் புரிந்து கொள்ள முயற்சிப்பதுதான் சரியானது.

ஒருவழியாக துரோகியை கானாயி தீர்த்து கட்டுவான். பிஸ்டல் எங்கு கிடைத்தது என்ற கேள்விக்கு அன்று இறந்து போனவராக கருதப்பட்ட வங்கப் புரட்சியாளன் குதிராம் போஸின் ஆவி வந்து தந்ததாக பதில் அளிப்பார் கானாயி. கானாயி க்கு உறுதி செய்யப்படும். 16 பவுண்டு எடை அதிகரிக்க பின்னர் தூக்குமேடைக்கு முகமலர்ச்சியுடன் செல்வான் கானாயி. அவனை தூக்கிலேற்றிய ஐரோப்பிய காவலாளி பாரீனிடம் வந்து இதுபோல இன்னும் எத்தன பசங்க உங்ககிட்ட இருக்காங்க என்று கலக்கத்துடன் கேட்பான். 1909 மே மாதத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு 20 ஆண்டுகள் கழித்து சாண்டர்ஸ் என்ற அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டு பதில் அளிப்பான் பகத் சிங்.

வழக்கு விசாரணையின் போது மதச்சார்பு, மத நம்பிக்கையின் மீதான எள்ளல், இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை இவற்றுக்கிடையில் இளைஞர்கள் சச்சரவில் இறங்குவதும் நடைபெற்றது. முடிவில் உல்லாஸ்கார் மற்றும் பாரீனுக்கு தூக்குத்தண்டனை உள்ளிட்டு 15 பேருக்கு தீவாந்திர தண்டனை உறுதி செய்யப்படும்.
கப்பலில் கீழ்தளம்தான் கைதிகளுக்கு என்ற சட்டதிட்டத்தை எதிர்த்து இவர்கள் துவங்கிய போராட்டம் அடுத்த 12 ஆண்டுகளும் அந்தமான் சிறையிலும் தொடர்ந்தது. அன்றைய அந்தமான் சிறையில் பர்மிய முசுலீம்கள் நிறைய இருந்ததையும், மதராசி பிராமணர்கள் யாரும் இல்லாமல் போனதையும் ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.

கைதிகளின் மனநிலை பாதிக்கப்பட்டவர்களையும் சிகிச்சைக்கு அனுப்பாமல் தீவாந்திரம் அனுப்பியிருந்தது. ஒரு சேர் (பத்து கிலோகிராம்) தேங்காய் நாரை காய்ந்த மட்டையை வெறும் கல்லில் உதிராமல் அடித்து சேர்க்க வேண்டும் ஐரோப்பிய மேட்டுக்குடிகளின் சோபாக்களுக்கு. அல்லது முப்பது பவுண்டு எண்ணெய் எடுக்கும் அளவுக்கு செக்கிழுக்க வேண்டும். இவற்றை புரட்சியாளர்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையில் தமது வழியில் புரட்சி சாத்தியமா என்ற விவாதங்கள் கிளம்பி அதன் கோட்பாடற்ற தன்மையினால் இன அரசியலில் போய் முடியும். கொடுக்கும் வேலையை ஏற்று நடக்கும் இத்தகைய தோழர்களுக்கு நந்தகோபால் என்ற பஞ்சாபிய கைதி வந்துதான் சிறை விதிகளை சுட்டிக்காட்டி மறுக்க கற்றுத் தருவார். இவ்வளவுக்கும் அவர் ஒரு சாத்வீகவாதி.

போராட்டம் துவங்கியவுடன் தனிமை சிறை, அடி என கொடுமைகளுக்கு பஞ்சமே இருக்காது. நல்ல உணவு, உடை, கடுமையான வேலையில் இருந்து விடுதலை என்ற கோரிக்கைக்காக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அந்தமான் கைதிகளின் தியாகத்தில்தான் இன்று சிறையின் சட்டதிட்டம் ஓரளவாவது இருக்கிறது என நினைக்கையில் கண்ணில் நீர் முட்டுகிறது. இடையே உல்லாஸ்கரும் மனநிலை பிறழ்ந்து விடுகிறான். சென்னைக்கு அனுப்பபடுகிறான். போராட்டத்தின் பலனாக விசாரணை கமிசனும் போடப்படுகிறது.

முதல் உலகப் போர் துவங்குகிறது. எண்ணெய் ஏற்றுமதி தடைபடுவதால் உற்பத்தி அந்தமானில் தேங்குகிறது. தோல்வி பயமும் அவர்களை பயமுறுத்துகிறது. எம்டன் கப்பலின் குண்டுவீச்சும், ரசிய சோசலிச புரட்சியும் அவர்களை நிலைகுலைய வைக்கிறது. கைதிகளுக்கோ ஜெர்மனியை எதிர்த்து கருத்து சொல்லி தப்பிக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது. அதற்காக ஜெயில் சூப்பிரண்டு ஜெர்மனிக்கும் அளிக்கும் சாபத்தை கூட (ஜெர்மனி செத்த பிறகு நிச்சயம் நரகத்திற்குதான் செல்லும், தேவலோகத்தில் இங்கிலாந்துக்கு அருகில் அது இடம்பெற வாய்ப்பே இல்லை) அவர்கள் பொறுத்துக் கொள்கிறார்கள்.

யுத்தகாலத்தில் அரசின் செலவினங்களை குறைப்பதற்காக மிகுந்த பிரயாசைப்படும் அவர் ஆறு மாதம் முன்னரே விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கையில் அனுமதி மறுக்கப்படும். தன்னை அராஜகவாதி என அறிவித்துக் கொண்டு சிம்லாவின் கடவுள்களை திருத்த முடியாது என்றும் கூறுவார். பிறகு வந்த மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்திருத்தத்திற்காக அரசை பாராட்டவும் அவர் தவறவில்லை. நடுத்தர வர்க்கத்தின் இவ்வகை மாதிரிகளை இன்று கூட நீங்கள் நடைபாதையில் அலுவலகங்களில் கண்டு களிக்கலாம்.

கதர் கட்சி தோழர்களின் தீவாந்திரமும் இவர்களோடுதான் ஒருசேர நிகழ்ந்தது. வரலாற்றின் பாடங்கள் எதனையும் முன்னே வைத்திருக்க தெரியாமல் இந்திய கடல் எல்லைக்குள் மாயனத்திற்கு அனுப்பப்பட்ட கனடா வாழ் இந்திய குறிப்பாக சீக்கிய பட்டாணிய மக்களின் அர்ப்பணிப்பும், வரலாற்றுப் பாடத்தை கற்காமல் கீதா உபதேசத்திற்கு அலைந்ததோடல்லாமல் இரகசிய இயக்கம் கட்ட முடியாமலும் தோற்ற இவ்வங்க இளைஞர்களுக்கு 1967 ல் நக்சல்பாரி கிராமத்திலிருந்து எளிய பழங்குடியின மக்கள் தமது வில், அம்பு மற்றும் கோடாரிகளால் பதில் சொன்னார்கள். ஆம் உழுபவனுக்கு நிலம், உழைப்பவனுக்கு அதிகாரம். இதை தடுக்க வரும் மத்திய மாநில அரசுகளை விரட்டியடிப்போம்.வெளியீடு ; பல்கலை பதிப்பகம், 25 தெற்கு சிவன் கோவில் தெரு, கோடம்பாக்கம், சென்னை 24
விலை; ரூ. 45
மொழிபெயர்ப்பு; சு. கிருஷ்ணமூர்த்தி


கட்டுரை : முருகன்

பின்குறிப்பு :
நண்பர் ஒருவருக்கு வலைபூ இல்லை , இலக்கிய பரிச்சியமும் வரலாறும் நன்கு தெரிந்தவர் , இதை என் வலைப்பூவில் போடும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க போட்டுளேன் .அந்த கட்டுரையை படித்த பொழுது , அக்கால பகத் ஆசாத் எப்படி இருந்தனர் ,காலனி ஆதிக்கத்தை எதிர்த்து எப்படி போராடினர் .இக்கால இளைஞன் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை ஒப்பிடும் பொழுது கூனி குறுக வேண்டியதாய் இருக்கிறது . இன்று போபால் விட வாயு சம்பவம் நடந்ததற்கு நாம் குரல் கொடுப்பதாய் இல்லை . தண்டக்காரன்யாவில் பிரச்சனை என்றால், நாம் குரல் கொடுக்காமல் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று கூட தெரியமால் ஊடகங்கள் சொல்வதை நாமும் சொல்லிக்கொண்டே இருக்கிறோம் , அப்படிப்பட்ட சூழலில் இந்த புத்தக மதிப்புரை தேவை என்றே நினைக்கிறேன் . நன்றி நண்பர்களே முடிந்தால் புத்தகத்தை வாங்கிவிட்டு படிப்போம் .

No comments: